Ad

புதன், 18 ஆகஸ்ட், 2021

வரம் தரும் வரலட்சுமி விரதம்... கடைப்பிடிப்பது எப்படி? - விளக்குகிறார் ரேவதி சங்கரன்! #Video

நம்முடைய தர்மத்தின் ஆணிவேர்களாகத் திகழ்பவர்கள் பெண்கள். சுமங்கலிகளை, இல்லத்தரசிகளை கிரகலட்சுமியாகப் போற்றுகின்றன ஞான நூல்கள். வீட்டில் நடைபெறும் நல்ல காரியங்களுக்கு நாள் குறிக்க வேண்டும் என்றால், கிரகலட்சுமியாக இருக்கும் அந்தப் பெண்ணின் நட்சத்திரத்தை வைத்துத்தான் நாள் குறிக்க வேண்டும். குடும்பப் பெண் கண்ணீர் சிந்தினால் அந்த வீட்டுக்கு ஆகாது. அதனால்தான், ‘குடும்பப் பெண் கண்ணீர் விட்டால் கொடி சீலை தானாய் பற்றி எரியும்’ என்ற வழக்கு மொழி ஏற்பட்டது.

நித்திய ஹோமம் நடைபெறும் வீட்டில், மனைவி கையினால் கொடுக்கப்படும் அரிசியை வாங்கும் கணவன், அந்த அரிசியை இரு பாகமாகப் பிரித்து அக்னி தேவதைக்கு அவிர்பாகம் கொடுக்க வேண்டும். மனைவி இல்லாதவர் செய்யும் எந்த யாகமும் தேவதைகளைச் சென்று அடையாது என்பது சாஸ்திரம்.

வரலட்சுமி விரதம்

பெண்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இந்து தர்மத்தில், சுமங்கலிப் பெண்கள் சேர்ந்து செய்யும் விசேஷ பூஜைதான் வரலட்சுமி விரத பூஜை. வேண்டும் வரத்தை அருள்பவள் வரலட்சுமி. அஷ்டலட்சுமிகளின் ஐக்கிய ஸ்வரூபமே வரலட்சுமி திருவடிவம். வரலட்சுமியை விரதமிருந்து பூஜித்தால், குடும்பம் குறைவின்றி சிறக்கும்.

கணவர் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெறுவார். குழந்தைகளுக்கு அனைத்து பேறுகளும் ஸித்திக்கும். இந்த அளவுக்கு மகிமைமிக்க வரலட்சுமி பூஜை தென் மாநிலங்களில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. வரலட்சுமி விரதம் அம்பாளுக்கு மிகவும் விசேஷமான ஆடி மாதத்தில் இரண்டாம் வெள்ளி அல்லது பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளியில் கொண்டாடப்படுகிறது.

முற்காலத்தில் மகத நாட்டின் குந்திணா என்ற கிராமத்தில் வசித்த சாருமதி என்ற பெண்ணின் கனவில் மகாலட்சுமி தோன்றி, வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கும்படியும், அதன் பலனாக வேண்டிய அனைத்தையும் அருள்வதாகவும் கூறினாள். சாருமதியும் அந்தக் கனவைப் பற்றித் தன் கணவரிடமும், புகுந்த வீட்டினரிடமும் தெரிவித்தாள். அவர்களின் ஒத்துழைப்போடு கிராமத்தில் இருந்த மேலும் சில சுமங்கலிப் பெண்களும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்தனர். அதனால் தாங்கள் வேண்டிய வரங்கள் அனைத்தையும் பெற்றனர் என்று வரலட்சுமி விரத மகாத்மியம் கூறுகிறது.

இந்த விரதத்தை ஆண்டுதோறும் கடைப்பிடித்துவந்தால் மனதில் எப்போதும் ஆனந்தம் நிலைத்திருக்கும். குறைவற்ற செல்வம், புத்திரபாக்கியம், ஆரோக்கியம், நினைத்தது நிறைவேறுதல் என அவரவர்க்கு ஏற்ப வரலட்சுமி வரமாக அருள்வாள். ஸ்ரீசூக்தம், மகாலட்சுமி அஷ்டகம் கனகதாரா ஸ்தோத்திரம் என்று நமக்குத் தெரிந்த ஸ்லோகங் களைப் பாராயணம் செய்யலாம்.

பெருந்தேவி தாயார்

நின் நினைவே நீங்கா இடம் பெறவே

நித்தம் உனை நினைத்து வினை அறவே

நீங்கா புகழ் பெறவே நீ என்றும்

நின் பதியுடனே நெஞ்சில் நிறைந்திடுவாய்

வரலட்சுமி தாயே!

என்று மனமுருகி அவளை வணங்கினால் அவள் அருளால் நமது துன்பங்கள் தீர்ந்து வாழ்வில் சகல சௌபாக்கியங்களோடு வாழ்வோம் என்பது திண்ணம்.

இப்படிப்பட்ட பவித்ரமான விரதத்தைக் கடைப்பிடிப்பது எப்படி என்று தன் அனுபவத்தைப் பகிர்கிறார் ரேவதி சங்கரன். பலர் வீடுகளில் இன்று இவற்றைச் சொல்லித் தர வயதான பெண்கள் இல்லாத நிலையில் ரேவதி சங்கரனின் இந்த பகிர்தல் மிகவும் ஆர்வமூட்டுவதாகவும் பயனுள்ளதாகவும் அமைகிறது. இதுகுறித்து அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.



source https://www.vikatan.com/spiritual/gods/glory-of-varalakshmi-vratham

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக