நம் போன்ற சிறு முதலீட்டாளர்களுக்கு உதவக்கூடிய கடன் முதலீடுகளில் வங்கி / அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் போன்றவற்றுக்கு அடுத்து வருவது பாண்ட்ஸ் எனப்படும் பத்திரங்கள். பங்குச் சந்தை வருவதற்கு முன்பே இந்த பத்திரங்கள் பிரபலம் அடைந்திருந்தன. பணம் வேண்டுவோர், கடன் தருவோரின் பணத்தை என்றைக்கு எவ்வளவு வட்டியுடன் திருப்பித் தர முடியும் என்று எழுத்துப் பூர்வமாகத் தரும் உத்தரவாதமே பத்திரங்கள். அரசுப் பத்திரங்கள், கம்பெனிகள் வெளியிடும் பத்திரங்கள் என்ற இரு வகை பத்திரங்களில் பிரபலமானவற்றைப் பார்க்கலாம்.
Also Read: வங்கிகளை விட லாபம் தரும் அசத்தல் திட்டங்கள்; அஞ்சலகங்களின் அருமையை தெரிஞ்சுப்போமா? - 11
அரசுப் பத்திரங்கள்:
``அரைக் காசென்றாலும் அரண்மனைக் காசு” என்பார்கள். அதிலுள்ள நம்பகத்தன்மை அப்படி. மத்திய, மாநில அரசுகள் மற்றும் என்.ஹெச்.ஏ.ஐ, ஹட்கோ என்.டி.பி.சி போன்ற அரசு நிறுவனங்கள், உள்கட்டமைப்பு செலவுகளுக்காக / நாட்டின் பல வளர்ச்சித் தேவைகளுக்காக பத்திரங்கள் வெளியிடுகின்றன. இவற்றின் முதலீட்டுக் காலம் ஐந்து முதல் நாற்பது வருடங்கள் வரை. முன்பெல்லாம் பெரிய கம்பெனிகளுக்கும் வங்கிகளுக்கும் மட்டுமே இவற்றில் முதலீடு செய்யும் பாக்கியம் கிட்டும். தற்போது சிறு முதலீட்டாளர்களும், கூட்டுறவு வங்கிகளுமே கூட இவற்றில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
தற்போது 7.15% வட்டி தரும் ஃப்ளோட்டிங் ரேட் சேவிங்ஸ் பாண்டுகளே நடப்பில் இருக்கின்றன. இவற்றின் வட்டி விகிதம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றம் அடையும் வாய்ப்பு உண்டு.
சீரோ கூப்பன் பாண்டுகளில் வட்டி விகிதம் குறிப்பிடப்படாது. முகமதிப்பு (Face Value) மட்டுமே குறிப்பிடப்படும். உதாரணமாக ஆயிரம் ரூபாய் முகமதிப்புள்ள பாண்டுகள் ரூ. 800/க்கு விற்கப்படலாம். இவற்றுக்கு அவ்வப்போது வட்டி வழங்கப்படாது. முதிர்வு காலத்தில் முகமதிப்பான ஆயிரம் ரூபாய் தரப்படும். ஆகவே, அவ்வப்போது வட்டி தேவைப்படுவோருக்கு இது உதவாது.
Also Read: ஓய்வுபெறுபவர்களின் நம்பர் 1 சாய்ஸ் இந்த அஞ்சலக திட்டம்தான்; ஏன் தெரியுமா?- பணம் பண்ணலாம் வாங்க-12
டேக்ஸ் ஃப்ரீ பாண்டுகளின் வட்டிக்கு வரி கிடையாது. இன்றைய தேதியில் 6% வட்டி (வரி இல்லாதது) கிடைப்பது வங்கி வட்டி விகிதத்தைவிடக் கவர்ச்சியானது அல்லவா? ஆனால், 2016-க்குப் பின் இவை புதிதாக வெளியிடப்படவில்லை. அதற்கு முந்தைய பாண்டுகள் சந்தையில் சற்று அதிக விலைக்குக் கிடைக்கின்றன.
அரசுப் பத்திரங்களின் முதிர்வுக் காலம் நீண்டது; இடையில் ப்ரீமச்சூர் க்ளோஷர் செய்ய முடியாது; தேவையென்றால் சந்தையில்தான் விற்க முடியும் என்பது நெகட்டிவ் பாயின்ட்டாக இருந்தாலும், அரசு பத்திரங்களின் பாதுகாப்பு, அதிக வட்டி விகிதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இவற்றில் முதலீடு செய்யலாம். தமிழ் நாடு பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் வெளியிடும் பாண்டுகளைக் கண்டிப்பாக பரிசீலியுங்கள்.
கார்ப்பரேட் பாண்டுகள்:
உற்பத்தி நிறுவனங்கள், ஃபைனான்ஷியல் நிறுவனங்கள், என்.பி.எஃப்.சி போன்ற எந்த நிறுவனமானாலும், ரூ.100 கோடிக்கு மேல் நிகர மதிப்பு கொண்டிருந்தால் சந்தையில் பாண்டுகளை விற்கலாம். வங்கிகள் முழுகினால் நம் டெபாசிட்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான காப்பீடு உண்டு. அதுபோன்ற காப்பீடு இந்த பாண்டுகளுக்கு இல்லை. ஆகவே ரிஸ்க்கும் அதிகம்; வட்டி வருமானமும் அதிகம்.
இவற்றின் நம்பகத்தன்மை குறித்து இக்ரா, கேர், க்ரிசில் போன்ற நிறுவனங்கள் ஆராய்ந்து AAA முதல் D வரை தரச் சான்றிதழ் அளிக்கின்றன. AAA நிறுவனங்களில் குறைந்த வட்டியும், D நிறுவனங்களில் அதிக வட்டியும் கிடைக்கும். A-க்குக் குறைந்த கம்பெனிகளில் முதலீடு செய்வது ரிஸ்க்தான். வட்டி வருமானம் ஆண்டுக்கு 5,000 ரூபாயைத் தாண்டுமெனில், 15ஜி/ஹெச் படிவங்கள் சமர்ப்பித்து டி.டி.எஸ் (Tax Deducted at Source)ஸைத் தவிர்க்கலாம்.
Also Read: சேமிப்புக்காக சீட்டு போட்டிருக்கிறீர்களா? அந்த முதலீடு உண்மையில் லாபகரமானதுதானா? - 13
சில கம்பெனிகள் ப்ரீமெச்சூர் க்ளோஷரை அனுமதித்தாலும், பெனால்ட்டி விதிக்கும். ஆகவே, இதில் முதலீடு செய்ய விரும்புவோர், தங்களால் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்ய இயலுமா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அவசரமாகப் பணம் தேவைப்பட்டால், சந்தையில் இவற்றை விற்க இயலும்.
கம்பெனி தரும் வட்டி விகிதம் சந்தையின் போக்குக்கு ஒத்து வருகிறதா என்று பார்க்க வேண்டும். மற்ற கம்பெனிகள் 8% வட்டி தரும்போது ஒரு கம்பெனி மட்டும் 15% வட்டி தருவதாகக் கூறினால், அந்த வலையில் விழக் கூடாது.
பின் வரும் காலங்களில் தரம் குறைந்து வருகிறது அல்லது கம்பெனி நஷ்டத்தில் இயங்குகிறது என்று தோன்றினால், விற்று வெளியேறுவது நல்லது.
டாட்டா ஸ்டீல், டாட்டா ஹௌசிங் கேபிடல், ஹெச்.டி.எஃப்.சி, எல் அண்ட் டி ஃபைனான்ஸ் போன்ற ஆரோக்கியமான கம்பெனிகளில், நம் மொத்த முதலீட்டில் பத்து சத விகித அளவு முதலீடு செய்தால் பாதுகாப்புக்குப் பாதுகாப்பு; வருமானத்துக்கு வருமானம்.
- அடுத்து புதன்கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்.
source https://www.vikatan.com/business/finance/is-it-safe-to-invest-in-govt-and-corporate-bonds
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக