புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு வரையறைக்காக நடைபெறாமல் இருந்த ஊரக உள்ளாட்சி தேர்தல், அண்மையில் அறிவிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் 6, 9 தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் பரபரப்பாக இயங்க தொடங்கிவிட்டனர். சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் இருந்த கட்சிகள் அனைத்தும், தொடர்ந்து கூட்டணியிலேயே நீடிப்பது குறித்தும், வெளியேறுவது குறித்தும் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டன. அதன்படி, கடந்த 14-ம் தேதி அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாமக தலைவர் ஜி.கே.மணி, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக தெரிவித்திருந்தார். அந்த அறிவிப்பு மூலம் அதிமுக உடனான கூட்டணியை முடிவுக்குக் கொண்டுவந்தது பாமக. பின்னர் உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமே தனித்துப் போட்டி என்ற விளக்கத்தையும் அளித்தது பாமக.
கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்தது குறித்து கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாக வெளியான சில தகவல்கள் மேலும் அரசியல் களத்தில் பரபரப்பை கூட்டியது.
பதிலுக்கு முன்னால் அமைச்சர் ஜெயக்குமாரோ... "எங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவதால் அவர்களுக்குத் தான் பாதிப்பு. யாருடைய கட்டாயத்தால் இந்த முடிவெடுத்தார்கள் என தெரியவில்லை" என்று பேசி அனலைக் கூட்டியிருந்தார்.
Also Read: உள்ளாட்சித் தேர்தல்: லட்சக்கணக்கில் ஏலம்போன ஊராட்சித் தலைவர் பதவிகள்?! - விழுப்புரத்தில் பரபரப்பு
பாமக செய்தி தொடர்பாளர் பாலு, "பாமக தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறது. அதிமுக-வோடு முரண்பாடு ஏற்பட்டது போல ஒரு தோற்றம் உருவாகியுள்ளது. அது உண்மை அல்ல" என்று கூறியிருந்தார். பாமக தரப்பிலிருந்து அடுத்தடுத்து வந்த பதில்கள், 'கூட்டணி இல்லை... ஆனா இருக்கு!' என்பது போல இருந்தன. இது தொடர்பான பேச்சுக்கள் அச்சமயத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தன.
இப்பேச்சு அரசியல் வட்டாரத்தில் நடைபெற்றதோடு மட்டுமின்றி, அதன் தொடர்ச்சியாக "தந்தை, மகன் இடையே உரசல் வந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க-வுடன் இணைந்துச் செல்லும் மூடில் இருக்கின்ற வட மாவட்ட பா.ம.க நிர்வாகிகள், அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனராம். அன்புமணியின் ஆப் தி ரிக்கார்டு உத்தரவுப்படியே இந்த பேச்சுவார்த்தை நடந்ததாம். இந்த விவகாரம் அறிந்து தோட்டமே அதிரும்படி கர்ஜித்தாராம் ராமதாஸ்" என்று தகவலை பகிர்ந்திருந்தார் கழுகார். அவர் சொன்னது போலவே, ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவை பா.ம.க நிர்வாகிகள் பெரும்பாலும் விரும்பவில்லையாம். பொதுவாகவே அனைத்து கட்சிகளை காட்டிலும் தலைமை முடிவுக்கு விசுவாசத்தோடு இருப்பவர்கள் பா.ம.க தொண்டர்கள் தான். ஆனால், தோட்டத்து தலைமையின் இந்த முடிவுக்கு மறுபேச்சு பேச முடியாமல்... மௌனமாக கட்சி தாவும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனராம் பா.ம.க-வின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும்.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வசித்துவரும் விழுப்புரம் மாவட்டத்திலேயே தற்போது பா.ம.க சிறிது ஆட்டம் கண்டு, கூடாரம் சிதற துவங்கியுள்ளது என்பதை நடைபெற்று வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் வெளிப்படுத்தி வருகின்றன. பா.ம.க தலைமையுடனான முரண்பாட்டால் பலநூறு பா.ம.க தொண்டர்களுடன், முக்கிய நிர்வாகிகளும் நேற்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்துள்ளனர். மரக்காணம் மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவர் பா.ம.க-வில் இருந்து விலகி தன் ஆதரவாளர்களுடன் சென்று தி.மு.க-வில் இணைத்துக்கொண்ட செய்தி, அமைச்சர் மஸ்தானுடைய முகநூல் பக்கத்திலேயே பதிவிடப்பட்டுள்ளது. அதேபோல, ஒலக்கூர் மேற்கு ஒன்றியத்திலும் முக்கிய நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கணக்கான பா.ம.க தொண்டர்கள் அமைச்சர் மஸ்தான் முன்னிலையில் தங்களை தி.மு.க-வில் இணைந்து கொண்டுள்ளனர்.
இப்படியாக ஒருபுறம் பா.ம.க கூட்டம் கொஞ்சம் தி.மு.க-வில் ஐக்கியமாக... மற்றொரு புறமாக, மாநில பொறுப்பில் இருக்கும் முக்கிய பா.ம.க நிர்வாகி ஒருவரின் தலைமையில், ஆயிரக்கணக்கான பா.ம.க-வினர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி பா.ம.க வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: பாமக: மாவட்ட அளவில் அதிமுக-வுடன் பேச்சுவார்த்தை?! - கூட்டணி நிலைப்பாட்டில் தடுமாறுகிறதா?
அந்த மாநில நிர்வாகியின் தலைமையில், முக்கிய நிர்வாகிகள் பலரும் நேற்று (22.09.2021) மாலை முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பின் போது பா.ம.க-விலிருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைவது பற்றி ஆலோசனை மேற்கொண்டனராம். இச்சந்திப்பு தொடர்பான தகவல் மற்றும் புகைப்படங்கள் வாட்ஸ் அப் மூலம் வெளியாகி மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
வரும் 27.09.2021 அன்று விழுப்புரம் அ.தி.மு.க கட்சி அலுவலகத்திற்கு வருகை தர இருக்கிறாராம் முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அப்போது ஆயிரக்கணக்கான பா.ம.க தொண்டர்களை ஒருங்கிணைத்து அ.தி.மு.க-வில் இணைய உள்ளனராம் நேற்று சி.வி.சண்முகத்தை சந்தித்த முக்கிய பா.ம.க நிர்வாகிகள். இந்த தகவல் தைலாபுரம் தோட்டத்திற்கு தெரியவர, சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையும் நடந்துள்ளதாம்.
தற்போது 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுவிட்டது. தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த பா.ம.க கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் வெளியேறி அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளில் ஐக்கியமாகி வருவது... உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமல்ல, பா.ம.க-வின் வாக்கு வங்கியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்கின்றனர் சிலர். பா.ம.க நிறுவனரான ராமதாஸ் வசித்துவரும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளே மாற்றுக் கட்சியில் இணைவதில் மும்முரம் காட்டிவரும் செயலால் பா.ம.க-வின் தனித்துப் போட்டி முடிவு யாருடைய முடிவு என பல கேள்விகள் எழாமல் இல்லை!
source https://www.vikatan.com/government-and-politics/politics/local-elections-pmks-cadres-split-from-the-party-and-join-the-alternative-party
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக