Ad

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

தமிழகத்தில் எங்கெங்கெல்லாம் தொல்லியல் ஆய்வுகள் நடைபெறுகின்றன? | Doubt of Common Man

விகடனின் Doubt of Common Man பக்கத்தில் திவாகர் என்ற வாசகர், "தமிழகத்தில் எங்கெங்கெல்லாம் தொல்லியல் ஆய்வுகள் நடைபெறுகின்றன? அந்த ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்டவை என்னென்ன?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
doubt of common man

தமிழகத்தில் அகழ்வாராய்ச்சிகளும் அதில் கிடைக்கும் பொருள்கள் தரும் ஆச்சரியமும் நமக்குப் பழகிவிட்டன. பழந்தமிழ் நாகரிகத்தைப் பறைசாற்றும் வண்ணம் பல பொருள்கள் கிடைத்துள்ளன. களைத்துப்போட்ட சீட்டுக்கட்டு போல நம்முன் கிடக்கும் அகழ்வாராய்ச்சிச் செய்திகள் பண்டைய தமிழகம் குறித்த சமீபத்திய தரவுகள் பற்றி அறிந்துகொள்ளத் தமிழகத் தொல்லியல் துறை இயக்குநர் சிவானந்தம் அவர்களிடம் பேசினோம்.

"தமிழகத்தில் ஏழு இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடிப் பகுதி அகழாய்வுகளில் சங்ககால மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையிலான தரவுகள் கிடைத்திருக்கின்றன. நகரம் சார்ந்த வாழ்க்கையை நம் முன்னோர்கள் வாழ்ந்துள்ளதற்கான சாட்சியமாகக் கீழடி அகழாய்வுக் கண்டுபிடிப்புகள் இருக்கின்றன. தொழிற்கூடங்கள் இருந்திருக்கின்றன, சாயப் பட்டறைகள், வணிக வளாகங்கள் மற்றும் பல செங்கல் தொழிற்சாலைகள் ஆகியன அடங்கிய மேம்படுத்தப்பட்ட நகரமாகக் கீழடி இருந்துள்ளதைக் காண முடிகிறது. 10-க்கும் மேற்பட்ட சங்ககாலக் கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தொல்லியல் அகழாய்வு இயக்குநர் சிவானந்தம்

அக்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் முத்திரைக் கட்டைகள் ( இன்று இரப்பா் ஸ்டாம்ப்), எழுத்தாணிகள், அம்புகள், இரும்பு, செம்பு ஆயுதங்கள், அரிய வகை அணிகலன்கள், 18 தமிழ் எழுத்துகளுடைய மட்பாண்ட ஓடுகள் உட்பட 5300-க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருள்கள் கிடைத்துள்ளன.

அரிக்கன்மேடு, காவிரிப் பூம்பட்டினம், உறையூா் போன்ற அகழாய்வில் கிடைத்ததைவிட அதிக எண்ணிக்கையில் தொடர்ச்சியாகப் பல கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. நீர் வடிகால் அமைப்புகள், விலைமதிப்பற்ற கற்களால் ஆன மணிகள், தங்கத்திலான ஆபரணங்கள் போன்றவை கிடைத்திருக்கின்றன. இவை மேம்படுத்தப்பட்ட நாகரிக வாழ்வு இருந்ததை எடுத்துரைக்கின்றன.

இதேமாதிரி வாசகர்கள் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரைகளை வாசிக்க... இங்கே க்ளிக் செய்யவும்

தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள பொருள்கள் பெரும்பாலும் இரும்புக் காலத்தைச் சேர்ந்தவை. 18-ம் நூற்றாண்டு முதல் இங்கு அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. முதலில் ஜெர்மானிய அறிஞர்களும் பின் அலெக்சாண்டர் என்னும் ஆங்கிலேயரும் ஆய்வு மேற்கொண்டனர். 2004-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை இந்த ஆண்டுதான் வெளியிடப்பட்டது. முதன் முறையாக முழுமையான ஆய்வை மேற்கொள்ளும் நோக்கில் தற்போது பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 40க்கும் மேற்பட்ட ஈமத்தாழிகள் அதனுள் சில பாத்திரங்கள் கிடைத்துள்ளன. கறுப்பு, சிவப்பு வண்ணங்களால் ஆன தாழிகள், எலும்புக்கூடுகள், ஆயுதங்களை ஆய்வு செய்தபோது இவை கி.மு 9-ம் நூற்றாண்டைச் சார்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

கீழடி தொல்லியல் ஆய்வுப்பணி
கீழடியில் கிடைத்துள்ள பொருள்கள் கி.மு 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனில், கீழடியைவிட மூன்று நூற்றாண்டுகள் முந்தைய தரவுகள் ஆதிச்சநல்லூரில் கிடைக்கின்றன. மனிதர்கள் இறந்த பின்னர் உடல்களோடு சேர்த்து ஈமத்தாழியில் அவர்களின் உடைமைகளையும் புதைக்கும் பழக்கம் இருந்துள்ளதைப் பார்க்க முடிகிறது. இவ்வாறு புதைக்கப்பட்ட தாழிகளில் ஒட்டியிருக்கும் தானிய எச்சங்கள், துகள்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன.

இதேபோல் சிவகளைப்பரம்புப் பகுதியில் நடைபெறும் அகழ்வாராய்வு விரிவாக்கம் செய்யப்பட்டு, சுற்றியுள்ள ஸ்ரீ பராக்கிரமபாண்டி திரடு, பொட்டல் திரடு, ஆவாரங்காடு திரடு உட்பட 5 இடங்களில் ஆய்வுப்பணிகள் நடந்துவருகின்றன. இங்கு சுடுமண் பானை, இரும்பு உலோகப் பொருள்கள், பாண்டி விளையாட்டு உபகரணங்கள், களிமண் பொம்மை, களிமண் கிண்ணம், கல்லால் செய்யப்பட்ட பந்து, உலோகங்களைச் சாணை பிடிக்கும் கல், பீங்கான் வளையல், செம்பு நாணயம், பானையில் பொறிக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துகள் போன்றவைக் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மக்களின் வாழிடங்களைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Also Read: சிவகளை அகழ்வாராய்ச்சி: 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் தொன்மை! - ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள்

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்க!

கொற்கையிலும் தற்போது பணிகள் வேகமெடுத்துள்ளன. இங்கு கிடைக்கப்பெற்ற பொருள்கள் கி.மு 783-ம் ஆண்டைச் சேர்ந்தவை என ஆய்வில் தெரியவந்துள்ளது. கொற்கை பாண்டிய நாட்டின் தலைநகராகவும் துறைமுகமாகவும் இருந்துள்ளது. இரண்டாம் தமிழ்ச் சங்கம் நடைபெற்ற காலத்தில் தலைநகரமாக விளங்கிய கொற்கை கடல்வழிப் போக்குவரத்திலும் வாணிபத்திலும் முக்கியப் பங்காற்றியிருக்கும். தற்போதைய அகழாய்வில் சில கட்டுமானங்களுடன் சங்கு அறுக்கும் இடமும் கண்டறியப்பட்டுள்ளது. அறுத்த சங்கைத் தீட்டுவதற்குப் பயன்பட்ட கற்கள் சங்குகள், சங்கு வளையல் துண்டுகள், இரும்பு உருக்குத் துண்டுகள், கறுப்பு, சிவப்புப் பானை ஓடுகள், கீறல்கள் மற்றும் குறீயிடுகள் என ஏராளமான பழங்காலத்துப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் சில துளையிடப்பட்ட குழாய்கள் கண்டறியப்பட்டன. இவை வடிகட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் இவற்றின் பயன்பாடு ஆய்வுகளுக்குப் பின்னர்தான் உறுதிசெய்யப்படும்.

தொல்லியல் அகழாய்வு இயக்குநர் சிவானந்தம்

Also Read: தூத்துக்குடி: கொற்கை அகழாய்வில் 7 அடுக்கு கொண்ட செங்கல் கட்டடம் கண்டுபிடிப்பு!

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் விட்டுச் சென்ற பொருள்கள் பண்டைய தமிழர்களின் மேன்மையைப் பேசுகின்றன. நேற்றைய பட்ஜட்டில் ஏற்கெனவே 3 கோடியாக இருந்த அகழாய்வுத் துறைக்கான நிதி 5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. பழந்தமிழர்களின் சமூக வாழ்வினை வெளிப்படுத்தும் விதமாகப் பல பொருள்கள் தொடர்ந்து கிடைக்கின்றன. தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தைப் பேசும் விதமாக மேற்கண்ட ஆய்வுகள் அமைந்துள்ளன.

இதேபோல, கொடுமணல், மயிலாடுதுறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய பகுதிகளிலும் தொல்லியல் அகழாய்வுகள் நடைபெற்றுவருகின்றன. தமிழர்களின் தொன்மையை, நாகரிக வாழ்வை உலகிற்கு எடுத்துக்கூறும் வகையில் அங்கும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருள்கள், வாழிடங்கள் கண்டறியப்பட்டுவருகின்றன" என்றார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

doubt of common man


source https://www.vikatan.com/government-and-politics/archaeology/doubt-of-common-man-the-places-in-tamil-nadu-in-which-the-archaeological-excavations-are-taking-place

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக