விகடனின் Doubt of Common Man பக்கத்தில் செல்வி என்ற வாசகர், "ஆன்லைனில் ஒரு பொருளை ஆர்டர் செய்கிறோம். அது பலரின் கரம்பட்டு நம்மிடம் வந்து சேர்கிறது. பிள்ளைகள் அதை சர்வ சாதாரணமாகத் தொடுகிறார்கள். அதன்மூலம் கொரோனா பரவுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போதுவரை உலகம் முழுவதும் பரவி மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நமது நாட்டிலும் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதுடன், முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை குறித்த அச்சம் என கொரோனா வைரஸின் கோரபிடி இன்னும் அகலாமல் உள்ளது. எதிலும் கவனம், முகக் கவசம் சானிடைசேஷன், தடுப்பூசி என மக்கள் அனைவரும் விழிப்புடன் இருந்தாலும் கொரோனா குறித்த புதிது புதிதானத் தகவல்களும், புதிதாகச் சந்தேகங்களும் எழுந்த வண்ணமே உள்ளன. நமது டவுட் ஆப் காமன்மேன் பகுதியிலும் வாசகர் ஒருவர் கொரோனா பரவல் தொடர்பான மேற்கூறிய சந்தேகத்தைக் கேட்டிருந்தார்.
அவருடைய சந்தேகத்திற்கான பதிலை அறிந்து கொள்வதற்காக மருத்துவர் கணேசனிடம் பேசினோம். இதுகுறித்து அவர் கூறியதாவது, "கொரோனா என்னும் பெருந்தொற்று சர்வ சாதாரணமாகப் பரவிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் ஆன்லைன்னில் ஆர்டர் செய்வது மட்டுமல்ல, வெளியிலிருந்து வீட்டிற்குள் கொண்டு வரும் அனைத்து பொருள்களின் மூலமாகவும் கொரோனா பரவுவதற்கான வாய்ப்புள்ளது. ஆனால் இவற்றைச் சரியாகக் கையாளும் பட்சத்தில் கொரோனா பரவுதலில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும். எந்தப் பொருளாக இருந்தாலும் அவை நம் வீட்டிற்கு வந்தவுடன், அதைச் சரியான முறையில் சானிடைஸ் செய்ய வேண்டும். கூடவே நம்முடைய கை, மூக்கு, வாய், கால் போன்ற பகுதிகளைக் கிருமிநாசினி கொண்டு முறையாகக் கழுவ வேண்டும்.
முக்கியமாக கொரோனா வைரஸ் இது போன்ற பரப்புகளில் ஆறு மணி நேரம் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கும் என்பதால், பொருள்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டிற்கு வருவதற்குள் அதில் கொரோனா இருந்தால் செயலிழந்து விடும். ஒருவேளை கடைசியில் நம்மிடம் கொடுக்கும் நபரின் மூலமாக கொரோனா பரவுகின்ற சூழ்நிலை இருந்தால், வாங்கிய பார்சலை சானிடைஸ் செய்து தனியாக வைத்துவிடவும். பின் ஆறு மணி நேரத்திற்குப் பின் அல்லது அரைநாள் கழித்து அவற்றை எடுத்துப் பயன்படுத்தலாம். அப்போது கொரோனா வைரஸ் இருந்திருந்தாலும் செயலிழந்து இருக்கும்.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் கொரோனா வைரஸ் வெயில் பட்டாலே செயலிழந்துவிடும். அதனால் வெளியில் இருந்து வரும் பொருள்களை சானிடைஸ் செய்தலே போதுமானது. இதற்காகப் பெரிதும் பயப்படத் தேவையில்லை" எனக் கூறினார்.
இதேபோல, உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்க!
கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனாவை எதிர்த்துப் பல விதங்களில் போராடி வருகிறோம். குறிப்பாக முகக்கவசம் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது, கை, கால்களைக் கழுவி சுத்தமாக வைத்திருப்பதைப் போன்றே, வெளியில் இருந்து எந்தப் பொருளை வாங்கி வந்தாலும் அவற்றைப் பயன்படுத்தும் முன் சானிடைஸ் செய்வதன் மூலம் கொரோனா பரவுவதைத் தடுக்கமுடியும் என்பதால் பெரிதாக அச்சப்படத் தேவையில்லை.
இதுபோலவே, உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/doubt-of-common-man-can-the-coronavirus-spread-through-the-things-we-bought-online
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக