Ad

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

''திமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கெல்லாம் யார் வட்டி கட்டினார்கள்?'' - வெளுத்துவாங்கும் ஜெயக்குமார்

'லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை, வெள்ளை அறிக்கை, பட்ஜெட்' என நாலுகால் பாய்ச்சலில் 100 நாள் ஆட்சியை நிறைவு செய்திருக்கிறது திமுக அரசு! 'மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு கொடுப்போம்' என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சி அரியணையில் ஏறிய திமுக அரசுக்கு, கொரோனா இரண்டாவது அலையின் உச்சம் பெரும் சவாலாக முன்வந்து நின்றது.

இதையடுத்து, 'தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு, ஆட்சி அதிகாரத்தில் கவனம் செலுத்தாமல் அதிமுக அரசு காட்டிய அலட்சியமே இத்தகைய பாதிப்புக்கு முதல் காரணம்' என அதிமுக மீது பழி சுமத்தியது. அதன் பின்னர், திமுக கொடுத்திருந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கேள்வி எழுந்தபோதெல்லாம், 'கடந்தகால அதிமுக அரசு, கஜானாவை காலிசெய்துவிட்டுப் போய்விட்டது' என்று நிதிச் சுமையைக் காரணம் காட்டியது.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

ஆனாலும் விடாது துரத்தும் கேள்விகளுக்கு விடையளிக்கும்விதமாக, 'வெள்ளை அறிக்கை' வெளியிட்டு வெட்டவெளிச்சமாக்கியவர்கள், அதிமுக அமைச்சர்கள் மீதான ரெய்டு நடவடிக்கை, இடைக்கால பட்ஜெட், வேளாண் துறைக்கென பிரத்யேக பட்ஜெட் என தடதடக்க ஆரம்பித்துவிட்டது திமுக அரசு.

ஐந்தே முக்கால் லட்சம் கோடி கடன் சுமை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வரி இல்லா பட்ஜெட்டை திமுக அரசு சமர்ப்பித்திருப்பது பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தரப்பிலோ திமுக அரசின் செயல்பாடுகளை 'பழிவாங்கும் அரசியல்' என போட்டுத்தாக்கி வருகின்றனர்.

Also Read: `4 ஆண்டுகளுக்கு முன் தந்தையை கன்னத்தில் அடித்ததால் பழிவாங்கினேன்' - கொலை வழக்கில் கைதான மகன்!

அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோதும் சரி; எதிர்க்கட்சியான பின்பும் சரி... கட்சி சார்ந்த அனைத்துக் கேள்விகளுக்கும் ஒற்றை ஆளாக 'தில்' பேட்டி கொடுப்பவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்! இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ரெய்டு, வெள்ளை அறிக்கை, பட்ஜெட்... திமுக அரசின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் மிகக் கடுமையாக விமர்சித்துவரும் ஜெயக்குமாரிடம் பேசினேன்....

'ஐந்தே முக்கால் லட்சம் கோடி கடன் சுமையை தமிழக மக்களின் தலையில் ஏற்றிவைத்துவிட்ட அதிமுக-வினர் என்ற திமுக-வின் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?''

''2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 50 ஆயிரம் ரூபாயை கடனாக அவர்கள் சுமத்திவிட்டுப் போனார்கள்தானே! அன்றைக்கு இருந்த விலைவாசியில் 50 ஆயிரம் ரூபாய் என்றால், இன்றைய விலைவாசியில் அதன் மதிப்பு என்ன? ஆக, அவர்கள் அன்றைக்கு ஏற்றிவைத்துவிட்டுப்போன கடன்களுக்கெல்லாம் இந்த பத்தாண்டுகள் கட்டியிருக்கும் வட்டி மட்டும் எவ்வளவு தொகையாகியிருக்கிறது என்பதாவது, இந்தக் குற்றச்சாட்டை சுமத்துகிற திமுக-வினருக்குத் தெரியுமா... இல்லை தெரிந்தும் இப்படி வீண் பழி சுமத்துகிறார்களா?

மு.க.ஸ்டாலின்

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எந்த அளவில் இருந்தது, அதன்பிறகு அ.திமுக தலைமையிலான ஆட்சியின்போது ஜி.டி.பி எந்தளவு வளர்ச்சியடைந்தது என்பதையெல்லாம் எண்ணிப்பார்த்து பொறுப்புணர்ந்து பேசவேண்டும்.

கடன் வாங்காத மாநிலம், நாடு எங்காவது உண்டா? வாங்குகிற கடன் எதற்காக செலவிடப்படுகிறது என்பதுதான் இங்கே முக்கியம். அடுத்து, கடன் கொடுக்கிறவர்களேகூட சம்பந்தப்பட்ட மாநிலத்தினுடைய நிர்வாகத் திறனைப் பார்த்துத்தானே கடன் கொடுக்கிறார்கள். நிர்வாகத் திறன் அற்ற மாநிலத்துக்கோ அல்லது நாட்டுக்கோ யாரேனும் கடன் கொடுப்பார்களா? ஆக, அதிமுக தலைமையிலான ஆட்சியின்போது தமிழ்நாடு சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட மாநிலமாகத்தானே விளங்கியிருக்கிறது. நிதிப் பொறுப்புகள் சட்டத்தின்படி சிறப்பாகக் கையாண்டிருக்கிறது அதிமுக. அதில் எந்தக் குளறுபடியும் இல்லை!''

Also Read: நகைக்கடன்: விவரங்களைச் சேகரிக்கும் தமிழக அரசு; விரைவில் வருமா கடன் தள்ளுபடி அறிவிப்பு?

''அதிமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையே, நிதிச் சுமைகளுக்குக் காரணம் என நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் புள்ளிவிவரத்தோடு சுட்டிக்காட்டுகிறார்தானே?''

''ஜி.எஸ்.டி-யில் நமக்கான இழப்பீட்டுத் தொகை மத்திய அரசிடமிருந்து வர வேண்டியுள்ளது. ஏற்கெனவே வாங்கிய தொகையும் மானியத்தில் போய்விட்டது. ஆக, இதையெல்லாம் சொந்த வரிவருவாயிலிருந்து நம் விருப்பத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாது. அடுத்து, கொரோனா ஊரடங்கு காலத்தில், வரி வருவாய் அனைத்தும் அடியோடு முடங்கிப்போனது.

இதையெல்லாம் கேள்வி எழுப்புகிற திமுக., கடந்த 17 ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களோடு கூட்டணியில் இருந்தார்கள்தானே! அப்போதே தமிழ்நாட்டு வளர்ச்சிக்கானத் திட்டங்களைக் கொண்டுவந்து விதை போட்டிருக்கலாம்தானே! மாநிலத்தில் திமுக ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோதுகூட இதுபோன்ற முயற்சியை செய்யாமல் விட்டுவிட்டார்களே!

எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, வாட் வரி வசூலிப்பில் தமிழ்நாட்டுக்கு சுமார் நான்காயிரம் கோடி ரூபாய் வரவேண்டியிருந்தது. ஆனால், அப்போது காங்கிரஸோடு கூட்டணி ஆட்சி நடத்திக்கொண்டிருந்த திமுக-வினர் இந்தத் தொகையை தமிழ்நாட்டுக்கு வரவிடாமல் செய்கிற வேலையைத்தான் சிறப்பாக செய்தனர். இதற்கெல்லாம் தமிழக நிதியமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார்?

அடுத்து, 13-வது நிதிக்குழு சார்பில், மாநிலங்கள்தோறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்தபோது, 'இது தமிழ்நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிற திட்டம்' என்று திமுக ஏன் குரல் கொடுக்கவில்லை? குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை மிகச் சிறப்பாகக் கடைப்பிடித்த தமிழ்நாட்டில், மக்கள் தொகையும் கட்டுக்குள் இருந்தது. ஆனால், வட மாநிலங்களில் இந்தத் திட்டம் கடைப்பிடிக்கப்படாததால், அங்கே மக்கள் தொகை விகிதமும் அதிகரித்துவிட்டது. ஆக, மக்கள் தொகையின் அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்போது, மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தமிழ்நாட்டுக்கு குறைவான நிதிதானே ஒதுக்கப்படும்! ஆக, அன்றைக்கு திமுக உரிய நேரத்தில் குரல் கொடுத்திருந்தால், 2014-ல் தமிழ்நாட்டுக்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்காதே! இப்படி வாய்ப்புகளையெல்லாம் தவற விட்டுவிட்ட திமுக-வினர், இன்றைக்கு மொத்தப் பழியையும் அதிமுக மீது சுமத்துவது கடைந்தெடுத்த பழிவாங்கும் அரசியல்!'' என்கிறார் குமுறலாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/who-paid-the-interest-on-all-the-loans-taken-during-the-dmk-regime-asks-jayakumar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக