Ad

புதன், 18 ஆகஸ்ட், 2021

ஹைதி நிலநடுக்கம்: தரைமட்டமான மருத்துவமனைகள்.. 2,000-ஐ நெருங்கிய பலி எண்ணிக்கை!

கரீபியன் தீவு நாடான ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், சுமார் 2,000 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என அந்நாட்டு அரசாங்கம் அச்சம் தெரிவித்துள்ளது. மூன்று நாட்களாக நடைபெற்றுவரும் மீட்பு பணிகளில், கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் சடலங்கள் மட்டுமே மிஞ்சுகின்றன.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரை மீட்கும் பணி

கடந்த ஆகஸ்ட் 15, ஞாயிறன்று ஹைதியின் போர்ட்-ஆப்-பிரின்ஸ் பகுதியிலிருந்து சுமார் 118 கி.மீ. தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. அதிகபட்சமாக 7.2 ரிக்டர் அளவாக பதிவான இந்த நிலநடுக்கத்தால், ஹைதி நாட்டின் உயர்ந்த கட்டடங்களெல்லாம் தரைமட்டமாகின. சுமார் 2,868 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்து, அதில் குடியிருந்த மக்களோடு மண்மேடாகின. இதுமட்டுமல்லாமல், சேதமடைந்த 5,410 இதர வீடுகளிலிருந்த 5,700 பேர் பலத்த காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர்.

வீடுகள் தரைமட்டம்

ஆயிரக்கணக்கான மக்களின் நிலை என்னவென்று தெரியாத சூழ்நிலையில் அந்நாட்டு ராணுவம், தீவிரமான மீட்புப்பணியில் ஈடுபட்டது. துரதிஸ்டவசமாக தொடக்கத்தில் இரட்டை இலக்கமாக இருந்த பலி எண்ணிக்கை தற்போது இரண்டாயிரமாக உயர்ந்து வருகிறது. அதாவது, இரண்டு நாட்களுக்கு முன்பு 27 ஆக இருந்த உயிரிழந்தோர் எண்ணிக்கை, இன்று 1,941 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டு அரசாங்கம் கடும் நெருக்கடியிலும், மிகுந்த துயரத்திலும் உள்ளது.

திறந்தவெளி சிகிச்சையில் ஹைதி மக்கள்

இந்த கோர நிலநடுக்கத்தின் விளைவாக, உயிர்காக்கும் மருத்துவமனைகளும் இடிந்து தரைமட்டமானதால், கட்டட இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டோரையும் காப்பாற்றமுடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது ஹைதி அரசாங்கம். இதனால், அந்நாட்டு பிரதமர் ஏரியல் ஹென்றி, ஒரு மாதத்திற்கு அவசரகால நிலையை அறிவித்து உள்ளார். இருப்பினும், கனமழையும், காற்றும் இன்னும் விடாமல் மிகத்தீவிரமாக வீசிக்கொண்டிருப்பதால், மீட்புப்பணிகளிலும் தொய்வு ஏற்பட்டு, கையறு நிலையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது ஹைதி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/international/haiti-earthquake-death-toll-rises-to-2000

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக