தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று திருவள்ளூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து, நேரடி நெல் கொள்முதல் பணியினையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
நெல் கொள்முதல் நிலையத்தைத் திறந்து வைத்து விட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், "திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா நெல் பயிரிடப்படுகிறது. அந்த நெல் முறையான வகையில், இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளிடமிருந்து கூட்டுறவுத் துறை மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு உரிய விலை வழங்கப்படுகிறது.
முந்தைய அதிமுக ஆட்சியில், மாவட்டத்தில் 12 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது 46 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இவற்றை 62 ஆக உயர்த்த அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக சுமார் 70 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்லை பெற முடியும். நெல் கொள்முதல் தொடர்பாகப் புகார் ஏதும் இருப்பின் விவசாயிகள் கட்டணமில்லா தொலைபேசி எண் 18005997626, வாட்ஸ்-அப் எண் 9840327626 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தங்கள் குறைகள் மற்றும் புகார்களைத் தெரிவிக்கலாம்" என்றார்.
தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் ராஜேந்திர பாலாஜி பா.ஜ.க-வில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருப்பதைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்ப அமைச்சர் நாசர், "தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, அதிமுக அரசின் பல அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில், தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தண்டிக்கப்படுவது உறுதி. அவர் பா.ஜ.க-வுக்கு சென்று விட்டால் மட்டும் விட்டு விடுவோமா!" என்று காட்டமாகப் பதில் கூறி விட்டு நகர்ந்தார்.
அமைச்சர் நாசரின் இந்த பேச்சு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பை கலக்கத்தில் ஆழ்த்தியிருப்பதாக அதிமுகவினர் முணுமுணுத்து வருகின்றனர்.
Also Read: `சொத்துக்குவிப்பு வழக்கு டு ஆவின் முறைகேடு... இறுகும் பிடி!' - பாஜக-வில் இணைகிறாரா ராஜேந்திர பாலாஜி?
source https://www.vikatan.com/government-and-politics/politics/minister-avadi-nassar-slams-former-admk-minister-rajendra-balaji
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக