புள்ளிப்பட்டியலில் உச்சத்தில் இருக்கும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கும் அடிவாரத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையேயான போட்டி நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த போட்டியை டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
போட்டி தொடங்குவதற்கு முன்பான நிகழ்ச்சியில் கவாஸ்கரும் கெவின் பீட்டர்சனும் பேசிக்கொண்டிருந்த போது...
என நகைச்சுவையாக பேசினார். அவர் சொன்னது அப்படியே நடந்தது. சன்ரைசர்ஸ் அணியை ஊதி தள்ளியிருக்கிறது டெல்லி கேபிட்டல்ஸ்.
சன் ரைசர்ஸ் முதல் பாதியில் 7 போட்டிகளில் ஆடி 6-ல் தோற்றிருந்தது. அணியில் ஏகப்பட்ட குழப்பங்கள். கேப்டனாக இருந்த வார்னரே டிராப் செய்யப்பட்டு WATER BOY - ஆக்கப்பட்டிருந்தார். புள்ளிப்பட்டியலிலும் கடைசி இடமே கிடைத்திருந்தது. இடையில் கிடைக்கப்பெற்ற நான்கைந்து மாத இடைவெளி சன் ரைசர்ஸ் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள உதவியிருக்கும், இரண்டாம் பாதியை புத்துணர்ச்சியோடு தொடங்குவார்கள் என எதிர்பார்த்த நிலையில் கொரோனாவோடு தொடங்கினார்கள் சன் ரைசர்ஸ்.
நடராஜனுக்கு கொரோனா, அவரோடு தொடர்பில் இருந்த விஜய் சங்கர் உட்பட சன்ரைசர்ஸ் அணியின் சில வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்கிற செய்தி வெளியானது.
வீரர்கள் தொற்றுக்குள்ளானதால் இந்த போட்டியே நடைபெறுமா எனும் சந்தேகம் எழுந்தது. ஆனால், போட்டியை நடத்தியே தீருவதில் பிசிசிஐ உறுதியாக இருந்ததால் போட்டி தொடங்கியது. டாஸை வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பேர்ஸ்ட்டோ இல்லாததால், டிராப் செய்யப்பட்டிருந்த முன்னாள் கேப்டன் வார்னருக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அணியில் இடம் கிடைத்திருந்தது. வார்னரும் விருத்திமான் சஹாவும் ஓப்பனர்களாக களமிறங்கினர்.
டெல்லி அணியின் பந்துவீச்சு மொத்தமுமே ஃபாஸ்ட் ஃபார்வர்ட் முறையிலேயே இருந்தது. நார்க்கியா வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு பந்துகள் 150 கி.மீ வேகத்தை தாண்டியிருந்தது. மற்ற நான்கு பந்துகளும் 145-150 கி.மீக்குள் சீராக வீசப்பட்டிருந்தது. இந்த வேகம்தான் சன்ரைசர்ஸை நிலைகுலைய வைத்தது. நார்க்கியா வீசிய இந்த முதல் ஓவரிலேயே டேவிட் வார்னர் எட்ஜ் ஆகி அக்ஸர் பட்டேலிடம் கேட்ச் ஆனார். ஸ்டம்ப் லைனில் ஷாட் ஆடுவதற்கு இடமே கொடுக்காமல் 145 ப்ளஸ் வேகத்தில் முதல் பந்தை ஃபுல் லென்த்திலும் இரண்டாவது பந்தை குட் லென்த்திலும் மூன்றாவது பந்தை ஷார்ட்டாகவும் வீசியிருந்தார் நார்க்கியா. அந்த வேகம் மற்றும் இந்த லென்த் வேரியேஷனில் அடைமழையென அடித்து நொறுக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட வார்னர் வீழ்ந்திருந்தார்.
இதன்பிறகு, விருத்திமான் சஹாவுடன் கேப்டன் வில்லியம்சன் கூட்டணி போட்டார். நார்க்கியாவை போன்றே ஆவேஷ் கான், ரபாடா என இருவருமே உயிரை கொடுத்து வெறித்தனமான வேகத்தில் வீசிக்கொண்டிருந்தனர். ரபாடாவின் முதல் ஓவரில் முதல் பந்தை சிறப்பாக சிக்சராக்கியிருந்த விருத்திமான் சாஹா அதே ஓவரின் கடைசி பந்தில் ஷார்ட் பாலை சரியாக டைம் செய்ய முடியாமல் மிஸ் ஹிட்டாக அடித்து தவானிடம் கேட்ச் ஆனார். ஷார்ட் லென்த்தில் ஸ்டம்ப் லைனில் டைட்டாக வீசியே வார்னர் மற்றும் விருத்திமான் சாஹா இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர். அப்படி வீசும்போது பேட்ஸ்மேனுக்கு ஷாட் ஆடுவதற்கு இடமே கிடைக்காது. பந்தை சீக்கிரமே பிக் செய்து மடக்கி ஆட நினைத்தாலும் 150 கி.மீ வேகம் அதற்கு இடம் கொடுக்காது. வார்னர் மற்றும் விருத்திமான் விஷயத்திலும் அதுவே நிகழ்ந்தது.
நம்பர் 5-ல் இருந்தே டெய்ல் எண்ட் தொடங்கிவிடும் சன்ரைசர்ஸ் அணியில் அதிரடிக்கு ஒரே ஒரு நம்பிக்கையாக இருந்தவர் வார்னரே. அவரே டக் அவுட் ஆகியிருந்தாலும், க்ரீஸில் கேப்டன் வில்லியம்சன் இருந்தது கொஞ்சம் நம்பிக்கையை தக்க வைத்திருந்தது.
ஆனால், வில்லியம்சனும் ஏமாற்றவே செய்தார். வில்லியம்சனின் கரியரில் அவர் இவ்வளவு மோசமாக ஷாட் ஆடி அவுட் ஆகி பார்த்ததே இல்லை. முதல் ஓவரிலேயே க்ரீஸுக்குள் வந்துவிட்ட வில்லியம்சன் நம்பர் 4-ல் வந்திருந்த மணீஷ் பாண்டேவுடன் கூட்டணி லோட்டிருந்தார். மணீஷ் பாண்டே ஸ்பின்னை விட, வேகப்பந்து வீச்சாளர்களையே சிறப்பாக கையாள்வார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட்டும் இதையே சொல்கிறது. இதனாலேயே மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களிடம் ரன் எடுக்கும் பொறுப்பு முழுவதும் வில்லியம்சனுக்கே வந்து சேர்கிறது. மேலும், முதல் ஓவரிலேயே க்ரீஸுக்குள் வந்திருந்த வில்லியம்சன் 100-க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிக்கொண்டிருந்ததால் செட் ஆகியிருந்த அவர்தான் கியரை மாற்ற வேண்டிய சூழல் உண்டானது. இதெல்லாம் சேர்ந்துதான் வில்லியம்சனை அப்படியொரு மோசமான ஷாட்டை ஆட வேண்டிய சூழலுக்குள் தள்ளியது.
அஷ்வின் வீசிய 9 வது ஓவரில் ஒரு பந்தில் வில்லியம்சன் எட்ஜ் ஆகியிருந்தார். ஆனால், அந்த கேட்ச் வாய்ப்பை ரிஷப் பன்ட் தவறவிட்டு விட்டார். அடுத்த 10-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இதில் நான்காவது பந்தை எக்ஸ்ட்ரா கவரில் நின்ற ப்ரித்வி ஷாவுக்கு கேட்ச்சாக கொடுத்தார். ப்ரித்வியும் அந்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். அடுத்த பந்தே இறங்கி வந்து டைமிங்கே இல்லாமல் ஏனோதானோவென ஒற்றை கையில் ஒரு பெரிய ஷாட்டுக்கு சென்ற வில்லியம்சன் இந்த முறை லாங் ஆஃபில் ஹெட்மெயரிடம் கேட்ச் ஆனார். இரண்டு கேட்ச் டிராப்புகளுக்குப் பிறகு அடுத்த பந்திலேயே வில்லியம்சன் மாதிரியான க்ளாஸ் பேட்ஸ்மேன் இப்படியான ஒரு ஒற்றைக் கை ஷாட்டுக்கு செல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது.
கொஞ்ச நெஞ்சம் சன்ரைசர்ஸுக்கு இருந்த வாய்ப்பும் வில்லியம்சன் விக்கெட்டுடன் முடிவுக்கு வந்தது. வழக்கம் போல உருட்டி உருட்டி 100-110 ஸ்ட்ரைக் ரேட்டில் கரைசேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மணீஷ் பாண்டே ரபாடாவிடம் கேட்ச் ஆனார். 92 போட்டிகளில் ஆடிய அனுபவத்துடன் கேதார் ஜாதவ் க்ரீஸுக்குள் வந்தார். சென்றார். அவ்வளவுதான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
100 ரன்னை தாண்டினாலே அபூர்வம் என நினைக்கையில் அப்துல் சமத்தும் ரஷீத் கானும் ஆறுதல் இன்னிங்ஸ்களை ஆடி ஸ்கோரை கொஞ்சம் உயர்த்திக் கொடுத்தனர். சமத் 28 ரன்களையும் ரஷீத்கான் 22 ரன்களையும் எடுத்தனர். ரபடாவின் பந்தில் ரஷீத் அடித்த சிக்சர் மட்டுமே சன்ரைசர்ஸ் இன்னிங்ஸின் ஒரே ஹைலைட்டாக இருந்தது.
9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை சன்ரைசர்ஸ் அணி எடுத்திருந்தது. டெல்லிக்கு 135 ரன்கள் டார்கெட். பீட்டர்சன் சொன்னதை போல டெல்லி அணியின் பென்ச் வீரர்களை ஆட வைத்தால் கூட 15 ஓவர்களில் மேட்ச்சை முடித்துவிடுவார்கள் அப்படியொரு டார்கெட் இது.
சன்ரைசர்ஸ் பந்துவீச்சுக்கும் ஸ்கோர் டிஃபன்ஸுக்கும் பெயர் போன அணியாயிற்றே எதாவது செய்து போட்டியை கொஞ்சம் சுவாரஸ்யமாகவாது மாற்றுவார்கள் என ரசிகர்கள் நம்பினர். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. சுவாரஸ்யமே அற்ற ஒன்சைட் சேஸாகவே ஆட்டம் அமைந்திருந்தது.
துபாய் மைதானத்தில் கடந்த இரண்டு போட்டிகளில் மட்டும் வேகப்பந்து வீச்சாளர்கள் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்கள். இந்த போட்டியில் நடராஜன் இருந்திருந்தால் கூட சன்ரைசர்ஸ் கொஞ்சம் போட்டியளித்திருக்கலாம்.
பௌலிங்கை பொறுத்தவரைக்கும், டெல்லி ஃபாஸ்ட் ஃபார்வர்ட் மோடில் பரபரப்பை கிளப்பியிருந்தார்கள். அஷ்வின், அக்சர் பட்டேல் இருவருமே தொடர்ந்து 90 கி.மீ மேல் வீசியிருந்தனர். சன்ரைசர்ஸ் செய்த ஒரே ஸ்ட்ராட்டஜி நீங்கள் அல்ட்ரா ஸ்பீட் மோடில் வீசினால் நாங்கள் ஸ்லோ மோஷனில் வீசுகிறோம் பாருங்கள் என்பதுதான். ஹோல்டர், சந்தீப் ஷர்மா, புவனேஷ்வர் குமார் என எல்லாருமே 100-110 கி.மீ என வேகம் குறைவான பந்துகளை வீசுவதில் மட்டுமே கவனம் செலுத்தினர். ரன் ரேட் அழுத்தமே இல்லாததால் டெல்லி பேட்ஸ்மேன்கள் ஜாலியாக தட்டி தட்டியே ஸ்கோரை நெருக்கினர். கடைசியில் மட்டுமே நேற்றைய ராஜஸ்தான் vs பஞ்சாப் போட்டியின் காட்சிகள் நிழலாடியதால் பன்ட்டும் ஷ்ரேயாஸும் கொஞ்சம் அதிரடியாக ஆடியிருந்தனர். 18-வது ஓவரில் ஹோல்டர் வீசிய பந்தில் சிக்சர் அடித்து வெற்றியை பெற்று கொடுத்தார் ஷ்ரேயாஸ் ஐயர்.
ஆரம்பத்தில் விக்கெட் விடாமல் நின்று ஆடிய தவான் 42 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 47 ரன்களையும், பன்ட் 35 ரன்களையும் சேர்த்திருந்தனர்.
ராக்கெட் வேகத்தில் நான்கு ஓவர்களை வீசி 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நார்க்கியாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
பரிதாபமாக தோற்ற சன்ரைசர்ஸ் தனது எட்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.
இந்த சன்ரைசர்ஸுக்கு ஒரு விடியல் வரவே வராதா?
source https://sports.vikatan.com/ipl/delhi-capitals-vs-sunrisers-hyderabad-match-review
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக