Ad

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

`பஞ்சு மீதான 1% சந்தை நுழைவு வரி ரத்து!’ - 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசின் நிதிநிலைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேள்வி நேரத்துடன் தொடங்கிய இன்றைய கூட்டத்தொடரில், தமிழக முதல்வர் ஸ்டாலின் `110 விதியின் கீழ் பஞ்சு மீதான ஒரு சதவிகிதம் சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்படும்’ என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்

இன்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர், ``நெசவாளர்களின் நலனுக்காகப் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியது திமுக அரசு. அதன் தொடர்ச்சியாக இப்போது நெசவுத் தொழிலை நம்பியிருக்கும் நெசவாளத் தோழர்கள், சிறு, குறு நிறுவனங்களின் நன்மையைக் கருதி ஒரு முக்கிய அறிவிப்பை 110 விதியின் கீழ் அறிவிக்கவிருக்கிறேன். இந்திய துணித் தொழில் வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கை தமிழ்நாடு வகிக்கிறது. தமிழகத்திலுள்ள நூற்பாலைகளின் எண்ணிக்கை 1,570. இந்த ஆலைகளின் மூலம் நூற்கப்படும் நூல், நாட்டிலுள்ள மொத்த நூற்புத்திறனில் 45 சதவிகிதம். தமிழ்நாட்டில் அமைந்துள்ள நூற்பாலைகளுக்குத் தேவையான பஞ்சின் அளவில் 95 சதவிகிதம் பிற மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படுகிறது. தமிழ்நாடு வேளாண் பொருள்கள் விற்பனை ஒழுங்குமுறைச் சட்டம் 1987 பிரிவு 24-ன்படி, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சின்மீது சந்தை நுழைவுவரியாக ஒரு சதவிகிதம் விதிக்கப்படுகிறது" என்றார்.

Also Read: `அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம்'- 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

மேலும், ``மேற்படி சட்டத்தின்படி பருத்தி, பஞ்சு, கழிவுப் பஞ்சு ஆகியவை வேளாண் பொருள்களாகக் கருதப்பட்டு, சந்தைப் பகுதிகளில் கொள்முதல் அல்லது விற்பனை செய்யப்படும்போது ஒரு சதவிகிதம் சந்தை நுழைவு வரி விதிக்கப்படுகிறது. சந்தை நுழைவு வரி என்பது பருத்திப் பொதிகளின் மீது மட்டுமே விதிக்கப்பட வேண்டும். மாறாகப் பஞ்சு, கழிவுப் பஞ்சு போன்ற உற்பத்திப் பொருள்கள் மீதும் ஒரு சதவிகிதம் சந்தை நுழைவு வரி விதிக்கப்படுகிறது. இதனால் வெளிமாநிலங்களிலிருந்து பஞ்சு கொள்முதல் செய்யப்படும்போது சிறு, குறு நூற்பாலைகள் கட்டணம் செலுத்துவதில் பெரும் நெருக்கடியைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. பஞ்சின் மீது விதிக்கப்படும் சந்தை நுழைவு வரியை நீக்க வேண்டும் என்பது, தொழில்முனைவோர், நெசவாளர்கள் ஆகியோரின் நீண்டநாள் கோரிக்கை.

பருத்தி

இதனால் மாநிலத்தில் இந்தியப் பருத்திக் கழகம் பஞ்சு நூல் விற்பனையை மேற்கொள்ளும்போது, நூற்பாலைகள் பெறுமளவிலான பஞ்சு இருப்பைப் பராமரிக்கவேண்டியது இல்லை. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், நெசவாளர்களோடு நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டங்களில் இந்த வரி நீக்கப்பட வேண்டும் என்பதைத் தங்களின் கோரிக்கையாகத் தெரிவித்தனர். இதைக் கருத்தில்கொண்டு. தொழில்முனைவோர், நெசவாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, பஞ்சு மீதான ஒரு சதவிகிதம் சந்தை நுழைவு வரி ரத்துசெய்யப்படுகிறது. இதற்கான உரிய சட்டத்திருத்தம் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கொண்டுவரப்படருக்கிறது" என்று அறிவித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/tn-chief-minister-stalin-announces-the-abolition-of-the-1-market-entry-tax-on-cotton-under-rule-110

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக