Ad

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

இதெல்லாம் ஞாபகம் இருக்கா? - 60-70 கிட்ஸ்களின் அட்டகாச விளையாட்டுக்கள்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பள்ளிக்கு விடுமுறை விட்டுவிட்டாலே ஒரே கொண்டாட்டந்தான்!வேளா வேளைக்குச் சாப்பிடுவதும், விளையாடுவதுந்தான் வேலை. காலையில் அவசரமில்லாமல் எழுந்து, பழைய சாதத்தைத் தேங்காய்த் துவையலுடனோ, பொறிக்கப்பட்ட கூழ் வடக வற்றலுடனோ அல்லது கோசு மல்லியுடனோ( தேங்காய், சிறிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் புளிக் கரைசலுடன் செய்யப்படும், ஒரு சைடு ரெசிப்பி) ஒரு கட்டு கட்டிவிட்டுப் புறப்பட்டு விடுவோம்! அடுத்த நான்கைந்து மணி நேரத்திற்குத் தாங்க வேண்டுமே. வீட்டிலிருந்து மெல்லக் கிளம்பி, நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு பிடாரி குளம் சென்று சேர சுமார் பதினொன்று, பதினொன்றரை மணி ஆகி விடும்.

Swimming

குளத்தில் இறங்கி, சுண்டி போட ஆரம்பித்து விட்டால் நேரம் போவதே தெரியாது. ஏழெட்டு வயசைத் தாண்டிய எவரும் ஊரில் நீச்சல் தெரியாமல் இருக்க மாட்டார்கள்.

அப்பொழுதெல்லாம் நீச்சல் கற்றுக் கொள்வதென்பது சர்வ சாதாரணம். ஆறேழு வயசு தாண்டியவர்களை, அப்பாக்களோ, அண்ணன்களோ,மாமாக்களோ குளத்து நீரில் தூக்கிப் போட்டு விட,காலைக் கையை அடித்துக்கொண்டு கரைக்கு வர முயல, முடியவில்லையென்றால் உதவிக்கரம் நீட்டி இழுத்து விடுவார்கள். அடுத்த நாள் அந்தத் தூரம் அதிகரிக்கும். நான்கைந்து நாட்களில் நீச்சல் பழக்கத்திற்கு வந்து விடும்.

சுண்டி என்பது ஒருவர் நீந்தி மற்றவர்களைப் பிடிக்கும் நீச்சல் விளையாட்டு. அதில் இரண்டு வகை உண்டு. ஒன்று, ஒருவரை மட்டும் பிடித்தல். மற்றது, விளையாட்டிலுள்ள அனைவரையும் பிடித்தல். பிடிப்பவர் அருகில் வரும் வரை இருந்து விட்டு, நெருங்கி வந்ததும் நீருக்குள் மூழ்கி பிடிப்பவரிடம் வேடிக்கை காட்டும் அசகாய சூரர்கள் உண்டு.

அதற்கு மூச்சை நன்கு அடக்கும் பழக்கம் வேண்டும். அதில் எனது சகோதரர் கில்லாடி!

மதியம் ஒரு மணி, இரண்டு மணி வரை கூட சுண்டி தொடரும். கண்களும், கைகளும் வெளிறும் வரை தொடரும். பிடாரி கோயில் திருவிழா சமயங்களில் கோயிலில் காவலுக்கு இருக்கும் நித்தையன் வந்து சப்தம் போட ஆரம்பித்ததும்தான் கரையேறுவோம். நேரே வீட்டுக்குச் சென்று மதிய உணவைச் சாப்பிடுவோம்.

நீச்சல் கலை

மாலை வந்து விட்டால் ஒரு குரூப் ‘சடுகுடு’ விளையாடுவார்கள். அப்பொழுதெல்லாம் ‘கபடி... கபடி…’ என்று சொல்லும் கட்டாயமெல்லாம் கிடையாது. ஒரு முறை தோற்றவர்கள் மறுமுறை பாடிப் போகும் போது ‘தோத்த கச்சி பெருமுட்டு வாரேன்... துணிச்சலுள்ளவன் பிடிடா...பிடிடா…’ என்று கூறியபடி முன்னேற, அவர்கள் பிடித்த பின்னாலும் ‘பிடிடா…பிடிடா…’ என்று மூச்சைப்பிடித்தபடி பாட, ’அதான் பிடிச்சுட்டோமே!’ என்று அவர்கள் தள்ளி விட... வேடிக்கையாக இருக்கும். பக்கத்திற்கு 6 பேர், 8 பேரென்று இருப்பார்கள். சடுகுடுவில் ராஜமாணிக்கத்தை அடித்துக் கொள்ள முடியாது. சிவன் கோயிலுக்கு அருகில், தரும கோயிலுக்கு எதிரேதான் எங்களூர் மைதானம். எதிரே பஞ்சாயத்து போர்டு. இலங்கை வானொலியின் பாடல்களைக் கேட்டபடி விளையாடியதெல்லாம், மகிழ்ச்சி நிறைந்த நாட்கள். திருவிழா நாட்களில் விளையாட்டு பயங்கர சூடு பிடித்து விடும். கிராமங்களில், திருவிழாக்களுக்கும், விளையாட்டுக்களுக்கும் பங்காளி உறவு போலும்!

மறு குரூப் பளிங்கு விளையாடுவார்கள். ஒரு சிறு குழியைப் பூமியில் ஏற்படுத்தி விட்டு,(ஒரு சிறு கொட்டங்கச்சி உட்புகும் அளவுக்கு)சுமார் 15 அல்லது 20 அடிக்கு அப்பாலிருந்து அந்தக் குழியை நோக்கிப் பளிங்கியை உருட்டி விட வேண்டும்.குழிக்கு அருகில் யார் பளிங்கு போகிறதோ,அவர்தான் முதலில் ஆடத் தகுதி பெற்றவர்.முதலில் அந்தக் குழியில் பளிங்கியைப் போட்டு எடுத்து விட வேண்டும்.பின்னால் விளையாடுபவர்களைக் குழி போட விடாமல் தடுத்தலே ஆட்டம்.சிலரால் நீண்ட நேரம் குழியில் போட முடியாது.அந்த ஆட்டத்திற்குப் பெயர் கசி.அவர்களை வெறுப்பேற்றும் விதமாகக் ‘கசி நாறுகிறது!’ என்று மற்றவர்கள் கூறுவதுண்டு.

பளிங்கியில் ‘மோத்தி’ பளிங்கு என்பது சற்றே பெரிதாக இருக்கும். அதனை லாவகமாகக் கையாளத் தெரிந்தவர்கள்,பிறர் பளிங்குகளை உடைத்து,நாசம் ஏற்படுத்துவதுண்டு.அப்பொழுது ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த கணேசன்நூற்றுக் கணக்கில் பளிங்குகளை வாங்கி வந்து, எங்களுக்கும் கொடுத்து, தானும் சிறுபிள்ளை போல எங்களுடன் பளிங்கு ஆடியதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள். வல்லம்பர் தெரு உத்திராபதி பளிங்கு ஆட்டத்தில் வல்லவர். பலர் பளிங்குகளை உடைத்துப் பாவம் சேர்த்தவர்.

Representational Image

வேறொரு குரூப்,சோடா மூடி விளையாட்டில் ஆர்வமாக ஈடுபடுவார்கள். ஒரு கோடு போட்டு அதற்கு அருகில் நடுமையமாக ஒரு வட்டம் போட்டு விடுவார்கள். வட்டத்திற்குள் ஆளுக்கு இத்தனையென்ற சம எண்ணிக்கையில் சோடா மூடிகளை வைத்து விட வேண்டும். போடப்பட்ட கோட்டிலிருந்து 15 அல்லது 20 அடி தள்ளி நின்று அடிப்பானை வீச வேண்டும். அடிப்பான் என்பது சில்லு போன்ற ஓட்டினாலான சிறு துண்டு. சிலர் இதற்குப் பழைய இரும்புப் படிக் கற்களையும் பயன்படுத்துவார்கள்.

அவற்றினால் சோடா மூடிகளை எளிதாக வட்டத்தை விட்டு அடித்து எடுத்து விட முடியும்.

கோட்டிற்கு அருகில் எவருடைய அடிப்பான் விழுகிறதோ, அவர்தான் முதன்மையானவர். அவருக்குத்தான் சோடா மூடிகளை அடிப்பானால் அடித்து எடுக்க முன்னுரிமை. அவருக்குப் பிறகுதான் அடுத்தவர்கள். சில சமயம் இரண்டு பேரின் அடிப்பான்கள் கோட்டுக்கு அருகில் இருக்கும். நுணுக்கமாக அளக்க வைக்கோலைப் பயன்படுத்துவார்கள்.

அப்பொழுதெல்லாம் எவர் அதிகச் சோடா மூடி வைத்திருக்கிறாரோ அவர்தான் செல்வந்தர்.பக்கத்து வீட்டு மைனர் ஓலைக் குட்டானில் நிறையச் சோடா மூடிகளையும் கூடவே இரண்டொரு படிக் கற்களையும் வைத்திருப்பார்.சோடா மூடி விளையாட்டின் ராஜா அவர்தான்.சின்ன வயதிலேயே தாய்,தந்தையரை இழந்து விட்டதால்,நாராயணசாமி என்ற இயற்பெயரைவிட அவருக்கு மைனர் என்ற பெயரே நிலைத்து விட்டது.ஆனால் அவரின் சிறிய தாயார்,தன் மூத்தாளின் பிள்ளையைத் தான் பெற்ற பிள்ளையாகவேப் பாவித்து வளர்த்ததும்,தனக்கென குழந்தை பெற்றுக் கொள்ளாததும் ஊரில் பிரசித்தம்.ஒவ்வொரு ஊரிலும் எத்தனையோ முதல் மரியாதைக் கதைகளும் பிறவும் புதைந்து கிடக்கின்றன.

பம்பரம்

கோடை காலத்தில் சிலர் பம்பரமும் கையுமாக அலைவதுண்டு. எதிரில் யார் பம்பரத்துடன் வந்தாலும் போட்டி ஆரம்பமாகி விடும். அவரவர் பம்பரத்தில் கயிறைச் சுற்றி பூமியில் சுற்ற விட வேண்டும். அவ்வாறு சுற்றுவதைக் கயிற்றால் சுற்றி எடுத்துக் கையில் பிடிக்க வேண்டும். அவ்வாறு யார் முதலில் செய்கிறாரோ அவர் வென்றவராவார். மற்றவர்கள் தங்கள் பம்பரங்களை, பூமியில் ஒரு வட்டத்தைப் போட்டு அதில் வைத்து விட வேண்டும்.வென்றவர் தன் பம்பரத்தால் வட்டத்திற்குள் இருக்கும் மற்ற பம்பரங்களை உடைக்க முற்படுவார்.அவர் பம்பரத்தால் அடிபட்டுச் சிதறி வட்டத்தை விட்டுப் பம்பரம் வெளியே வந்து விட்டால், அதன் உரிமையாளர் அதனை எடுத்துக் கொண்டு விளையாடலாம். அடுத்தவர் பம்பரத்தை உடைப்பதற்கென்றே சிலர் தங்கள் பம்பர ஆணிகளை மிகக் கூர்மையாக்கி வைத்திருப்பார்கள்.

மழை பெய்யும் நேரங்களில், பூமி ஈரமாக இருக்குமாகையால், சில்லுக் கோடு சிறப்பிடம் பெற்று விடும். அதிலேயே இரு வகை உண்டு. ஒன்று சாதா சில்லுக்கோடு. மற்றொன்று ஏரோப்ளான் சில்லுக்கோடு. சாதா சில்லுக்கோட்டில் 8 கட்டங்களும், இரண்டிரண்டாக இருக்கும்.

ஏரோப்ளான் சில்லுக் கோட்டில் முதலில் மூன்று கட்டங்கள் நேர் வரிசையில். அப்புறம் இரண்டு கட்டங்கள், பக்கம் பக்கத்தில். அப்புறம் ஒரே கட்டம் .

அதைத் தாண்டி இரண்டு கட்டங்கள்-ஏரோப்ளேன் வடிவத்தில்.ஓ! விளையாட்டு முறைதானே! விளையாடும் ஒவ்வொருவரும் கையில் ஒரு சில்லு வைத்திருப்பார். சில்லு என்பது பானையின் உடைந்த பாகமாகவோ அல்லது ஓடுகளின் உடைந்த பாகமாகவோ இருக்கும். விளையாடுபவர் அந்தச் சில்லைக் கோடுகளில் படாமல் ஒவ்வொரு கட்டத்திலும் போட்டு, உள்ளே போகும்போது அந்தக் கட்டத்தை மட்டும் மிதிக்காமல் தாண்டி, எட்டாம் கட்டம் வரை சென்று திரும்பி வந்து, ஒற்றைக் காலைத் தூக்கியபடி ஒரு காலால் அந்தச் சில்லைச் சரியாக மிதித்து எத்த வேண்டும். எத்தப்படும் சில்லு கோடுகளில் படாமல் சற்று தூரத்திற்குச் செல்ல வேண்டும்.ஒன்றாம் கட்டத்திலிருந்து ஒரு காலாலேயே ஜம்ப் செய்து அந்தச் சில்லை மிதிக்க வேண்டும்.

Representational Image

சில்லை மிதிக்காது விட்டாலோ, அந்தச் சில்லு கோடுகளில் பட்டு விட்டாலோ, ஆட்டம் இழக்க வேண்டியதுதான். அடுத்தவர் ஆட ஆரம்பித்து விடுவார்.

எட்டுக் கட்டங்களையும் யாரொருவர் சரியாக விளையாடிக் கடந்து விடுகிறாரோ அவரே வெற்றி பெற்றவர்.

வைகாசி விசாகக் காற்று தெற்கிலிருந்து வீச ஆரம்பித்து விட்டால், பட்டம் பறக்கவிடுவது சூடு பிடித்து விடும். பெரும்பாலும் ஈர்க்குக் குச்சிகளால் கட்டப்பட்டு, தினசரி பேப்பர்களை கட் பண்ணி மேலே ஒட்டி, பழைய வேட்டிகளில் வால் தயார் செய்து பட்டம் விடத் தயாராகி விடுவோம். தெற்குத் தெரு குட்டையின் வட கரையில் நின்று விட ஆரம்பித்தால் வடக்குப் பண்ணை தென்னந்தோப்புக்கு மேலே வரை(சுமார் 200 மீ தூரம்), உயரத்தில் பட்டம் பறக்கும். பட்டம் தயாரிப்பதிலும், விடுவதிலும் என் சகோதரரை மிஞ்ச அப்பொழுது யாருமில்லை.

இவையெல்லாம் பகல் நேர விளையாட்டுக்கள் என்றால்,இரவில் விளையாடவும் ஒன்று உண்டு.அதுதான் நிலாப் பூச்சி.நிலாக் காலங்களின் முன்னிரவில் ஆடப்படும்

இந்த ஆட்டம் எளிமையானது.ஐந்தாறு பேர் விளையாட ஏற்றது இது. தண்மையாய்க் காயும் நிலவொளியில் நிற்கும்போது, பிடிப்பவர் நம்மைத் தொட வருவார். அவர் தொடுவதற்கு முன்னால் நாம் ஏதாவது நிழலுக்கு ஓடிச் சென்று விட வேண்டும். நிழலில் நிற்கும் போது தொட்டால் அவுட் கிடையாது.இந்த விளையாட்டிலும் ‘ஒருவரைப் பிடிப்பது’ அல்லது ‘எல்லோரையும் பிடிப்பது’ என்ற இரு முறையில் விளையாடலாம்.

சில்லுக் கோட்டிலும்,நிலாப் பூச்சியிலும் இனக் கலப்பு உண்டு.அதாவது சிறுமிகளும் கலந்து கொள்வார்கள்.மற்ற விளையாடல்களில் அவ்வாறில்லை.

மேற்கண்டவை போக ‘ஹைட்-அன்ட்-சீக் விளையாட்டும் உண்டு. அதாங்க நம்ம ஒளிஞ்சி பிடித்து விளையாடல் . ஒரு தெருவையே எல்லையாக வைத்துக் கொண்டு இதனை விளையாடுவதுண்டு. வீடுகளை விட்டு விட்டு, வைக்கப்போரடி,மாட்டுக்கொட்டகை,மரங்கள் என்று அத்தனை இடங்களிலும் ஒளிந்து கொள்ளலாம். கண்டு பிடிப்பவர் பாடுதான் கொஞ்ச கஷ்டம்!

அப்புறம்... தென்னை மட்டையைப் ‘பேட்’ போலச் செய்து கொண்டு கிரிக்கெட் ஆடுவதும், நுங்கு வரும் பருவத்தில் நுங்கு வண்டி ஓட்டுவதும், திருவிழாக் காலங்களில் பலூனை ஊதி உடைப்பதும் உண்டு.

-ரெ.ஆத்மநாதன்,

மெக்லீன்,அமெரிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-article-about-70s-kids-games

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக