Ad

புதன், 25 ஆகஸ்ட், 2021

தேனி: பிரபல கம்பெனிகளின் பெயரில் போலி பீடிக்கட்டுகள்! - கடைக்குக்கடை சப்ளை செய்தவர் சிக்கினார்!

திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் பிரபலமான பீடி கம்பெனிகளின் பெயரில் போலியாக தேனி மாவட்டம் கம்பம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதமாக விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து, போலி லேபிள்கள் ஒட்டபட்ட ஒரிஜினல் கம்பெனிகளுக்கு பீடியின் தரம் குறித்து புகார்களும் பறந்துள்ளன. இதையடுத்து, தேனி ஹவுஸ் ரோட்டைச் சேர்ந்த பிரபல பீடி நிறுவனத்தின் மேலாளரான அற்புதானந்தா, கம்பம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தார்.

நாகூர் கனியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போலி பீடி பண்டல்கள்

இதில், கடைகளில் போலி பீடி விற்பனை செய்யப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், கம்பம் கே.வி.ஆர் தெருவைச் சேர்ந்த நாகூர் கனி என்பவர், அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வருவதாகத் தெரிய வந்தது. இதையடுத்து தேனி ஹவுஸ் ரோட்டைச் சேர்ந்த பிரபல பீடி நிறுவனத்தின் மேலாளரான அற்புதநந்தா, கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரைத் தொடர்ந்து போலீஸார், நாகூர் கனியின் வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தினர். அங்கு, பிரபலமான 5 கம்பெனிகளின் பெயரில் ரூ.1,67,820 மதிப்புடைய 6 பெரிய பீடி பண்டல்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நாகூர் கனியிடம் போலி பீடி பண்டல்கள் எங்கு தயார் செய்யப்படுகிறது? எங்கெல்லாம் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது? என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நாகூர் கனி

”கம்பத்திற்கு 2 நாட்களுக்கு முன்பு வந்த 13 போலி பீடி பண்டல்களில் 6 பண்டல்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பதுக்கி வைக்கப்பட்டுள்ள 7 பண்டல்கள் குறித்தும் போலீஸில் புகார் கொடுத்துள்ளோம்” என்றார் பீடி கம்பெனியின் மேலாளர் அற்புதநந்தா. போலி பீடி பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ’ஆண்டிப்பட்டி – தேனி’ ரயில் பாதையில் சோதனை ஓட்டம் வெற்றி; மகிழ்ச்சியில் தேனி மக்கள்!



source https://www.vikatan.com/news/crime/sale-of-fake-beaty-bundles-in-the-name-of-famous-companies-in-kambam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக