பேராவூரணியில் வங்கி ஒன்றில் அடகு வைத்த நகையை திருப்புவதற்காக விவசாயி ஒருவர் ரூ. 2 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு வங்கிக்கு சென்றிருக்கிறார். டூ-வீலரில் சீட்டுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த பணம் வண்டியை நிறுத்தி விட்டு வங்கிக்குள் சென்று வரக்கூடிய சில நிமிடங்களில் மர்ம நபர்களால் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுதியுள்ளது.
பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் திருவநாவுக்கரசு. விவசாயியான இவர் நேற்றுமுந்தினம் மதியம் பேராவூரணியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் அடகு வைத்திருந்த நகையை திருப்புவதற்காக ரூ. 2 லட்சம் பணத்தை எடுத்து சென்ற நிலையில், வங்கிக்குள் சென்று வருவதற்குள் ஸ்கூட்டி பெப் வாகனத்தில் சீட்டுக்கு அடியில் வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று திருநாவுக்கரசு புகார் கொடுத்துள்ளார். மேலும் பணம் திருடுவது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் உள்ள நிலையில் போலீஸ் நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டுவதாக திருநாவுக்கரசு தரப்பில் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து திருநாவுக்கரசுவிடம் பேசினோம், `எங்க வீட்டுல நடந்த சுப நிகழ்ச்சியில் உறவினர்கள் வைத்த மொய் பணம் ரூ.2 லட்சத்தை எடுத்து கொண்டு பேராவூரணியில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் அடகு வைத்திருந்த நகையை திருப்புவதற்காக சென்றேன். வங்கிக்கு சென்றதும் நான்கு கட்டுகளாக இருந்த பணத்தை கையிலே எடுத்து கொண்டு வங்கிக்குள் சென்றேன்.
வங்கி நிர்வாகத்தில் ஆடிட் நடப்பதால் உடனடியாக நகையை திருப்ப முடியாது அடுத்த நாள் வாங்கனு கூறிவிட்டனர். இதையடுத்து வெளியே வந்த நான் பணத்தை என்னுடைய வண்டியில் சீட்டுக்கு அடியில் வைத்து லாக் செய்து விட்டு எனது நண்பருடன் கிளம்பிவிட்டேன். சிறிது தூரத்தில் உள்ள் டீக்கடையில் டீ குடிச்சுட்டு நகை திருப்புவது தொடர்பாக ஏற்பட்ட சந்தேகம் ஒன்றை கேட்பதற்காக மீண்டும் வங்கிக்கு சென்று டூ வீலரை முன் பகுதியில் நிறுத்தி விட்டு உள்ளே சென்று விட்டு ஐந்து நிமிடத்தில் வந்து விட்டேன்.
இதையடுத்து வீட்டுக்கு வந்து பார்த்தால் பணத்தினை காணவில்லை. அதிர்ச்சியடைந்த நான் உடனடியாக காவல் நிலையத்திற்கு ஓடி சென்று பணம் திருடப்பட்டது குறித்து புகார் கொடுத்தேன். வங்கி மற்றும் அதன் அருகே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வாங்கி பார்த்தேன். டூ-வீலரில் பணம் வைத்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நான் உள்ளே சென்றதும் சீட்டின் லாக்கை உடைத்து பணத்தை திருடி கொண்டு சென்றுள்ளனர்.
மூன்று பேர் இந்த சம்பவத்தினை செய்துள்ளதாக தெரிகிறது. ஒருவன் சிசிடிவி கேமராவை மறைத்தப்படி நிற்கிறான். ஒருவன் வங்கியில் இருக்கும் செக்யூரிட்டியின் கவனத்தை திசை திருப்பியபடி பேசிக் கொண்டிருக்கிறான். மற்றொருவன் டூவீலரின் லாக்கை உடைத்து சீட்டுக்கு அடியில் வைத்திருந்த பணத்தை எடுக்கிறான். சில நிமிடங்களில் பணத்தை திருடி கொண்டு அந்த இடத்திலிருந்து அந்த நபர்கள் கிளம்பி சென்று விட்டனர்.
போலீஸ்கிட்ட இது தொடர்பாக புகார் அளித்தேன் அது சரியில்லை, இது சரியில்லைனு ஐந்து முறை புகார் வாங்கி கொண்டனர். மனு ரசீது கேட்டேன் தரவில்லை. விசாரிப்பதற்காக பட்டுக்கோட்டையிலிருந்து தனிப்படை வருவதாக தெரிவித்தனர். ஆனால் இதுவரை விசாரணை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டுகின்றனர். பணம் திருடப்பட்டு 30 மணி நேரத்திற்கு மேல ஆச்சு சிசிடிவி காட்சிகள் இருந்தும் போலீஸ் கண்டுபிடிக்கவில்லை” என்றார்.
Also Read: கார் திருட்டு; சேஸிங்; `சைலேந்திரபாபு சார் 3 முறை போனில் பாராட்டிப் பேசினார்!’ - நெகிழ்ந்த காவலர்
பட்டுக்கோட்டை டி.எஸ்.பி செங்கமலக்கண்ணனிடம் பேசினோம், ``சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முகம் தெளிவாக தெரியவில்லை. துரிதமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
source https://www.vikatan.com/news/crime/theft-in-front-of-bank-from-a-farmer-shocked-every-one
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக