சென்னை வந்த முதல் நாளே காலை நடைக்கு சென்ற காயத்ரியை பின்தொடர்ந்து பயமுறுத்தி ஓடவைத்து வாக்கிங்கை ஜாக்கிங் ஆக மாற்றிவிடுகிறார் ஒருவர். பின்தொடர்ந்து வருபவரை கண்டு காயத்ரி வேகமாக ஓட ஆரம்பிக்கிறாள். அவர் ஓடமுடியாமல் திணறி அவளை நெருங்கி அழைக்கும் வேளையில் சரியாக காயத்ரியின் வீட்டு செக்யூரிட்டி, “மேடம் ஜாக்கிங் முடிச்சு வந்துட்டீங்களா” எனக் கேட்கிறார். அவரை பார்த்ததும் தான் காயத்ரிக்கு நிம்மதியாக மூச்சு வருகிறது.
காயத்ரிக்கு சென்னை வந்த முதல்நாளே பிரச்னை என்றால் அதை காரணமாக வைத்தே சுந்தர் அவளை ஊருக்கே திரும்பச் சொல்லக்கூடும் என்கிற பதற்றம் காயத்ரி பத்திரமாக வீடு வந்து சேரும்போது குறைந்து நமக்கும் நிம்மதி பெருமூச்சு வருகிறது.
காயத்ரியை பின்தொடர்ந்து வந்தவர்தான் ஊருக்கு புதுசு என்றும், டீக்கடைக்காரரிடம் வழி கேட்டதற்கு, காயத்ரியும் அதே தெருவுக்கு செல்வதால் அவளை பின்தொடர்ந்து செல்லுமாறு கூறியதால் பின்னால் வந்தேன் என்கிறார். காயத்ரிக்கு தன்னுடைய பயத்தை நினைத்து சிரிப்பு வருகிறது. அதை சமாளித்துகொண்டு பேசிவிட்டு வீட்டுக்கு செல்கிறாள்.
சட்டென சுதாரித்துக்கொண்டு பயத்தில் ஓடி வந்ததை காட்டிக்கொள்ளாமல் சமாளித்த விதமும், செக்யூரிட்டியை பார்த்ததும் இயல்பாக இருப்பதுபோல் பேசிவிட்டு வீட்டுக்குள் செல்வதும் காயத்ரியின் (நடிகை குப்ரா) நடிப்பு ரசிக்கும்படி இருந்தது.
காலையில் தூங்கி எழுந்ததும் காபி போட்டுக் கொடுக்கக்கூட யாரும் இல்லை என்று புலம்பிக் கொண்டிருக்கும் பாண்டியனிடம் கவிதா ஆன்லைனில் காபி ஆர்டர் செய்யும்படி சொல்கிறாள். பக்கத்தில் இருக்கும் டீக்கடைக்கு நடந்தே சென்று குடிக்கலாம் என பாண்டியன் அழைக்க, கவிதா மறுக்கிறாள். ‘சென்னை வந்த மறுநாளே நம்ம தேனிக்கார புள்ளைககூட இப்படி கெட்டுப் போச்சே’ என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது காயத்ரி, ”காபி, டீ எல்லாம்கூட ஆன்லைனில் ஆர்டர் செய்யலாமா?’’ என்று வியப்புடன் கேட்கிறாள்.
காயத்ரியை போல ”ஆன்லைனில் இதெல்லாம் கிடைக்குமா?” என்று வியந்தவர்களும், எல்லாவற்றையும் ஆன்லைனிலேயே வாங்கிக் கொண்டிருக்கும் தலைமுறையை திட்டிக் கொண்டிருந்த பெரியவர்களும் கூட கொரோனா லாக்டெளனுக்குப் பிறகு ஆன்லைன் ஆர்டருக்கு முழுமையாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
காபி ஆர்டர் செய்கையில் அங்கே வரும் சிவாவிடம், காபி வேண்டுமா என்று பாண்டியன் கேட்கிறான். சிவா தனக்கு ஒரு பாஸ்தா ஆர்டர் செய்யும்படி சொல்கிறான். பாஸ்தா 150 ரூபாய் வரும் என்று கவிதா சொன்னதும், சிவா அதற்கான பணத்தை திருப்பித் தருவாரா என பாண்டியன் புலம்புகிறான். பாண்டியன் புலம்புவது அவன் அப்பாவின் சிக்கனத்தை(?!) நினைவுபடுத்தியது. கவிதா அவனிடம் முந்தைய தினம் புனிதா பார்ட்டி கொடுத்தபோது பாண்டியன் அதிக விலை உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டதை நினைவுபடுத்தி, “உனக்கு வந்தா ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?” என்று கேட்கிறாள்.
காபியை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் அளவுக்கு சென்னை வாழ்க்கை முறைக்கு ஒரே நாளில் மாறியிருந்தாலும், பண விஷயத்தில் இன்னும் பாண்டியன் தன் தந்தையின் வளர்ப்பில் இருந்து வெளிவரவில்லை. அது நாளாகலாம் அல்லது இறுதிவரை பாண்டியன் தன் தந்தையை போலவே இருந்துவிடலாம்.
அதேபோல் சிவாவை ‘அவன்’ என்று பேச்சுவாக்கில் குறிப்பிடும் பாண்டியன், கவிதாவின் முகத்தை பார்த்ததும் ‘அவர்’ என மாற்றிக் குறிப்பிடுவது நல்ல விஷயம். எல்லோரையும் மிக எளிதாக மீம் மொழியில் அவன்/அவள் என குறிப்பிடும் இந்த தலைமுறையினரிடத்தில் இத்தகைய காட்சிகள் மாற்றத்தை உண்டாக்கும்.
சாமி கும்பிட காயத்ரி தயாராகும்போது பக்கத்து அறையில் சிவா மியூசிக் பிளேயரில் அதிக சத்தம் வைத்து பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறான். எரிச்சல் ஆகும் காயத்ரி அவன் அறைக்கு சென்று அவனிடம் சத்தத்தை குறைக்குமாறு வாக்குவாதம் செய்கிறாள். ‘’இது என்னுடைய அறை, வேண்டுமானால் நீ கதவை மூடிக் கொள்’’ என்று சிவா காயத்ரியிடம் சொல்கிறான். காயத்ரி கோபமாக திரும்பிவந்து புனிதாவிடம் சொல்லி விவாதம் செய்கிறாள்.
அதற்கு புனிதா, காயத்ரியிடம் ‘’நீ உன்னுடைய கம்ஃபர்ட் ஸோனில் இருந்து முதன்முறையா வெளியே வர்றதால உனக்கு எல்லாமே பிரச்னையா தெரியுது'’ என்றும் ‘’இதெல்லாம் பழகிக்கணும்’’ என்றும் சொல்கிறாள். அடுக்குமாடி குடியிருப்புகளில் சிவாவைப் போன்றவர்கள் குறைந்தது குடியிருப்புக்கு இருவர் இருப்பார்கள்.
எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் வர இறுதி நாட்களில் சத்தம் அதிகமாக வைத்து பாட்டுக் கேட்டுகொண்டே பார்ட்டி கொண்டாடுவார். அந்த நேரத்தில் மட்டும் கதவுகளை திறந்து வைத்துக்கொள்வார். அந்த இரண்டு நாட்களும் எங்கள் தளம் முழுவதும் எந்த வீட்டிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் காண முடியாத அளவு சத்தமாக இருக்கும். அவ்வளவு சத்தத்தில் சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு அந்த வீட்டுக்குள் எப்படி இருக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கும். இதுபோல் சுயநலமாக தன் சுகத்தை பற்றி மட்டுமே சிந்திக்கும், அடுத்தவருக்கு உண்டான இடத்தை, பொருளை தாமாக எடுத்துக்கொள்ளும் ஆட்கள் பொதுக் குடியிருப்பில், தங்கும் விடுதிகளில், அலுவலகங்களில் என எல்லா பக்கமும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.
காயத்ரி சிவாவை காணும்போதெல்லாம் முகத்தை சுளித்து கோபமாக அந்த இடத்தை விட்டு நகர்கிறாள். அதை மற்றவர்களுக்கு தெரியும்படியே செய்கிறாள். பாண்டியன், கவிதாவிடம் சிரித்து பேசிக்கொண்டிருக்கும் காயத்ரி, சிவாவை அங்கு கண்டதும், பேசிக்கொண்டிருந்த இருவரிடமும்கூட சொல்லாமல் வேகமாக அங்கிருந்து நகர்கிறாள். சிவாவுக்கும், காயத்ரிக்கும் இருப்பது அவர்கள் தனிப்பட்ட பிரச்னை. அதற்காக அவ்வளவு நேரமும் அங்கு பேசிக்கொண்டிருந்த நண்பர்களை அவமானப்படுத்துவது போல் அங்கிருந்து கோபமாக நகர்வது தவறு மட்டுமல்ல, நாகரிகமில்லாத செயல்.
சிவா மற்றவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவது எப்படி தவறோ அதேபோல் காயத்ரி பொது இடங்களில் புழங்கும்போது யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொண்டு அனுசரித்துச் செல்ல மாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பதும் தவறுதான்.
காலையில் அலுவலகம் கிளம்ப தயாராகிக் கொண்டிருக்கும்போது ஹாலில் காத்திருக்கும் பாண்டியனிடம், “ஏன் இங்கே உட்கார்ந்திருக்கிறாய்?” என்று பரத் கேட்கிறான். அறையில் கவிதா உடைமாற்றி கொண்டிருப்பதால் அவன் ஹாலில் காத்திருப்பதாக சொல்கிறான். அதற்கு பரத், பாண்டியனையும், கவிதாவையும் காதலர்களாக இணைத்து தவறாக பேசுகிறான். அதைக் கேட்டு பாண்டியன் பரத்தை அடித்து விடுகிறான்.
இருவருக்கும் சண்டை முற்றும்போது மற்றவர்கள் வந்து தடுக்கின்றனர். எதற்காக சண்டை என்று எல்லோரும் கேட்கும்போது கவிதாவையும் தன்னையும் இணைத்து பரத் தவறாக பேசியதாக பாண்டியன் சொல்கிறான். முந்தைய நாள் வீடு பார்க்க செல்லும்போது எல்லோரும் பாண்டியனையும் கவிதாவையும் காதலர்களாக புரிந்துகொண்டு வீடு கொடுக்க மறுத்ததை பற்றி சொல்லும்போதும் தங்களை காதலர்களாக மற்றவர்கள் எண்ணுவது வருத்தப்பட வைக்கிறது என்று பாண்டியன் சொல்லியிருப்பான்.
எப்போதும் பெரியவர்கள்தான் ஆண்-பெண் நட்பை இதுபோன்று தவறாக புரிந்துகொள்வார்கள். ஆனால், இந்த தலைமுறையைச் சேர்ந்த பரத்துக்கும் கூட இது புரியவில்லை என்பது நமக்கு ஒன்றைப் புரிய வைக்கிறது. முற்போக்காக யோசிப்பதற்கும், வயதுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எவ்வளவு மாடர்னாக இருந்தாலும் பெருநகரங்களில் வாழ்ந்தாலும் பலரும் இது போன்ற விஷயங்களில் இன்ன்மும் பிற்போக்குத்தனமாக, நாகரீகம் இல்லாமல் நடந்து கொள்கின்றனர்.
பரத் தான் பேசியது தவறு என்றுணர்ந்து மன்னிப்பு கேட்பானா? அந்த வீட்டில் இருக்கும் மற்றவர்களும்கூட பாண்டியன் – கவிதா நட்பை சரியாக புரிந்துகொள்வார்களா?
காத்திருப்போம்!
source https://cinema.vikatan.com/television/aadhalinaal-kaadhal-seiveer-digital-series-episode-11-review
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக