Ad

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

மகாளய பட்சம்: இந்த நாள்களில் 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் என்னென்ன தெரியுமா?

கொடை வள்ளல்களில் முதன்மையானவர் என்று போற்றப்படும் கர்ண மகாராஜனே பூவுலகுக்கு சூட்சுமமாக வந்து அன்னதானம் அளிக்கும் மிக சிறப்பான விரத தினங்களே மகாளய பட்ச நாள்கள் எனப்படுகிறது. தங்களுடைய தாகசாந்திக்காக முன்னோர்கள் பூலோகம் வரும் மகாளய பட்ச விரத நாள்கள் நேற்று முதல் அதாவது சார்வரி ஆண்டு 21-09-2021 செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பம் ஆனது. இது பதினைந்து நாள்களுக்கு கடைப்பிடிக்கப்படும் புண்ணிய விரதமாகும். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். இந்த வருட புரட்டாசி மாதம் அமாவாசை 06/10/2021 புதன்கிழமையில் வருகிறது. புரட்டாசி அமாவாசையோடு மகாளய பட்ச நாள்கள் முடிவடையும்.

12 ராசிக்காரர்கள்

பித்ருக்களின் ஆசியைப் பெற்று நலம் பெறும் இந்த மகாளய பட்ச நாள்களில் அன்னதானம் அளிப்பது சிறப்பான பூஜையாக எண்ணப்படுகிறது. 'யார் இந்த பட்சத்தில் அன்னதானம் அளிக்கிறார்களோ அவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்; அவர்களை அரியும் சிவனும் ஆசிர்வதிப்பார்கள்' என்பது கர்ணனின் திருவாக்கு. இந்த நாள்களில் இருப்பவர்களுக்கு அன்னதானமும் இறந்தவர்களுக்கு எள்ளும் நீரும் அளிப்பது பல்வேறு சௌபாக்கியங்களை அளிக்கும் என்கின்றன ஆன்மிக நூல்கள்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாடும், சிவ வழிபாடும் செய்து மாற்றுத் திறனாளிகளுக்கு உணவும் கல்விக்கான பொருள்களும் தானம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கி பலன் பெறுவார்கள்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்க் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்யலாம். ஏழைகளின் திருமணத்துக்கு பொருள் தானம் செய்யலாம். இதனால் குடும்ப நலனில் முன்னேற்றம் ஏற்படும்.

வெண் பொங்கல்

மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்து வெண் பொங்கல் தானம் கொடுக்கலாம். இதனால் சகல ஐஸ்வரியங்களும் தேடி வரும். ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு உதவினால் பித்ரு தோஷம் நீங்கும்.

கடகம்: கடக ராசிக்காரர்கள் பசுமாடு, நாய், காகம் போன்ற ஜீவராசிகளுக்கு உணவு தானம் செய்யலாம். இதனால் வறுமை நீங்கி செல்வம் சேர்க்க உதவும். ஏழை நோயாளிகளுக்கு மருந்து வாங்க உதவினால் கவலையற்ற வாழ்வு கிடைக்கும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் பித்ரு தோஷம் நீங்கி புகழ் கொண்ட வாழ்வை அடைவர். மாற்றுத்திறனாளிகளுக்கு பொருள் உதவி செய்ய புண்ணியத்தைச் சேர்க்கும்.

தானம்

கன்னி: கன்னி ராசிக்காரர்கள் கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருள்களை தானம் செய்ய வேண்டும். ஆதரவு அற்ற பெரியவர்களுக்கு வஸ்திர தானம் செய்ய காரிய ஸித்தி உண்டாகும்.

Also Read: 2021 மகாளய பட்சம் ஆரம்பம்... முன்னோர் ஆராதனை - ஏன், எதற்கு, எப்படி? முழுமையான வழிகாட்டல்!

துலாம்: துலாம் ராசிக்காரர்கள் விநாயக வழிபாடு செய்து பழங்கள், பஞ்சாமிர்தம் போன்றவற்றை தானம் செய்யலாம். இழந்த சொத்துக்களையும் சொந்தங்களையும் இதனால் பெறலாம். ஆதரவற்ற இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு வேண்டியதை தானம் செய்தால் உங்கள் தலைமுறைகள் சௌக்கியமாக வாழும்.

விருச்சிகம்: விருச்சக ராசிக்காரர்கள் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு பானகம் தானம் செய்யலாம். இதனால் செல்வவளமும் உடல் ஆரோக்கியமும் உண்டாகும். வருமானம் இல்லாத கோயிலுக்கு உதவி செய்தால் எதிர்ப்புகள் அடங்கும்.

பானகம்

தனுசு: தனுசு ராசிக்காரர்கள் தவறாமல் கடலை, பயறு வகை உணவை தானம் செய்யலாம். செவ்வாய்க் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்யலாம். வயதான பெண்களுக்கு உதவி செய்தால் வளமான வாழ்வும் நலமான தேகமும் அடையலாம்.

மகரம்: மகர ராசிக்காரர்கள் வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கி தானம் கொடுக்கலாம். திருக்கோயில் பணிகளுக்கு தானம் செய்தால் வேண்டியதை அடையலாம்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் ஏழைகளுக்கு கதம்ப உணவை தானமாக கொடுக்கலாம். ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி பொருள்கள் அளிக்கலாம். இதனால் பண வரவும் குடும்ப உறவும் மேம்படும்.

சர்க்கரை பொங்கல்

மீனம்: மீன ராசிக்காரர்கள் பவுர்ணமி நாள்களில் சிவ தரிசனம் செய்து சர்க்கரை பொங்கல் வழங்கலாம். ஏழைத் தொழிலாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும். புகழுடன் கூடிய வாழ்வு மலரும்.

மேற்கண்ட ராசிக்காரங்கள் முடிந்தவரை இந்தத் தானங்களைக் கொடுத்தால் கர்ம வினைகளை அழித்து, பித்ருக்களின் ஆசிகள் பெற்று, ஆயுள் பலம், ஆரோக்கியம், மன நிம்மதி, செல்வ வளம் போன்ற சகல வேண்டுதல்களையும் பெறலாம்.


source https://www.vikatan.com/spiritual/gods/astrological-remedies-for-12-zodiac-signs-during-this-mahalaya-patcha-period

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக