கோவையிடம் பெற்ற அபார வெற்றி, திருப்பூரை புதுப் பொலிவோடு உயிர்த்தெழ வைத்திருந்தது. இன்னொரு பக்கம், திண்டுக்கல் உடனான ஒரு வெற்றியைத் தவிர வேறு எந்தத் தாக்கத்தையும் இத்தொடரில் இதுவரை ஏற்படுத்தாத மதுரைக்கு, இனிவரும் போட்டிகள் ஒவ்வொன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.
டாஸை வென்ற திருப்பூரின் மொகம்மத், சேஸிங்கைத் தேர்ந்தெடுத்தார். இருபுறமும் சில வீரர்கள் மாற்றப்பட்டிருந்த நிலையில், மதுரை அருண் கார்த்திக்கை ஓப்பனிங்கில் இறக்காமல், ப்ரவீன் குமார் மற்றும் சுகேந்திரனை முதலில் இறக்கி வியப்பூட்டியது. முதல் ஓவரை வீசிய மொகம்மத், அதில் ஒரு ரன்னை மட்டுமே தர, வீரர்களின் வரிசையில் மதுரை தவறிழைத்து விட்டதோ, இதனால் அவர்கள் மிகப்பெரிய இழப்பைச் சந்திக்க நேருமோ என்ற கருத்து உருவானது. ஆனாலும், மிகப் பிரமாதமாகத் தொடரவில்லை எனினும் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டத்தின் காட்டத்தைக் கூட்டத் தொடங்கியது மதுரை. அவ்வப்போது வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் பவுண்டரிக் கோட்டை பந்தைத் தொட்டு வர வைக்க, திருப்பூரும் திருப்பிக் கொடுத்தது, சுகேந்திரனின் விக்கெட் வாயிலாக.
பவர்பிளே இறுதியில் 43/1 என ஸ்கோர் போர்டு காட்ட, அது குறைவான ஸ்கோருக்குரிய அடித்தளமாகவே காணப்பட்டது. ப்ரவீன் - அனிருத் கூட்டணி, மெதுவாகவே தொடருவோம், விக்கெட் நின்று விட்டால் போதும், டெத் ஓவர்களில் பார்த்துக் கொள்ளலாம் எனக் காத்திருந்து, அவ்வப்போது மட்டுமே பெரிய ஷாட்டுக்குப் போய் ஆறுதல்பட்டுக் கொண்டனர். அடுத்த 6 ஓவர்களும் நகர, மொத்தம் 89 ரன்களை நிதானமாகச் சேர்த்திருந்தனர்.
'விக்கெட்டுக்குப் பஞ்சம்' என்ற நிலையில், அதை உடனே தீர்க்கும் முடிவோடு, கருப்பசாமி தனது முதல் ஓவரை வீச இறக்கப்பட, , அடுத்த சில நிமிடங்களில் அவர் இடியை இறக்கினார். வீசிய முதல் பந்திலேயே அனிருத்தை லாங் ஆஃபில் இருந்த கிறிஸ்டிடம் கேட்ச் கொடுக்க வைத்து வெளியேற்றி, வெறி அடங்காது அடுத்த பந்தை ஷார்ட் பாலாக வீசி, ப்ரவீன் குமாரையும் திணற வைத்து திருப்பி அனுப்பினார்.
இரண்டு முக்கிய விக்கெட்டுகள், அதுவும் அடுத்தடுத்த பந்துகளில். சற்றே மலைத்துத்தான் போனது மதுரை. ஆனால், அந்த விக்கெட்டுகளே விழாமல் இருந்திருக்கக் கூடாதா என ஒட்டுமொத்த திருப்பூரின் தரப்பே கலங்கும் வகையில்தான், அதற்குப்பின் காட்சிகள் அரங்கேறின.
கேப்டன் ஷதுர்வேத்தும், மதுரையின் நம்பிக்கை நாயகன் கௌசிக்கும் கை கோத்தனர். முதல் இரண்டு ஓவர்கள், வெள்ளைக் கொடி காட்டி, அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்கள் போல் ஆடிக் கொண்டிருந்தவர்கள், அதற்குப்பின் வேறு வேடம் பூண்டு, வேட்டையாடத் தொடங்கினர். 15-வது ஓவரில், கருப்பசாமியின் பந்தை லாங் ஆனில் பறக்க விட்டு, ஒப்பந்தத்தை மீறி பந்தை எல்லையைத் தாண்ட வைத்தவர்கள். அதற்குப் பிறகு, களத்தில் சூடு பறக்க விட்டனர்.
திருப்பூர் பௌலர்களும், லைனையும், லெங்த்தையும் பத்தாம் வகுப்பில் படித்த வரிசைமாற்றம் மற்றும் சேர்க்கை விதிகளைப் பயன்படுத்தி வெவ்வேறு வகையாக வீசிப் பார்த்தார்கள். ஆனால், இவ்விருவரும் 'யார் போட்டாலும் அடிப்போம், எப்படிப் போட்டாலும் அடிப்போம்' என்னும் மோடுக்கு மாறி பௌலர்களைக் கலங்கடித்தனர். ரன்மழையோடு விக்கெட்டுகளும் விழாமல் போக, திருப்பூர் செயலற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.
இறுதி ஓவரில் விழுந்த கௌசிக்கின் விக்கெட்டை எடுத்ததற்காக ஆறுதல்பட்டுக் கொள்வதா, இல்லை மொகமத்தையே வறுத்தெடுத்து, கடைசி ஓவரில் அவர்கள் சேர்த்த 18 ரன்களை நினைத்து பெரும் வேதனைப்படுவதா என்று திருப்பூரே குழம்பிப் போனது. 184 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மதுரை. இத்தொடரில் அவர்களது அதிகபட்ச ஸ்கோர் இது. இறுதி ஆறு ஓவர்களில் மட்டும் 88 ரன்களைத் துரிதக் கதியில் குவித்திருந்தது மதுரை.
185 ரன்கள் கடின இலக்கே என்றாலும், பிளே ஆஃப்புக்கான அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருப்பதால், திருப்பூர் சரணடையாது வாளேந்திப் போராடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மதுரை உத்வேகத்தை விட இப்போட்டியில் உக்கிரத்தோடு ஏகாதிபத்தியம் செய்தது. களமிறங்கிய தினேஷ் மற்றும் அரவிந்த்துக்கு இளைப்பாறும் நேரம் கூட கொடுக்கப்படவில்லை. வீசிய முதல் ஓவரிலேயே சிலம்பரசன், தினேஷின் ஸ்டம்பை நோக்கி பந்தை அனுப்பி அதைத் தகர்த்தார். 'அடுத்த விக்கெட்டுகள் இன்னும் சில நிமிடங்களில்' என அறிக்கை வாசித்து, அரவிந்தையும் ரன் அவுட்டாக்கி அனுப்பி வைத்தனர். அதுவும், டீப் ஃபீல்டிங் பொசிஷனில் இருந்தெல்லாம் டைரக்ட் ஹிட் செய்து ஸ்டம்பைச் சிதறச் செய்து அசத்தியது மதுரை.
ஓப்பனர்கள் இருவர் மட்டும் போதாதென்று, மான் பாஃப்னாவின் விக்கெட்டையும் அடுத்த ஓவரிலேயே மதுரை வீழ்த்த, மூன்று விக்கெட்டுகளை பவர் பிளேயிலேயே பறிகொடுத்து பரிதவித்தது திருப்பூர். இலக்கு அதிகமென்பதால், அவசரகதியில் ரன்சேர்க்க விழைந்து விலையாக விக்கெட் பரிமாற்றம் செய்திருந்தனர்.
35/3 எனத் தவித்தாலும், 'ரோக்கின்ஸ் இருக்க பயம் ஏன்?', எனச் சற்றே அசிரத்தையாகத்தான் திருப்பூர் இருந்தது. அவரையும் ஆஷிக் வந்த வேகத்தில் இரண்டாவது பந்திலேயே வொய்ட் லாங் ஆஃபில் கௌசிக்கிடம் கேட்ச் கொடுக்கச் செய்து வழியனுப்பினார். கௌசிக் ஓடியபடியே அற்புதமாக அந்தக் கேட்சைப் பிடித்திருந்தார். பேட்டிங்கையும், ஃபீல்டிங்கையும் ஒருகை பார்த்தாயிற்று, பௌலிங்கை மட்டும் ஏன் பாக்கி வைக்க வேண்டுமென கௌசிக் இறங்கிவர, அவருக்கு இப்போட்டியில் தொட்டதெல்லாம் துலங்கியது.
கௌசிக் வீசிய பந்து, கருப்பசாமியிடம் உதைபட்டு ஆஷிக்கிடம் சென்று சேர, அவரோ போன முறை பந்தைப் பிடித்து கேட்சாக்கிய கௌசிக்கிற்கு பிரதி உபகாரமாக, இந்தக் கேட்சைச் சிறப்பாகப் பிடித்தார். அதற்கடுத்த இரண்டு விக்கெட்டுகளையும், பத்து ஓவருக்குள்ளாகவே திருப்பூர் இழந்து விட, 38/7 என திடுக்கிட வைத்தது திருப்பூரின் ஸ்கோர் கார்டு.
இந்தக் கட்டத்தில் மதுரை ஜெயித்திருந்தால் அது அவர்களது ரன்ரேட்டை எகிற வைத்திருக்கும். ஆனால், ராஜ்குமாரும், துஷாரும் அதற்கு வரமளிக்காது கெட்டியாக விக்கெட்டை அடுத்த ஐந்து ஓவர்கள் அடைகாத்தனர். இடையில், ஆஷிக்கின் ஓவரில், ஆசை தீர ராஜ்குமார் மூன்று பெரிய ஷாட்களைக் காட்டினார்.
Also Read: TNPL: மாஸ் காட்டிய திருச்சியின் பௌலிங் படை... பிளே ஆஃப் வாய்ப்பைத் தவறவிட்டதா சேலம்?
ஆட்டம் காட்டிய இந்த இணையை கௌதம், துஷாரை அனுப்பிப் பிரிக்க, ராஜ்குமார் மட்டும் விட்டுக் கொடுக்காமல் விடாப்பிடியாகப் போராடினார். ஆனால், விதி வலியதாக, ரன் அவுட் வடிவில் வந்தது. கிறிஸ்ட் எதிர் கொண்ட பந்தை, 'பிடித்துக் கொள்!', என பௌலர் கௌசிக்கிடமே திருப்பிவிட, அது அவரது விரலைத் தீண்டி நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் கிரீஸுக்கு வெளியே இருந்த ராஜ்குமாருக்கு விடை தந்து ஸ்டம்புடன் சிநேகமானது. 28 பந்துகளில் 42 ரன்களைக் குவித்து, மதுரையை மிரளச் செய்திருந்த ராஜ்குமார் வெளியேறினார். வாஸ்து சரியில்லாததைப் போல், திருப்பூரின் இன்னிங்சில் நான்கு முறை அடிவாங்கியது ஸ்டம்ப். வெற்றிக்கெல்லாம் வாய்ப்பில்லை, அது எப்போதோ மாற்றுப் பாதையில் மதுரைக்குச் சென்றுவிட்டது என உணர்ந்தாலும், ராஜ்குமார் ஒற்றை வீரராகப் போராடி இருந்தார்.
100-வது பந்தில், ராஜ்குமாரின் விக்கெட் விழுந்தபின், எப்படியோ 100 ரன்களைத் தத்தித் தத்தியே சேர்த்துவிட்டது திருப்பூர். 'தொடங்கிய நானே முடிக்கிறேன்', என இறுதியாக மிச்சமிருந்த கிறிஸ்டையும் சிலம்பரசன் அனுப்ப, 17.4 ஓவர்கள் விளையாடி, 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது திருப்பூர். 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்ற மதுரை, ஆறாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு ட்ரிபிள் பிரமோஷனில் போய்ச் சேர்ந்துள்ளது.
ப்ளே ஆஃப்புக்கான தகுதியாளர்களை இறுதி செய்ய இன்னமும் எட்டு லீக் போட்டிகள் மட்டுமே மிஞ்சியுள்ள நிலையில், அணிகள் பட்டியலில் ஏறுவதும் இறங்குவதும், பரமபதம் விளையாட்டாக தினம் நடந்தேறும் திரைக்கதையாகத்தான் இருக்கப் போகிறது. அதற்கான டிரைலரைத்தான், திருப்பூரும் மதுரையும் காட்டி உள்ளன.
source https://sports.vikatan.com/cricket/tnpl-2021-madurai-makes-a-strong-comeback-by-thrashing-tiruppur
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக