Ad

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

Covid Questions: மூன்றாவது அலை அச்சம்; குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது சரியான முடிவா?

செப்டம்பர் அல்லது அக்டோபரில் கொரோனாவின் மூன்றாவது அலை வரலாம் என கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை பேசப்பட்டது. இப்போது திடீரென பள்ளி, கல்லூரிகளைத் திறக்கவிருக்கிறார்கள். குழந்தைகளுக்குத் தடுப்பூசி வராத நிலையில் எந்த நம்பிக்கையில் நாங்கள் அவர்களைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவது? அது பாதுகாப்பானதாக இருக்குமா?

- சசிகலா (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் பூங்குழலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

``கொரோனாவின் மூன்றாவது அலை குறித்த குழப்பங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. மற்ற மாநிலங்களில், நாடுகளில் நாம் பார்க்கும், கேள்விப்படும் விஷயங்கள் அடுத்த அலை வரக்கூடுமோ என்ற பயத்தை நமக்கு ஏற்படுத்துகின்றன. இன்னொரு பக்கம் 50 சதவிகித மக்கள் இன்னும் தொற்றுக்குள்ளாகவில்லை.

கொரோனாவே இல்லாத நிலை உருவாக வேண்டும் என்றால் அதற்கான தடுப்பு முறைகளை உலக அளவில் எல்லா மக்களும் ஒரே மாதிரி பின்பற்ற வேண்டும். அடுத்தது மருந்துகள். இப்போதைக்கு தொற்று பாதித்த பிறகு ஏற்படும் பின்விளைவுகளை குணப்படுத்தும் மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் நம்மிடம் இருக்கின்றன. ஆனால் தொற்று வந்ததுமே குணப்படுத்தக்கூடிய மோனோகுளோனல் ஆன்டிபாடி மருந்துகள் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருப்பது போல பல நாடுகளில் இல்லை.

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள் இந்தியாவில் வெறும் 15 சதவிகிதத்தினர்தான். பலர் இன்னும் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளவில்லை. இன்னும் பலர் ஒரு டோஸ்கூட போட்டுக்கொள்ளவில்லை. 18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி போடுவதற்கான அறிவுறுத்தல்களும் இன்னும் நமக்கு வரவில்லை. இப்போதைக்கு நம்மிடம் இருப்பவை முகக்கவசம் அணிவது, கைகளைக் கழுவும் பழக்கம், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது மற்றும் தடுப்பூசி.

இதையெல்லாம் வைத்துதான் மூன்றாவது அலை வரக்கூடும் என்று சொல்கிறோம். மூன்றாவது அலை, இரண்டாவது அலை அளவுக்கு மோசமாக இருக்குமா என்றால் அதை இப்போதைக்கு யாராலும் சொல்ல முடியாது. ஒருவேளை மூன்றாவது அலை வந்தால் அதில் தொற்று பாதிப்பு எந்தளவுக்கு இருக்கிறது என்பதை வைத்துதான் எதையும் சொல்ல முடியும். எனவே மூன்றாவது அலையிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள இன்றுவரை நாம் பின்பற்றுகிற அத்தனை விஷயங்களையும் இனியும் தொடர வேண்டும்.

இந்தநிலையில் குழந்தைகளுக்கு பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது சரியா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. இது கத்திமேல் நடப்பதற்கு இணையான ஒன்றுதான். குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி அனுமதிக்கப்படவில்லை என்பதால் அவர்கள் ரிஸ்க் பிரிவில் இருக்கிறார்கள்.

school (Representational Image)

Also Read: Covid Questions: இரண்டு டோஸ் தடுப்பூசிக்குப் பிறகும் தொற்று பாதித்தது; பிறகு எதற்கு தடுப்பூசி?

இப்போதுதான் 12 முதல் 18 வயதினருக்கு ஸைடஸ் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அதுவும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்தியாவில் இதுவரை இருக்கும் எந்தத் தடுப்பூசியையும் நாம் இன்னும் குழந்தைகளுக்குச் செலுத்த ஆரம்பிக்கவில்லை.

கடந்த சில நாள்களாக புதிய தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. தொற்று எண்ணிக்கையானது இந்திய அளவிலும் பெரிய ஏற்ற, இறக்கங்கள் இல்லாமல் ஒரே சீராக இருந்து வருகிறது. தமிழகத்திலும் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் 9,10,11,12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்கிறார்கள். மாணவர்களின் கல்வியில் இது மிக முக்கியமான காலகட்டம். ஓரளவு வளர்ந்த பிள்ளைகள் என்பதால் முகக் கவசம் அணிவது, சானிட்டைஸ் செய்வது, தனிமனித இடைவெளியின் அவசியம் போன்றவற்றை இந்தப் பிள்ளைகளுக்குப் புரியவைத்து அறிவுறுத்துவது சுலபம்.

அரசுத் தரப்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லாத அளவுக்கு கணிசமாக இருப்பு வைத்திருக்கிறார்கள். ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டிருப்பதை வலியுறுத்தியிருக்கிறார்கள். ஏறக்குறைய ஒன்றரை வருடமாக மூடப்பட்டிருக்கும் பள்ளிகளைத் திறப்பது இப்போதைய சூழலில் சரியான முடிவுதான்.

பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெற்றோர் சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டும். முதலில் பெற்றோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களிடமிருந்து குழந்தைகளுக்கும், குழந்தைகளிடமிருந்து பெற்றோருக்கும் தொற்று வராமல் தடுக்க முடியும். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை குழந்தைகளுக்குச் சொல்லி, அவற்றைப் பின்பற்றுகிறார்களா என உறுதிசெய்ய வேண்டும்.

A student uses hand sanitizer India

Also Read: Covid Questions: கொரோனாவிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைக்கு காய்ச்சலோ, சளியோ இருந்தால் பள்ளிக்கு அனுப்பக்கூடாது. குழந்தைகளுக்கான தடுப்பூசி வரும்போது தவறாமல் போட்டுவிட வேண்டும். பள்ளிப் பேருந்து, ஆட்டோ மாதிரியான போக்குவரத்தில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை இன்னும் அழுத்தமாகச் சொல்லித் தர வேண்டும். பள்ளிகளும் அதைக் கண்காணிக்க வேண்டும்.

பள்ளிகளில் சானிட்டைஸ் செய்யும் வசதி இருக்கிறதா என்பதையும், வகுப்பறைகள் காற்றோட்டமாக இருக்கின்றனவா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். ஒரே வகுப்பில் நிறைய மாணவர்களை அமரச் செய்யக்கூடாது. 2- 3 மணி நேரத்துக்கொரு முறை வகுப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும். ஏசி தவிர்த்து மின்விசிறிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவற்றையெல்லாம் செய்துவிட்டால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு தொற்றே வராது என்று அர்த்தமில்லை. மிகப் பெரிய பாதிப்பைத் தவிர்க்கலாம்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/is-it-safe-to-send-children-to-school-amidst-the-covid-third-wave-fear

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக