தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி பகுதியில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ஆனைமலையான்பட்டி அருகே வெள்ளகரடு பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த நபரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அதில் அவரிடம் ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில் கள்ளநோட்டு வைத்திருந்த நபர் கம்பம் பகுதியில் வசித்துவரும் கண்ணன்(35) என்பது தெரியவந்தது. மேலும் ஆனைமலையான்பட்டியைச் சேர்ந்த அலெக்சாண்டர்(42) என்பவர் புழக்கத்தில் விடுவதற்காக, கள்ள நோட்டுகளை கண்ணனிடம் கொடுத்து அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து அலெக்சாண்டரைப் பிடித்து போலீஸார் விசாரித்ததில், ரூ.20,02,450 மதிப்பிலான கள்ள நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அலெக்சாண்டர் வீட்டில் சோதனையிட்ட ராயப்பன்பட்டி போலீஸார் சாக்குமூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த ரூ.20,02,450 மதிப்பிலான கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்து கண்ணன், அலெக்சாண்டர் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read: காதல் ஜோடியைத் தேடிச் சென்றபோது சிக்கிய கள்ளநோட்டு கும்பல் - கோவை அதிர்ச்சி!
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக கேரள எல்லையான கம்பம் மெட்டுப் பகுதியில் கேரளப் போலீஸாரால் கைது செய்யப்பட்ட கள்ளநோட்டு கும்பலுடன் இந்த இருவருக்கும் தொடர்பு உள்ளதா என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஸிடம் கேள்வி எழுப்பினோம்.
அவர், ``கடந்த ஜனவரியில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட முருகேசன் என்பருக்கும் அலெக்சாண்டருக்கும் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீஸார் கண்ணன், அலெக்சாண்டர் வீடுகளில் முழுமையாக சோதனை செய்துள்ளனர். இருவர் வீடுகளிலும் கள்ள நோட்டு தயாரிப்பதற்கான மிஷின்கள் எதுவும் இல்லை. இந்த நோட்டுகள் கோவையில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்காலம் என சந்தேகிக்கிறோம். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்படும்” என்றார்.
source https://www.vikatan.com/news/crime/two-arrested-in-fake-currency-issue-in-theni
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக