‘ரிவார்ட் சேலஞ்ச்’ – இதுதான் நேற்றைய நாளின் ஹைலைட். கடந்த இரண்டு சவால்களிலும் தோற்றிருந்த ‘காடர்கள்’ அணி ஜெயித்தே ஆக வேண்டிய வெறியிலும் நெருக்கடியிலும் இருந்தார்கள். ஆம், இன்று கிடைக்கப் போகிற வெகுமதி ‘உணவு’ தொடர்பானது. சரியான சாப்பாடு இல்லாமல் காய்ந்து போயிருக்கிறவர்களுக்கு இதை விடவும் பெரிய பரிசு வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால் அவர்களால் இன்று சாதிக்க முடிந்ததா?
இந்த விஷயத்தைப் பற்றி மறுபடியும் மறுபடியும் எழுத சலிப்பாகத்தான் இருக்கிறது. பார்வதியின் அனத்தல்கள் வெற்றிகரமாகவும் ஆவேசமாகவும் தொடர்ந்தன. தனது அணியைப் பற்றியே கன்னாபின்னாவென்று கமென்ட் அடித்துக் கொண்டிருந்தார். ‘தனக்கு ஏன் முக்கியத்துவம் தரப்படவில்லை?’ என்பது பற்றியே அம்மணி தொடர்ந்து புலம்பிக் கொண்டிருந்தார். ஓர் அணியின் உத்வேகத்தைக் கெடுக்க இம்மாதிரியான ஒரு ஆள் போதும்.
‘சர்வைவர்’ டீம் தன்னை பேச விட்டு, நன்றாக வேடிக்கை பார்த்து, கன்டென்ட் தேற்றுகிறார்கள் என்பதை இந்த தொன்னூறு நாளில் (அதுவரை தாங்குவாரா?!) ஒரு நாளில் பார்வதிக்குப் புரிந்தால் கூட அவர் புத்திசாலியே.
‘சர்வைவர்’ பதினோறாவது நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.
காடர்கள் தீவு. போட்டியாளர்கள் தூங்குவது, கூடாரம் உள்ளிட்ட விஷயங்களை இன்றுதான் காட்டினார்கள். ‘டெய்லி காலைல எழுந்தவுடன் விதம் விதமா பிஸ்கெட் கேட்டு வீட்ல சாப்பிவேன்... ஆனா இங்க” என்று அந்தப் பக்கம் புலம்பிக் கொண்டிருந்தார் ரவி. இவரின் தலைமையில் ஆவேசமான உடற்பயிற்சி நடந்தது. அம்ஜத், நந்தா, ஐஸ்வர்யா ஆகியோர் சிறப்பாக வார்ம்-அப் செய்தார்கள்.
இந்தப் பக்கம் வீராங்கனை விஜி ஆவேசமான உரையை தனது அணியிடம் நிகழ்த்தினார். எனவே ‘இன்று ஜெயித்துக் காட்டுவோம்’ என்கிற கொலைவெறியில் காடர்கள் தென்பட்டார்கள். ஆனால் சும்மா சொல்லக்கூடாது, தனது உடலை விஜயலட்சுமி மிகவும் ஃபிட்டாக வைத்திருப்பது அவர் செய்த உடற்பயிற்சிகளின் மூலம் காண முடிந்தது.
அர்ஜுன் என்ட்ரி. “என்ன எல்லோரும் எக்ஸர்சைஸ் செஞ்சு தெம்பா இருக்கீங்க போல... குட் காடர்களே... இந்த டாஸ்க்ல நீங்க ஜெயிச்சாகணும்... அவங்க ரெண்டு கேம்ல ஜெயிச்சுட்டாங்க... உங்க அணில இருந்த பிரிவுலாம் போயிடுச்சா” என்று அவர் விசாரிக்க “எல்லாக் கோட்டையும் அழிச்சுட்டு நாங்க ஒண்ணாயிட்டோம் சார்” என்று சத்தியம் செய்தது காடர் அணி. “அப்படின்னா இதுக்கு முன்னாடி ‘மூவேந்தர் அணி’னு ஒண்ணு இருந்ததா?” என்று போட்டு வாங்கினார் அர்ஜுன். (இதுபோன்ற அரிதான சமயங்களில் அர்ஜூனின் சமயோசித நகைச்சுவையுணர்வை பார்க்க முடிகிறது).
“சமையல் எல்லாம் எப்படி?” என்று அர்ஜூன் விசாரித்த போது “சமையல்ல உப்பு காரம் இருக்கோ இல்லையோ... நிறைய அன்பு போட்டு சமைப்பேன்” என்று டிவி விளம்பரத்தில் வரும் அம்மா மாதிரி சொன்னார் விஜயலட்சமி. செயற்கைத்தனமான குழந்தைத்தனத்துடன் அவர் இதுபோல் பேசும் போது மட்டுமே நமக்கு கொலைவெறி ஏற்படுகிறது. மற்றபடி அவரை சகித்துக் கொள்ளலாம்.
ரிவார்ட் சேலஞ்ச் பற்றிய விதிமுறைகளைச் சொல்ல ஆரம்பித்தார் அர்ஜூன். ஏறத்தாழ போலீஸ் ட்ரெய்னிங்கில் தரப்படும் பயிற்சிதான். உடல் வலிமையைக் கோரும் போட்டிகள் நிறைய இருந்தன. ஆனால் அதையும் தாண்டி ஒரு புதிரை அவிழ்க்க வேண்டிய ஏரியாவும் இருந்தது. அங்குதான் மூளையை சிறப்பாக பயன்படுத்த வேண்டும்.
போட்டியாளர்கள், முதலில் சிக்கலான முறையில் கட்டப்பட்டிருக்கும் கயிறு வலைக்குள் நுழைந்து வெளியே வர வேண்டும். பிறகு ஒருவர் மட்டும் தொங்கிக் கொண்டிருக்கும் கயிற்றைப் பிடித்து ஏறி மேலே இருக்கும் மணியை அடிக்க வேண்டும். பிறகு நூல் ஏணியைப் பிடித்து மேலே ஏறி ஒற்றைச் சுவரைப் போன்ற பலகையில் கால் வைத்து தாண்ட வேண்டும். அதன் பிறகு முடிச்சுகள் கொண்ட கயிற்றை அவிழ்த்து முடித்த பிறகு, மூடப்பட்டிருக்கும் பலகைத் துண்டை இரண்டாக பிளந்த பிறகு, சறுக்கிச் சென்று புதிர் ஏரியாவை அடைய வேண்டும்.
இங்குதான் பெரிய சவால். தாளில் உள்ள jig zaw puzzle-ஐ அமைப்பதற்கே நாம் மிகவும் சிரமப்படுவோம். இங்கு பெரிய பெரிய மர பிளாக்குளைக் கொண்டு துண்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் அந்தந்த அணியின் இலச்சினையைக் கொண்ட பெரிய பெட்டி ஒன்று இருக்கும். சிறிய துண்டுகளை சாமர்த்தியமாக நகர்த்தி அந்த பெரிய பெட்டியை வெளியே கொண்டு வந்தால் போட்டி முடிந்தது.
இதில் ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால், சில இடங்களில் அனைத்துப் போட்டியாளர்களும் வந்து சேர்ந்த பிறகுதான் அந்த இடத்தில் இருந்து அவர்கள் நகர்ந்து அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும்.
காடர்களில் ஆறு நபர்களும் வேடர்களில் ஏழு நபர்களும் இருந்ததால் போட்டி சமனாக இருக்காது என்று கருதிய அர்ஜூன், வேடர்கள் அணியிலிருந்து ஒருவரை விலகச் சொன்னார். இந்த முடிவை அவர்களே கலந்தாலோசித்து எடுத்துக் கொள்ளலாம். தன்னை ஒதுக்கி விடுவார்களோ என்று ஆரம்பத்திலேயே பயந்து விட்டார் பார்வதி. பிறகு அவர் நடத்திய புலம்பல் கவியரங்கத்தில் இதையொரு நீண்ட பாடலாக பாடினார்.
ஆனால், ‘நான் விலகிக் கொள்கிறேன்’ என்று அறிவித்தார் பெசன்ட் ரவி. இது ஒருவகையில் புத்திசாலித்தனமான மூவ். ஏனெனில் கயிறு ஏறுவது, ஒற்றைச் சுவரில் நடப்பது போன்றவற்றை, உடல் எடை அதிகமுள்ளவர்களை விடவும் எடை குறைவாக உள்ளவர்கள் செய்வது எளிது. ஆனால் மர பிளாக்குகளை தள்ளும் இடத்தில் ரவியின் பங்களிப்பு அவசியமாக இருக்கும். தான் விளையாட்டில் இருப்பதில் பார்வதிக்கு நிம்மதி. ஆனால்?
இந்தப் போட்டியில் ஜெயித்தேயாக வேண்டும் என்கிற வெறியில் காடர்கள் இருந்தார்கள். கயிற்று வலையை வேகமாக கடந்து வந்த உமாபதி, மிகவும் தொங்கிய கயிற்றில் அநாயசமாக ஏறி மணியை முதலில்அடித்து விட்டார். ஆனால் பின்னால் வந்து சேர்ந்த, வேடர்கள் அணியின் ஐஸ்வர்யாவால் கயிற்றில் தொங்கிக் கொண்டே மணியை அடிக்க முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டார். இதனால் சில நிமிடங்களை அவர்கள் இழக்க வேண்டியிருந்தது.
காடர்கள் அணி வேகமாக முன்னேறிக் கொண்டிருந்ததால் வேடர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது. என்றாலும் “நிதானமா பார்த்து பண்ணு ஐஸ்வர்யா’’ என்று ஊக்கம் அளித்தார்கள். ஊரே ஒரு திசையில் செல்லும் போது நம்ம பார்வதி மட்டும் அந்தப் பக்கம் செல்லலாமா? “இந்த முந்திரிக்கொட்டை ஐஸ்வர்யா எல்லாத்திலேயும் நானு நானு-ன்னு வந்து முன்னாடி நிக்குது. இப்ப பாத்தீங்களா... கயித்துல பல்லி மாதிரி தொங்கி தடுமாறுது. கேமராவுல தான் மட்டும் தெரியணும்னு ஆசை” என்பது போல் சகட்டுமேனிக்கு கவியரங்கத்தை தொடர்ந்து கொண்டிருந்தார். (ஆனால் பார்வதிக்கே ஒரு பெரிய ஆப்பு பின்னால் வந்தது).
ஒற்றைப் பாலத்தை தாண்டும் ஏரியாவில்தான் காடர்கள் அணி பயங்கரமாக சொதப்பியது. முதலில் சென்ற நந்தா ஒரு மாதிரியாக தட்டுத்தடுமாறி சென்று விட்டார். ஆனால் பின்னால் வந்த ஐஸ்வர்யா இதற்கு மிகவும் தடுமாறியது ஆச்சரியம். அவர் கையையும் உபயோகப்படுத்தி குழந்தை போல் தவழ்ந்து வர முயல, முடிச்சை அவிழ்த்துக் கொண்டிருந்த எதிரணியினர் இதைக் கவனித்து விட்டு ‘‘Foul... Foul’’ என்று கத்தினார்கள்.
உண்மையில் போட்டியின் கண்காணிப்பாளராக இருந்த அர்ஜூன்தான் இதைப் பார்த்து எச்சரித்திருக்க வேண்டும். ஆனால், அவர் ஏனோ பெரும்பாலான சமயங்களில் அமைதியாகவே இருந்தார். (ரொம்ப கஷ்டப்படறாங்களேன்னு பரிதாபம் பார்த்தாரோ என்னவோ).
ஐஸ்வர்யாவைப் போல பார்வதியும் ஒற்றைப் பாலத்தைக் கடப்பதில் கடைசி வரை மிகவும் சிரமப்பட்டார். ‘ஒரு சிறிய விஷயத்தைச் செய்து முடிப்பதற்குள் தானே ‘ததிங்கினத்தோம்’ போடுகிறோமே… ஐஸ்வர்யாவை மட்டும் கிண்டலாக விமர்சிக்கிறோமே...’ என்று கூட பார்வதிக்குத் தோன்றாதது ஆச்சர்யம்.
இவர்கள் ஒவ்வொருவரும் இப்படி தடுமாறிக் கொண்டிருக்கும் போது அம்ஜத் இன்னொரு உத்தியைப் பின்பற்றினார். ஒற்றைச் சுவரில் அடி மேல் அடி வைத்து தடுமாறிக் கொண்டிருக்காமல், ஒரே அடி மட்டும் வைத்து அப்படியே தாவிக் குதித்து விடலாம் என்று அவர் செய்த முயற்சி வெற்றி அளித்தது. இதையே பின்பற்றி ஐஸ்வர்யா, லட்சுமிபிரியா ஆகியோரும் வந்து சேர்ந்தார்கள். ஆனால் நாராயணனும் பார்வதியும் கடைசி வரை போராடிக் கொண்டிருந்தார்கள். நாராயணன் கூட ஒரு மாதிரியாக சென்று விட்டார். ஆனால் பார்வதி…
‘நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் வாய்தான் காது வரை கிழிகிறது’ என்ற பிரபலமான திரைப்பட வசனம் உண்டு. பார்வதி, திறமைசாலியோ இல்லையோ... ஆனால் வாய் மட்டும் மண்டை உச்சி வரை நீள்கிறது.
காடர்கள் அணி அனைத்து தடைகளையும் தாண்டி புதிர் அவிழ்க்கும் ஏரியாவுக்குச் சென்று சேர்ந்து சில நிமிடங்கள் கடந்த பிறகுதான் வேடர்கள் அணியால் அங்கு வந்து சேர முடிந்தது. ஆனால் இது முயல் – ஆமை கதையின் முடிவு மாதிரியே ஆகி விட்டது.
‘Puzzle ஏரியா என் பொறுப்பு... நீங்க யாரும் எதுவும் பிளான் பண்ண வேண்டாம்... நான் சொல்ற மாதிரி பெட்டிகளை நகர்த்திக் கொடுங்க அது போதும்” என்று லட்சுமிபிரியா முன்பே தெளிவாக சொல்லியிருந்தார். அவரது அணியினரும் அதைச் சரியாகப் பின்பற்றினார்கள். எனவே சற்று தாமதமாக வந்தாலும் வேடர்கள் அணி மளமளவென்று முன்னேறியது.
இந்தச் சவாலில் இந்தப் பகுதிதான் போட்டியாளர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது. புதிரை எப்படி அவிழ்க்க வேண்டும் என்கிற சிக்கல் ஒரு பக்கம் இருந்ததென்றால் பெரிய பெரிய மரப்பெட்டிகளை தள்ள வேண்டிய சிரமம் இன்னொரு பக்கம் இருந்தது. பெட்டியின் இடையில் நந்தாவின் கால் மாட்டிக் கொண்டு அவர் வலியால் அலறிய சிறு விபத்துக்களும் நடந்தன.
“இந்த இடத்துல நான் இருந்திருந்தேன்னா பெட்டிகளைத் தள்றதுக்கு உபயோகமா இருந்திருப்பேன்... பார்வதியால வெயிட்டை தள்ள முடியாது" என்று ஆதங்கத்தில் ரவி சொல்லிக் கொண்டிருக்க, “ஏன்... நாங்க செய்ய மாட்டோமா. என்னால முடியாதா… செஞ்சு முடிச்சோம்ல” என்று அனத்தல் கவியரங்கத்தின் கிளைமாக்ஸுக்கு சென்று கொண்டிருந்தார் பார்வதி.
சில சிறிய அசைவுகளை சரியாக திட்டமிடாமல் காடர்கள் அணி சொதப்பியதால் மூன்றாம் முறையாக தோல்வியைச் சந்தித்தது. வேடர்கள் அணி வெற்றி பெற்றது. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்த வெற்றி இது. இதற்கு பிரதான காரணம், புதிர் பகுதியை சரியாக திட்டமிட்ட லட்சுமி பிரியாதான். தங்கள் அணியின் பிளாக்குகளை திட்டமிட்ட அவர், எதிரணி செய்த தவறுகளையும் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டேயிருந்தது சிறப்பான விஷயம்.
“வாழ்த்துகள் வேடர்கள்... உங்களுக்கான வெகுமதி உணவு சம்பந்தமானது. என்னன்னு தெரியுமா?” என்று அர்ஜூன் கேட்டதும் “மசாலா கிடைச்சா நல்லாயிருக்கும் சார்… உப்பு காரம் இல்லாம நாக்கு செத்துப் போயிருக்கு” என்று ஆவலாக கேட்டார் ரவி. அவரின் எதிர்பார்ப்பு உண்மையாகி விட்டது. பரிசாக வந்த விதவிதமான மசாலாக்களை பார்த்ததும் வேடர்கள் அணியின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன; காடர்கள் அணியின் கண்களில் ஆதங்கம் தெரிந்தது.
“எங்கள் அணியின் தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன்” என்று இந்தச் சமயத்தில் விஜயலட்சுமி சொன்னது நல்ல முன்னுதாரணம். ஓர் அணித் தலைவர் செய்ய வேண்டியது இதுதான். கடந்த முறை காயத்ரி இதைச் செய்யத் தவறியதால்தான் அவப்பழிக்கு ஆளானார்.
தோற்றுவிட்ட காடர்களை வெறுப்பேற்ற இன்னொரு வேலையையும் செய்தார் அர்ஜூன். வெற்றி பெற்ற அணியின் தலைவரான அம்ஜத்துக்கு ஒரு பெரிய ஜார் நிறைய பழரசத்தை பரிசாகத் தந்தார். அதை அங்கேயே குடித்து முடிக்க வேண்டுமாம். ஒரேயொருவருடன் மட்டும் பகிர்ந்து கொள்ளலாமாம். (என்னவொரு அராஜகமான விதி?!)
இதற்காக லட்சுமி பிரியாவை அம்ஜத் தேர்ந்தெடுத்தது சரியான தேர்வு. “மன்னிச்சுடுங்க நண்பர்களே” என்று தாடி மீது பழரசம் வழிய வழிய ஆனந்தமாக குடித்துத் தீர்த்தார் அம்ஜத். இதர அனைவரும் எச்சில் விழுங்கியபடி இதை காண்டுடன் வேடிக்கை பார்த்தார்கள்.
“எனக்கு ஏன் ஜூஸ் தரவில்லை”என்று பார்வதி புலம்பியது நல்ல வேளையாக நமக்கு காட்டப்படவில்லை. பாவம், எடிட்டிங் டீமே சோர்ந்து போய் கண்கள் செருகி கீழே விழுந்திருப்பார்கள் போலிருக்கிறது.
“அடுத்த முறை தட்றோம் தூக்கறோம்..’ என்கிற வீர சபதத்துடனும், பழரசம் பறிபோன ஏக்கத்துடனும் காடர்கள் அணி அங்கிருந்து சென்றது. அடுத்த முறையாவது சவாலில் வெல்வார்களா?
பார்த்துடுவோம்!
source https://cinema.vikatan.com/television/survivor-tamil-reality-shows-11th-episode-review
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக