Ad

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

சீர்காழி: 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பனைமரத்தைத் தெய்வமாக வழிபடும் பக்தர்கள்... காரணம் என்ன?!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொல்காப்பியக்குடி என்ற கிராமம் உள்ளது. இங்கு பிரசித்திபெற்ற பிரம்மசக்தி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பிரம்மசக்தி அம்மன், பிள்ளையார், முருகன், ஏழு கன்னிகைகள் உள்ளிட்ட பரிவாரத் தெய்வங்கள் தனி சந்ததிகளில் உள்ளன. இங்கு தனிச் சந்நிதியாக உள்ள வீரனுக்கு அருகில் ஒரு பனைமரம் உள்ளது. மிகவும் நீண்டு வளர்ந்து உயர்ந்துள்ள இந்தப் பனைமரம் சுமார் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது.

மிக உயரமான இந்தப் பனை மரத்திலிருந்து விழும் பனை மட்டைகள் இதுவரை யார்மீதும், எந்த விலங்குகள்மீதும் விழுந்ததில்லை. அதுபோல எவ்வளவு வேகமான பலத்த காற்றிலும் இந்தப் பனைமரம் பாதிக்கவில்லை என்பது ஆச்சர்யமான செய்தி.

பனைமரம்

இதுபற்றி கிராமத்தினரிடம் பேசினோம்.

"பனை மரத்தடியில் வீரன் சந்நிதி உள்ளது. தகரக் கொட்டகையிலுள்ள வீரன் சந்நிதியில் இதுவரை பனைமரத்தின் மட்டைகள் விழுந்தது கிடையாது. இந்தக் கோயிலில் பௌர்ணமி, அமாவாசை உள்ளிட்ட நாள்களில் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. அதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர். இங்குள்ள பிரம்மசக்தி அம்மனுக்கு எப்போதும் தலையில் வாடாத பூ இருந்துகொண்டேயிருக்கும்.

இரவும் பகலும் 24 மணி நேரமும் விளக்கு எரிந்து கொண்டேயிருக்கும். தினந்தோறும் காலை மாலை அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றுவருகின்றன. இந்தக்  கோயிலுக்கு தமிழகத்திலுள்ள பல மாவட்டங்களிலிருந்து குலதெய்வ வழிபாட்டு பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர். அப்போது பனை மரத்துக்குக் கீழேயுள்ள வீரன் சாமியை வழிபடும் பக்தர்கள், இங்கு  கம்பீரமாக உயர்ந்து நிற்கும் பனை மரத்தையும் அண்ணாந்து பார்த்து வணங்குகின்றனர். இங்குள்ள பனைமரத்தை  தெய்வமாக, எங்கள் கிராமத்தைக் காத்தருளும் கடவுளாகவே கருதுகிறோம்" என்றனர்.



source https://www.vikatan.com/spiritual/news/sirkazhi-300-year-old-palm-tree-being-worshipped-as-a-deity-by-the-devotees

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக