திமுக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை நல்வாய்ப்பாகப் பயன்படுத்தி நாள்தோறும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர் முதல்வரும், அமைச்சர்களும். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பிறந்தநாள் ‘தியாகத் திருநாள்’ என கொண்டாடப்படும்; அயோத்திதாசருக்கு வடசென்னையில் மணிமண்டபம் கட்டப்படும்; 1987-ல் வன்னியர் இடஒதுக்கீடு கோரி போராடி உயிநீத்த 21 தியாகிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் என பல்வேறு தரப்பினரிடமும் வரவேற்பை அறிவிப்புகள் ஏராளம். இந்த மணிமண்டப அறிவிப்புகளின் பின்னால் சமூக அக்கறை இருக்கிறது. அதேநேரம் அச்சமூகங்கள் அதிகம் வாழும் வட தமிழகத்தை மையப்படுத்தி, உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்தும் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள் சிலர்.
அவர்களிடம் பேசினோம், “வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக பாமக உள்ளிட்ட வன்னியர் சமூக கட்சிகளும், அமைப்புகளும், தலைவர்களும் போராடியிருக்கிறார்கள். இடஒதுக்கீடு கோரிக்கை பிரதானமாக கோரப்பட்டதே தவிர, 1987-ல் இடஒதுக்கீடு கேட்டு சாலை மறியல் செய்தபோது போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 21 பேருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை பெரிதாக எழவில்லை. கடந்த ஆட்சியின் இறுதியில் வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டது. ஆட்சி மாறியபோதும் திமுக அந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்தியது. தற்போது கோரிக்கை எழாதபோதும் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 பேருக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
Also Read: சட்டப்பேரவை சர்ச்சை: துரைமுருகன் விளக்கம்... எடப்பாடி தரப்பு சொல்லும் காரணம்! - திமுக Vs அதிமுக!
மீதமிருக்கும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் நடத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. இந்த 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் வன்னியர் சமூகம் அதிகமுள்ள மாவட்டங்கள். பொதுவாகவே திமுக-வுக்கு காலங்காலமாக வன்னியர் சமூகம்தான் முதுகெலும்பாக நின்றுள்ளது. எனினும், கருணாநிதி மீதான நம்பிக்கை தன் மீதும் ஏற்பட வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார். அதேநேரம், இந்த 9 மாவட்டங்களில் 7-ல் பாமக வலுவாக காலூன்றியிருக்கிறது. அக்கட்சி அதிமுக-வுடன் கூட்டணியில் இருப்பதால், அதன் பலம் அதிமுக-வுக்கு சாதகமாக அமையக்கூடும். அதனால்தான், பாமக-வுக்கும், அதிமுக-வுக்கும் செக் வைக்கும் விதமாக 21 பேருக்கு மணிமண்டபம் கட்டப்படும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் முதல்வர்.
மேலும், இந்த 9 மாவட்டங்களிலும் பட்டியலின மக்களும் கனிசமாக வசிக்கிறார்கள். வன்னியர் சமூகத்துக்கு ஆதரவாக செயல்படுவதுபோன்ற தோற்றம் ஒருபோதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அறிவார்ந்த முறையில் சிந்தித்து அயோத்திதாசருக்கு மணிமண்டபம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். உள்ளாட்சித் தேர்தலை மையமாக வைத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்திருக்கிறார் ஸ்டாலின்!” என்றனர்.
தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரனிடம் இது குறித்து கேட்டபோது, ``தமிழுக்குத் தொண்டாற்றியவர்களையும், சுதந்திரத்துக்குத் தொண்டாற்றியவர்களையும் கௌரவிப்போம் என தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தோம். அதைத்தான் செய்திருக்கிறார் முதல்வர். இதனை ஜாதியுடன் இணைப்பது நியாயமேயில்லை. அப்படிப்பார்த்தால் வ.உ.சி, காமராஜர் என பலதரப்பட்ட தலைவர்களுக்கும் கௌரவம் அளித்திருக்கிறோம், அதையும் கூட ஜாதியுடன் ஒப்பிடுவீர்களா? நீங்கள் சொல்வதுபோலவே எடுத்துக்கொண்டாலும், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் இந்த 9 மாவட்டங்களையும் பாருங்கள். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகியவற்றில் திமுக தானே ஜெயித்திருக்கிறது. நெல்லை, தென்காசியில் மட்டும் தலா ஒரு தொகுதியில் அதிமுக வென்றிருக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோதே எங்களுக்கு வெற்றி வாய்ப்பைக் கொடுத்த இந்த 9 மாவட்ட மக்கள், ஆளுங்கட்சியாக அமர்ந்து இவ்வளவு சாதனைகளைப் புரிந்திருக்கிறோம் என்றால் வெற்றியைக் கொடுக்காமல் விட்டுவிடுவார்களா என்ன?
1989-90 காலகட்டத்தில் வன்னியர் சமூகத்துக்கு இடஒதுக்கீடு அளித்து எம்.பி.சி கோட்டாவை கருணாநிதி அமைத்தபோது, உயிர்நீத்த 21 பேரின் குடும்பத்துக்கும் அரசுப் பணி கொடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு கருணாநிதியும் இசைவு தெரிவித்தார். இதை கோடிட்டுக்காட்டிதான் ‘நியாபக சக்தியில் கலைஞரின் பிள்ளை கலைஞராகவே இருக்கிறார்’ என்று துரைமுருகன் பாராட்டினார்.
Also Read: `அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம்'- 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
அயோத்திதாசருக்கு மணிமண்டபம் வட சென்னையில் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். சென்னையில் எந்த ஒரு தேர்தலும் இல்லையே. திருவள்ளுவருக்கும் கூடத்தான் அறிவிப்புகள் செய்திருக்கிறோம், அவர் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்? அதனால், இந்த அறிவிப்புகள் எல்லாம் தலைவர்களின் செயல்பாடுகளுக்குக் கொடுக்கப்படும் அங்கீகாரம். இதனை தேர்தலோடும், ஜாதியோடும் ஒப்பிடுவது தவறு!” என்றார்.
source https://www.vikatan.com/news/politics/is-cm-stalins-announcement-linked-with-upcoming-local-body-elections-in-tamilnadu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக