Ad

புதன், 18 ஆகஸ்ட், 2021

கொடநாடு விவகாரம்: `ரகசிய வாக்குமூலம்; எனது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது?!' -கொதித்த எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவைக்குக் கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்த அதிமுக உறுப்பினர்கள், கொடநாடு விவகாரம் தொடர்பாகக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரினர். ஆனால் பட்ஜெட் விவாதம் காரணமாக அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொடநாடு விவகாரத்தை திமுக எதற்காக தற்போது கையிலெடுத்திருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், " எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அதிமுகவினர் செயல்படுகின்றனர். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். கொடநாடு வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை. யாரும் அச்சப்படத் தேவையில்லை. நீதிமன்ற அனுமதியுடன் தான் விசாரணை நடைபெற்று வருகிறது. உண்மை என்ன என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

முதல்வர் ஸ்டாலினின் பதிலால் கொதித்துப் போன அதிமுகவினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். அதையடுத்து, சபாநாயகர் உத்தரவின் பேரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுகவினர் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையின் வெளியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் கோஷம் எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், ``எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்குப் போடும் அராஜக செயலில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. திமுக அரசின் அராஜகத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக இன்றும், நாளையும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தை புறக்கணிப்பார்கள்” என்றார்.

எடப்பாடி பழனிசாமி

அதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "கொடநாட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் கொள்ளை அடிக்க முயற்சி நடைபெற்றது. அந்த கொள்ளை முயற்சியின் போது அங்கிருந்த காவலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஏற்கனவே, வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கொடநாடு வழக்கில் சிலரின் ரகசிய வாக்குமூலத்தில் என்னுடைய பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அதே போல், இன்னும் சில அதிமுக நிர்வாகிகளின் பெயர்களையும் அதில் சேர்க்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

Also Read: கொடநாடு விவகாரம்: அதிமுக வெளிநடப்பு ;`மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும்!’ -ஸ்டாலின்

ஆனால், உண்மையில் கொடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரர்களாக இருந்தவர்கள் திமுகவினர் தான். கொடநாடு குற்றவாளிகளுக்காக ஆஜரானவர் திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. கடந்த ஆட்சியில், குற்றவாளிகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர்கள் அனைவரும் தற்போது திமுக ஆட்சியில் அரசு வழக்கறிஞர்களாகி இருக்கின்றனர். கொடநாடு வழக்கில் குற்றவாளிகளும், அரசு வழக்கறிஞர்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயன் என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் எனது பெயரைச் சேர்க்க முயற்சித்து வருகின்றனர். ஆனால், இந்த கொலை வழக்கில் ஆரம்பத்திலிருந்தே குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்து வருவது திமுக தான். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள். கொலை, கொள்ளை மற்றும் போதை மருந்து வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு ஆளும் திமுக அரசு ஆதரவளிப்பது ஏன் என்று தெரியவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி

சாட்சிகள் விசாரிக்கப்பட்டு முறையாக வழக்கு முடியும் நிலையில், திமுக வேண்டுமென்றே அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து அச்சுறுத்த முயற்சிக்கிறது.

அதிமுக அரசு நியாயமான முறையில் இந்த வழக்கை விசாரித்தது. ஆனால், குற்றவாளிகளை காப்பாற்ற கடந்த காலங்களில் திமுக முயற்சித்ததை யாராலும் மறக்க முடியாது.

இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் 3 முறை தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் வேண்டுமென்றே இந்த விவகாரத்தை கையிலேடுத்து திமுக எங்கள் மீது பழி சுமத்துகிறது" என்றார் காட்டமாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/edapadi-palanisamy-press-meet-about-kodanadu-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக