Ad

புதன், 22 செப்டம்பர், 2021

AKS - 23 | Certified இந்திய கணவனுக்கான தகுதிகள் என்னென்ன?!

சிவா அடிப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் விஷயத்தைக் கேட்டு பரத் பதற்றத்துடன் அங்கு வருகிறான். சிவா மிக மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவர் சொல்வதைக் கேட்ட பரத், காயத்ரியிடம் ‘’உனக்கு இவ்வளவு வன்மம் எதற்கு, இதுதான் உன் கிராமத்து வளர்ப்பா?” என்று கேட்கிறான். மேலும் அவளை அங்கே இருக்கக்கூடாது என்று வெளியே போகச் சொல்கிறான். காயத்ரி வீட்டுக்கு செல்லாமல் கோயிலுக்குச் சென்று சிவாவுக்கு சீக்கிரம் குணமாக வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறாள். அப்போது போனில் சுந்தரின் அழைப்பு வரவே காயத்ரி அதை ஏற்காமல் துண்டிக்கிறாள்.

ஒருமுறை அழைத்து அவள் துண்டித்ததற்கே சுந்தருக்கு காயத்ரியின் மீது கோபம் வருகிறது. அலுவலகத்தில் காயத்ரிக்கு போனில் பேச முடியாத சூழ்நிலை இருந்திருக்கலாம் என்கிற அடிப்படை புரிதல்கூட இல்லாததற்கு காரணம் சுந்தர் அவளை தன்னுடைய உடைமையாக, சாவி கொடுத்தால் தலையாட்டும் பொம்மையாக மட்டுமே பார்க்கிறான். சுந்தர் ஒரு Certified Indian Husband-டுக்கான எல்லா தகுதிகளுடன் இருக்கிறான். மனைவியாக வரவிருக்கும் பெண் அழகாக இருக்க வேண்டும், சமைக்கவும், வீட்டில் மற்ற வேலைகளும் தெரிந்திருக்க வேண்டும், படித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், வேலைக்கு செல்லக்கூடாது, குழந்தைகள் பெற்றுக்கொண்டு வீட்டில் சமையல், பூஜை, கணவனுக்கு ‘பணிவிடை’ என்றிருக்க வேண்டும்.

AKS - 23 | ஆதலினால் காதல் செய்வீர்

இவ்வளவு ‘வேண்டும்’களோடு பெண் வேண்டும். ஆனால், அவள் தனக்கென உள்ள வாழ்வைப் பற்றி சிந்திக்கவோ, எதிர்பார்ப்புகள் வைத்துக் கொள்ளவோ கூடாது. இன்று நம் நாட்டில் பெரும்பாலான நடுத்தர குடும்பங்களில் வெளியே தெரியாவிட்டாலும் பெண்கள் எப்போதும் மன உளைச்சலில் இருப்பதற்கும், பெரிய பிரச்னைகள் இல்லாவிட்டாலும் விவாகரத்துவரை செல்வதற்கும் சமூகத்தால் ‘நல்ல பிள்ளை’ என்று சான்றிதழ் கொடுக்கும் சுந்தரை போன்ற ஆண்கள்தான் காரணம்.

சுந்தர் தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் காயத்ரியிடம் தினமும் பேசுகிறானா என அவனது சித்தப்பா கேட்கிறார். சுந்தர் ”நான் மட்டுமே பேசுகிறேன், பதிலுக்கு காயத்ரி எதுவும் சொல்வதில்லை” என்கிறான். ‘’காயத்ரிக்கு கூச்ச சுபாவம். அதனால் சகஜமாக பேசவில்லை’’ என்று சுந்தரின் அக்கா சொல்கிறார். அதற்கு சுந்தரின் சித்தப்பா, “இந்த காலத்தில் இப்படி ஒரு பெண் கிடைப்பது சிரமம், அதற்காக சந்தோஷப்படு” என்கிறார்.

அதாவது திருமணத்துக்கு முன்பு இருவரும் பேசிப்பழக சில நாட்கள் இருக்கின்றன. அதிலும் மாப்பிள்ளையுடன் பெண் பேசவில்லை என்றால், அந்தப் பெண் ’அமைதியான, கூச்ச சுபாவமுள்ள, குடும்பப்பாங்கான பெண்’ அதனால்தான் பேசவில்லை என்று தாமாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

AKS - 23 | ஆதலினால் காதல் செய்வீர்

”இப்போதே எல்லாம் பேசிவிட்டால் திருமணத்துக்குப் பிறகு என்ன பேசுவீர்கள்?” என்று சுந்தரின் சித்தப்பா கேட்கிறார். அப்போதே பேசிப் புரிந்து கொள்ளாவிட்டால் திருமணத்துக்குப் பிறகு சண்டை மட்டும்தான் போட வேண்டும் என்பதுதான் நிஜ வாழ்க்கையின் நிதர்சனம்.

காயத்ரியை கண்டால் பரத்தும், சிவாவும் கோபப்படலாம் என்பதால் புனிதா அவளை மருத்துவமனைக்கு வரவேண்டாம் என்கிறாள். காயத்ரி வீட்டுக்கு செல்கிறாள். காயத்ரியை பார்த்ததும் கவிதா கோபமாக திட்டுகிறாள். காயத்ரி கவிதாவிடம் அவர்கள் சிவாவை அடிக்கும்போது தான் சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்ததை ஒப்புக்கொள்கிறாள். ஆனால், அதன்பிறகுதான் தான் நடந்தவற்றை உணர்ந்ததாகவும் சொல்கிறாள்.

காயத்ரியிடம் பாண்டியன் கேட்கும் கேள்வி மிக முக்கியமானது. ”ஏதோ Soft nature பெண்ணாக தினமும் பூஜை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று நினைத்தால், இவ்வளவு கொடூரமான புத்தி உங்களுக்குள் இருந்திருக்கிறது” என்று கேட்கிறான். கடவுளின் மேல் அதிக பக்தி இருப்பவர்கள்தான் அதே கடவுளிடம் சென்று இன்னொருவர் கெட்டுப்போக வேண்டும் என வேண்டிக் கொள்வதையும் காண்கிறோம். கோயிலில் மிளகாய் அரைத்து பூசுவது, காசு வெட்டிப் போடுவது போன்ற காரியங்களை செய்பவர்களும் கடவுள் மீது பக்தி உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

ஒருமுறை காயத்ரி பூஜை செய்ய சிவாவின் ஆடியோ சிஸ்டத்தின் சத்தம் இடைஞ்சலாக இருப்பதால் அவனை நாகரிகம் தெரியவில்லை என்று சொல்லியிருப்பாள். ஆனால் காயத்ரி ஒருவன் உயிருக்கு போராடும்போதுகூட கண்டுகொள்ளாமல் போகும் கல்நெஞ்சம் உடையவளாக இருக்கிறாள். காயத்ரியின் கடவுள் நம்பிக்கையும், பூஜையும் அவளை ஒரு மனிதராக பண்படுத்தவில்லை அல்லவா?

இவ்வளவுக்குப் பிறகும்கூட தான் லிஃப்ட்டின் கதவை மூடும்போது தன்னைப் பற்றி சிவா என்ன நினைத்திருப்பான் என்று புனிதாவிடம் சொல்கிறாள் காயத்ரி. காயத்ரி ஆரம்பத்திலிருந்தே தன்னைப் பற்றி மட்டுமே யோசிக்கிறாள். இதைத்தான் சுந்தரும், காயத்ரியிடம் செய்கிறான். தன்னைபற்றி தன் குடும்பத்தில் இருப்பவர்கள் பெருமையாக பேசியது எதுவும் தனக்கு பொருந்தாது என்று காயத்ரி உணர்ந்து கொள்கிறாள். காயத்ரி தன்னைப் பற்றி உணர ஆரம்பித்திருக்கிறாள். சென்னையை விட்டு செல்வதற்குள் காயத்ரி வாழ்க்கையைப் பற்றிய அடிப்படை புரிதலுக்கு வந்துவிடுவாள் என்று நம்பலாம்.

காயத்ரியின் இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் அவள் ஆரம்பத்திலிருந்தே சிவாவை முன்முடிவுகளுடன் (Judgemental) அணுகியது. மற்றவர்கள் என்ன சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்று தெரியாமல் அவர்களின் வெளிதோற்றத்தை வைத்து மட்டும் எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. சிவாவின் சிறுவயது பிரச்னைகள் மற்றும் தனிமை அவனை மற்றவர்களிடம் இருந்து விலகி இருக்கும்படி பழக்கப்படுத்தி இருக்கிறது. பெரும்பாலும் தனிமையில் இருப்பவர்களை கண்டு அவர்கள் அவ்வாறு இருக்க விரும்புவதாக சுற்றியிருப்பவர்கள் நினைத்துக் கொள்வார்கள். ஆனால், உண்மையில் தனியாக இருக்கும் எல்லோரும் தனிமை விரும்பிகள் அல்ல. அவர்களில் பலரும் மற்றவர்களிடம் அன்புக்கு ஏங்குபவர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்கள் வாழ்வில் நடந்த ஏதோ ஒரு சம்பவம் அவர்களை மனிதர்களிடம் நெருங்கவிடாமல் செய்வதாக இருக்கலாம்.

AKS - 23 | ஆதலினால் காதல் செய்வீர்

சரி, தவறுகள் அவரவர் இடத்தில் இருந்து மாறுபடும் என்று புனிதா சொல்லும்போது எல்லாம் புரிந்தது போல் தலை ஆட்டும் காயத்ரி புனிதா மது அருந்தும்போது பதறுகிறாள். பெண்கள் குடிப்பது தவறான காரியம் எனப் பேசுகிறாள்.

‘’ஆண்களும், பெண்களும் சமம் அல்ல, அப்படி சமம் என்று காட்டுவதற்காக பெண்கள் முடிவெட்டிக் கொள்வது, ஆண்களைப் போல் உடுத்திக் கொள்வது, குடிப்பது எல்லாம் தவறு’’ என்கிற கண்ணோட்டம் நம் பொது சமூகத்தில் இருக்கிறது. குடிப்பது தவறு என்றால் அது ஆண், பெண் யார் செய்தாலும் தவறுதான். ஆனால், அரசாங்கமே மது விற்கும் ஊரில் குடிப்பது தவறு என்பதை பற்றி பேச முடியாது. போதைக்கு ஆண், பெண் பேதம் எல்லாம் இல்லை. யாராக இருந்தாலும் போதை பழக்கம் அளவுக்கு மீறினால் அது நஞ்சுதான். மற்றபடி பெண்கள் மது அருந்துவது சாதாரண விஷயம் என்பதை சங்கப் பாடல்களில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

சிவாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாகவும் நடப்பதற்கு பல நாட்கள் ஆகும் என்றும் மருத்துவர் கூறியதாக புனிதா காயத்ரியிடம் சொல்கிறாள். நடக்க முடியாமல் இருக்கும் சிவாவை யாராவது பார்த்துக் கொள்ள வேண்டும். காயத்ரி சிவாவை பார்த்துக் கொள்வாளா? சிவா காயத்ரியை காண சம்மதிப்பானா?

காத்திருப்போம்!


source https://cinema.vikatan.com/television/vikatans-aadhalinal-kaadhal-seiveer-digital-series-episode-23-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக