Ad

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

Covid Questions: அடுத்த மாதம் பிரசவம்; பிறக்கும் குழந்தைக்கு தொற்று வராமல் எப்படிப் பாதுகாப்பது?

எனக்கு அடுத்த மாத இறுதியில் டெலிவரிக்கு தேதி கொடுத்திருக்கிறார்கள். கொரோனாவின் 3வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்ற நிலையில், இது பச்சிளம் குழந்தைக்கும் பொருந்துமா? நானும் என் குடும்பத்தாரும் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

- அருள்மொழி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் ஸ்ரீதேவி

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

``கொரோனாவின் மூன்றாவது அலை, குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு அறிவியல்பூர்வ ஆதாரங்கள் எதுவும் இதுவரை இல்லை. ஆனாலும் கணிப்புகளை அலட்சியப்படுத்தாமல், குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை, முன்னேற்பாடுகளை தயார்நிலையில் வைத்திருக்கிறது அரசு.

இந்தச் சூழலில் பிரசவிக்கும் பெண்களுக்கும், வீட்டிலுள்ளவர்ளுக்கும் கோவிட் தொற்று இல்லாத நிலையில், மருத்துவமனையில் சரியான நோய்க்கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. தாய்க்கோ, வீட்டிலுள்ள மற்றவர்களுக்கோ நோய்த்தொற்று இருந்தால், மற்றவர்களுக்கும் தொற்று ஏற்படலாம். அந்த வகையில் பச்சிளம் குழந்தைகளும் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.

Also Read: Covid Questions: குழந்தைக்கு ஃப்ளூ வாக்சின் போட்டுவிட்டேன்; அதுவே கொரோனாவிலிருந்தும் பாதுகாக்குமா?

முகக் கவசம் அணிவது, கைகளை சோப்பு அல்லது சானிட்டைசர் உபயோகித்து அடிக்கடி சுத்தப்படுத்துவது மற்றும் குழந்தையை பாதுகாப்பான, சுத்தமான சூழலில் வைத்துப் பராமரிப்பதன் மூலம் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

இவைதவிர கர்ப்பிணியும் அவரின் குடும்பத்தாரும் கடைப்பிடிக்கவேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அனைத்து கர்ப்பிணிகளும் அவரின் வீட்டாரும் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்ப்பது போன்ற கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டியது மிக முக்கியம். குடும்ப விழாக்களுக்குச் செல்வது, வீட்டுக்கு விருந்தினர்களை அழைப்பது போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். அவசியமான தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும். அப்படிச் செல்லும்போதும் மேற்குறிப்பிட்ட கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக முக்கியம்.

Baby - Representational Image

Also Read: Covid Questions: மூன்றாவது அலை அச்சம்; குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது சரியான முடிவா?

பிரசவத்தை அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும் மருத்துவமனையில் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தையையும் தாயையும் உறவினர்கள், நண்பர்கள் என யாரும் வீட்டுக்கோ, மருத்துவமனைக்கோ வந்து பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைக்கு காய்ச்சல், சளி, சோர்வு, பால் குடிக்காமலிருப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

இந்த விதிமுறைகளைப் பின்பற்றினால் பச்சிளம் குழந்தையை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கலாம்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/what-are-the-preventive-measures-for-new-born-babies-to-not-get-affected-by-covid-19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக