Ad

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

கும்பகோணம்: `காத்திருந்தது தனி மாவட்ட அறிவிப்புக்கு.. கிடைத்தது மாநகராட்சி!’ -மக்கள் சொல்வதென்ன?

``கும்கோணம் நகராட்சி, மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது நீண்ட கால கோரிக்கை. தமிழக அரசின் மாநகராட்சி அறிவிப்பு எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், மாவட்டம் அறிவிப்பே மனம் கொள்ளா மகிழ்ச்சியை தரும்” என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

கோயில் நகரம் கும்பகோணம்

கோயில் நகரம் என அழைக்கப்படும் கும்பகோணம் பகுதியை சுற்றிலும் நவக்கிரக கோயில்கள் அமைந்திருப்பதால் இந்தியா முழுவதிலிருந்தும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கும்பகோணம் வந்து செல்கின்றனர். அத்துடன் சிறந்த தொழில் நகரமாகவும் விளங்கி வருகிறது. நாச்சியார் கோயில் குத்து விளக்கு, பித்தளை பாத்திரங்கள், சிலைகள், திருபுவனம் பட்டு, டிகிரி காபி தூள் என கும்பகோணத்தில் உற்பத்தி செய்யப்படும் பல பொருள்கள் உலக அளவில் புகழ்பெற்றுள்ளது. அதனால் பெரும் வணிக தளமாகவும் திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் கும்பகோணம் பகுதி மக்கள் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக அதற்கான அழுத்தத்தை தமிழக அரசுக்கு கொடுத்து வந்ததுடன் போராட்டங்களையும் நடத்தி வந்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என பெரிதும் எதிர்பார்த்திருந்தனர் ஆனால் அப்படியான அறிவிப்பு வரவில்லை.

பித்தளை குத்து விளக்கு

இதனால் பலரும் ஏமாற்றமடைந்தனர்.இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக வந்த ஸ்டாலின் திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்ததுமே கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார். மக்களும் அதற்கான எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தில் கும்பகோணம் நகராட்சி, மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டாலும் எங்களுக்கு தேவை தனி மாவட்ட அறிவிப்புதான் என கூறி வருகின்றனர்.

இது குறித்து வணிகர் சங்கத்தை சேர்ந்த சத்தியநாராயணன் கூறுகையில், ``கும்பகோணம் கலாசார தொன்மை மிக்க நகரம். ஆன்மீக நகரமாகவும், சிறந்த தொழில் நகரமாகவும் இருந்து வருகிறது. ஒரு மாவாட்டத்திற்குரிய அனைத்து அமைப்புகளையும், தகுதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது கும்பகோணம். அதனை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்பாகவும், ஏக்கமாகவும் இருக்கிறது. அதற்கான கோரிக்கையினையினையும் தொடர்ந்து முன்வைத்து வருகிறோம்.

மாநகராட்சி யாக அரிவிக்கப்பட்டுள்ள கும்பகோணம்

இந்நிலையில் கும்பகோணம் மாநகராட்சியாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்காக முதல்வர் ஸ்டாலின், நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என் நேரு, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் ஆகியோருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்ள கடமைபட்டுள்ளோம். இந்த அறிவிப்பு மகிழ்ச்சிதான் என்றாலும் மனம் கொள்ளா மகிழ்ச்சி இல்லை. முதல்வர் ஸ்டாலின், கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது திருக்கடையூரிலும், ஒரத்தநாட்டிலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கும்பகோணம் புதிய மாவட்டம் உருவாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Also Read: கம்பீரமாக வருமா கும்பகோணம் மாவட்டம்?

அதன்படி கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என்ற நம்பிக்கையும், அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்ற எதிர்பார்ப்பும் எங்களுக்கு உள்ளது. கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுகிற நாள் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும்” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/kumbakonam-separate-district-request-and-corporation-announcement-news

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக