Ad

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

தஞ்சாவூர்: திருட்டு வழக்கு; காவல் நிலையத்தில் விசாரணை கைதி மர்ம மரணம்! -உயர் அதிகாரிகள் விசாரணை

தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் தொடர்புடைய இளைஞர் ஒருவரை போலீஸ் கைது செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், அந்த கைதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கு போலீஸ் ஸ்டேஷன்

தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சீதா நகர் பகுதியில் வசிப்பவர் சாமிநாதன். இவர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.சாமிநாதன் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி சாமிநாதன் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, ரொக்கமாக ரூ. 7 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பாக சாமிநாதன் மேற்க்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

பின்னர் இந்த கொள்ளை வழக்கில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த சத்தியவான் (31) என்ற இளைஞருக்கு தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சத்தியவானுக்கு திருமணம் ஆகவில்லை. வனஜா என்ற தாய் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. சத்தியான் மீது தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல்வேறு கொள்ளை வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

சத்தியவான் உயிரிழந்த போலீஸ் ஸ்டேஷன்

மேலும் இந்த கொள்ளையை மூன்று பேர் சேர்ந்து செய்திருக்கலாம் எனவும் போலீஸார் கருதினர். இதனை தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீஸார் சத்தியவானை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் சுற்றிய சத்தியவானை தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து மேற்கு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை சத்தியவான் போலீஸ் ஸ்டேஷனிலேயே மயங்கி விட்டதாக தெரிகிறது. போலீஸார் உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் சத்தியவான் இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்துள்ளார். காவல் நிலையத்தில் வைத்து போலீஸ் விசாரித்து வந்த கைதி ஒருவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சாத்தான்குளம்: `8 மாதங்களாகியும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வரலை’ - பென்னிக்ஸ் சகோதரி வேதனை

``சத்தியவான் நெஞ்சு வலிப்பதாக கூறினார். அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். ஆனால் இறந்து விட்டார்” என மேற்கு காவல் நிலைய போலீஸ் தரப்பில் கூறி வருகின்றனர். தற்போது சத்தியவான் உடல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மார்ச்சுவரியில் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தஞ்சை சரக டிஐஜி பிரவேஷ்குமார்,எஸ்.பி ரவளிப்பிரியா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: சாத்தான்குளம் வழக்கு: 3 மணி நேரம்... கண்ணீர்மல்க சாட்சியம் அளித்த ஜெயராஜின் மனைவி!

விசாரணையின் முடிவிலேயே சத்தியவான் எப்படி இறந்தார் என்பது தெரிய வரும் என்கின்றனர். திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கைதியிடம் இருந்து உண்மையை பெறுவதற்காக போலீஸ் அவர்கள் பாணியில் விசாரிப்பார்கள். அப்படி விசாரிக்கும் போது எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு, இது போன்ற சம்பவம் நடந்திருக்குமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ள கைதி ஒருவர் காவல் நிலையத்தில் இறந்துள்ளார். அங்குள்ள சிசிடிவி கேமாராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தாலே உண்மை தெரிந்து விடும் எனவும் பலர் பேசி வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/youngster-died-in-lock-up-in-tanjore-police-higher-official-investigating

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக