பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
அது மழைக்காலம்! அந்தச் சிற்றூரின் உள் சாலைகள் அனைத்தும் மண்சாலைகளே. திருக்குளத்தைப் பிரதானமாகக் கொண்டே அந்த ஊரின் தெருக்கள் பிரிக்கப்பட்டிருந்தன. அக்குளத்தைச்சுற்றியுள்ள நான்கு பக்கங்களிலும் நான்கு தெருக்கள்.
கிழக்குத் தெரு, மேற்குத் தெரு, வடக்குத் தெரு, தெற்குத் தெருவென்று. கிழக்குத் தெருவுக்கு இன்னொரு பெயரும் இருந்தது... பட்டாமணியார் தெரு என்று. கிழக்குத் தெருவில்தான் அவன் வீடு. திருக்குளத்தின் வடகரையில் அவன் மூத்த சகோதரர் வீடு. சாப்பாட்டு நேரம் போக, மீதி நேரங்களில் சகோதரர் வீட்டில்தான் வாசம். அண்ணி, அம்மா போன்றவர்.கோடை காலங்களில் வீசும் தென்னங்காற்று, திருக்குளத்து நீரை எடுத்து வந்து அவர்கள் வீட்டை இயற்கை ‘ஏசி’ யாக்கும். தலைஞாயிறிலிருந்து மூத்த அத்தான் வரும் போதெல்லாம், எங்கே சுற்றினாலும் இரவில் படுக்க அங்கு வந்து விடுவார். காரணம் அந்தத் தென்னங்காற்றுதான்.
அவன் இளங்கலை முடித்தபோது, அவனுக்கு முன்னால் அந்தக் கிராமத்தில் சிலர் மட்டுமே பட்டம் பெற்றிருந்தார்கள். அவனுக்கு முதுகலைப்பட்டம் பெற வேண்டுமென்பதில் தனியாத ஆர்வம். பள்ளிப் பருவத்தில் திருத்துறைப் பூண்டிக்குச் சைக்கிளில் செல்லும் போதெல்லாம், அங்கு ஒரு வீட்டின் வெளியில் எம்.ஏ.,பி.எல். , என்ற பட்டத்துடன் ஒரு வக்கீலின் பெயர்ப்பலகை தொங்கும். அப்படிப் படித்தவரைப் பார்க்க வேண்டுமென்று சில நாட்கள் அந்த வீட்டைத் தாண்டி சற்றே ஓரமாக நின்று கவனித்திருக்கிறான். அவன் ராசி... அவர், அவன் கண்ணில்படும்படி வந்ததே இல்லை. ஆனால் அந்த எம்.ஏ., மட்டும் அவன் மனதுள்ளே ஒட்டிக்கொண்டது. அதனை அவன் பெற்றபோது, ஊரில் அவன்தான் முதல்!
படிப்பின் மீது இருந்த காதல் போலவே அவனுக்கு ‘நீட்’ டாக ட்ரெஸ் செய்து கொள்வதிலும் ஆசை அதிகம். பள்ளியில் படிக்கும்போது வைத்திருந்த இரண்டொரு சட்டைகள் அழுக்காகி விட்டால், இரவோடு இரவாகத் திருக்குளத்தில் துவைத்து, காலையில் அரை ஈரத்துடன் போட்டுக்கொண்டு பள்ளிக்குக் கிளம்பி விடுவான். உடல் வெப்பத்திலேயே அது, பள்ளி சேருமுன் காய்ந்து விடும். ஈரமாய் இருந்தாலும் தூய்மையாய் இருக்க வேண்டுமென்பதே அவன் விருப்பம். சாப்பிடாமல் கூட இருந்து விடுவான்.
ஆனால் ஆடை மாற்ற மட்டும் மறக்க மாட்டான்! கல்லூரிக்குச் சென்று பி.ஏ.,முடித்து எம்.ஏ., சென்றதும் மற்றவற்றில் மிச்சம் பிடித்து, ஆடைகள் அதிகமாக வாங்கிக் கொள்வான். அதற்காக காஸ்ட்லியர் ஐட்டங்கள் பக்கம் போக மாட்டான். ’சீப் அன்ட் பெஸ்ட்’ பாலிசிதான்.
ஒரு நாள் போட்டது அடுத்த நாள் வரக்கூடாது! -அது அடுத்த வாரந்தான். அதற்காக உடனுக்குடன் துவைத்து விடுவதும் இல்லை. அதிகம் கலையாமல் அப்படியே ஹாங்கரில் மாட்டி வைத்து விடுவான். ஊரில் இருக்கும் போதும், காலையில் பிடாரிகுளத்தில் சிறு நீச்சலடித்து விட்டு, வீட்டுக்கு வந்து தூய்மையாக உடுத்திய பிறகுதான் சாப்பாடெல்லாம்.
அன்றைக்கும் அப்படித்தான். காலையிலேயே குளித்து, சாப்பிட்டு விட்டு, சகோதரர் வீட்டில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான். பத்துப் பதினொரு மணி வாக்கில் வாசலில் சப்தம் கேட்கவே, வெளியில் வந்து பார்த்தான். மண்சாலை, மழையில் கரைய, ஓரங்கள் மேடாகி நடுவில் பள்ளமானதால், தேங்கிய நீர் சேறாகிப் பெரும் பள்ளமாகி விட்டது. பள்ளத்தில் தென்னடாறார் பார வண்டி சிக்கிக் கொண்டது. அவரும் எவ்வளவோ முயன்று மாடுகளைத் தூண்டியும், அவை முயன்றும், வண்டி மட்டும் மேலெழும்பவில்லை.
அன்று எடுத்துக்கட்டிய சலவை வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, வெள்ளைச் சட்டையின் கையைச் சற்றே மேலேற்றிக்கொண்டு, அவன் சக்கரத்தைப் பிடித்துத் தூக்கித் தள்ளிவிடத் தயாரானபோது, ”தம்பி.. தம்பி.. வேண்டாம்... வேட்டி, சட்டையில சேறு படப்போகுது. நீங்க இப்பிடி மேலே ஒக்காந்து மாட்டை ஓட்டுங்க. நான் சேற்றில எறங்கித் தள்ளறேன்…” என்று தென்னடாறார் பதற, அவன் அசால்டாக,
” அட நீங்க வேறே... சேறு பட்டா தொவைச்சிக்கிட்டா போச்சி... நீங்க ஒக்காந்து ஓட்டுங்க. அதோட ஒங்க மாட்டோட நெளிவு சுளிவெல்லாம் ஒங்களுக்குத்தானே நல்லாத் தெரியும். ஓட்டுங்க…” என்று கூறியபடி சேற்றில் இறங்கினான். ‘சதக்’-கால் சற்றே வழுக்க, உஷாராக வலது கையைச் சேற்றில் ஊன்றி விழாமல் தப்பித்துக் கொண்டான். வண்டியின் ஆரத்தைப் பிடித்துப் பலம் கொண்ட மட்டும் பிரயோகித்துத் தள்ள, அவர் மாட்டைத் தூண்டி ஓட்ட, சற்றே மேலெழும்பிய சக்கரம், பள்ளத்தை விட்டு வந்து விட்டதைப் போன்று போக்குக் காட்டிவிட்டு, மீண்டும் ரிவர்ஸ் அடித்துப் பள்ளத்திலேயே வந்து நின்றது.
“விடுங்க தம்பி.. வேற யாராச்சும் வர்றாங்களான்னு பார்ப்போம். ஒங்க கை, காலெல்லாம் ஒரே சேறு பாருங்க. போய், காயுறதுக்குள்ளே கழுவுங்க.” என்று அவர் கூற, அவனோ, நம்பிக்கையை இழக்காமல் “ இந்தத் தடவை எப்படியும் மேலே வந்துடும். நீங்க மாட்டை நல்லா அடிச்சி ஓட்டுங்க…” என்றபடி அவன் ஆரத்தைப் பிடிக்கவும், மேலும் பேச முடியாமல் அவர் மாட்டைத் தூண்டினார்.
நன்றாக மூச்சை உள்ளிழுத்து தன் மொத்த பலத்தையும் உபயோகித்து அவன் சக்கரத்தைத் தள்ள...மாடுகளும் முழுதாய் இழுக்க...மெல்ல...மெல்ல...நகர்ந்து..
அந்த வண்டி ஒரு வழியாய் மேலே வந்து விட்டது. அதட்டிய வேகத்தில் ஓடிய மாடுகள் சற்று தூரம் போய்த்தான் வேகத்தைக் குறைத்தன. அவன் அவரைப்போகச் சொல்லி கையைக் காட்டியபடி உள்ளே வந்து கை, கால்களைக் கழுவலானான்.
தென்னடாறாருக்குச் சொற்ப நிலமும் வீடும் உண்டென்றாலும், வண்டியை வாடகைக்கு ஓட்டியே வருமானம் பார்ப்பவர். அவன் வீட்டிற்கும் சொற்ப நிலமே இருந்ததாலும், அவன் வீட்டார் யாரும் வயற்சேற்றில் இறங்கி வேலை செய்யாததாலும், அவர்கள், வண்டி, மாடெல்லாம் வைத்துக் கொள்ளவில்லை. குப்பை அடிப்பதிலிருந்து, அறுவடை செய்த நெல் மூட்டைகளைக் களத்திலிருந்து வீட்டிற்குக் கொண்டு வருவது வரை, வண்டி சம்பந்த வேலைகள் அனைத்தையும் அவரும் அவர் மகனுந்தான் மேற்கொள்வார்கள். பயிர் வேலையை மாரியப்பனும், கிருஷ்ணனும் கவனித்துக் கொள்வார்கள். ஆனால் அவனிடம் அவர் பேசியது கூட இல்லை. அவர் மகன்தான் அவனுக்கு நல்ல பழக்கம். அவரைப் பொறுத்தவரை, படித்த சிறு பிள்ளைகளிடம் நாம் என்ன பேசப் போகிறோம் என்ற எண்ணம் போலும்.
அவனுக்கோ அவர்மீது அளவு கடந்த பிரியம் உண்டு. தன்மனைவி இறந்த பிறகு, இரண்டு ஆண் பிள்ளைகளையும் ஒரு பெண் பிள்ளையையும் காப்பாற்ற வேண்டி, அவர் மறுமணம் செய்து கொள்ளவில்லை. அதோடு மட்டுமல்ல. அவருடைய தங்கையும் அவரோடு சேர்ந்து கொண்டார். அவனுக்கு விபரம் புரியும் வரை அவர்களைக் கணவன் மனைவி என்றே நினைத்திருந்தான். பின்னர்தான் தெரிந்தது அவர்கள் அண்ணன்-தங்கை என்று. அந்த நொடியிலிருந்து அவர் மீது ஒரு தனி மரியாதையே அவனுக்கு ஏற்பட்டு விட்டது.
அன்று மாலை ‘ஜெயராம் டீ ஸ்டாலு’க்கு அவன் போனபோது அங்கு உட்கார்ந்திருந்த தென்னடாறார் எழும்பி, பெஞ்சில் அவன் உட்கார இடம் கொடுத்தார். அவர் கண்களில் நன்றியும், பாசமும் போட்டி போட்டு வெளிப்பட்டதை அவனால் நன்கு உணர முடிந்தது. அவ்வளவுதான். கிளம்பி விட்டார். போகும்போது மீண்டும் ஒரு கனிந்த பார்வையை அவன்மீது வீசத் தவறவில்லை. சிலர், அன்பைப் பார்வையிலேயே வெளிப்படுத்திவிட்டு மௌனச் சாமியார்களாக இருப்பார்கள். அவரும் அந்த விதந்தான் என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.
சில நிமிடச் சேறே அவனுக்கு ஒருவரிடம் அவ்வளவு மதிப்பை ஏற்படுத்தியிருக்கிறதென்றால், சேற்றில் இறங்கி வேலை செய்தால்… வேலை கிடைக்கும் வரை வயலில் வேலை செய்யலாமே...
அடுத்த நாள்... வயலில் மாரியப்பனுக்கும், கிருஷ்ணனுக்கும் உதவியாகச் சேற்றில் இறங்கிக் கொத்திக் கொண்டிருந்தான் அவன்!
-ரெ.ஆத்மநாதன்,
மெக்லீன்,அமெரிக்கா
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-short-story-of-a-well-educated-village-man
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக