புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பா.ஜ.க ஆறு இடங்களில் வெற்றிபெற்றது. அவற்றில் ஊசுடு (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் சாய் ஜெ.சரவணகுமார். அதையடுத்து பா.ஜ.க சார்பில் வெற்றிபெற்ற நமச்சிவாயமும், சாய் ஜெ.சரவணகுமாரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். சாய் ஜெ.சரவணகுமாருக்கு புதுச்சேரி அரசின் குடிமைப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலன் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டன.
அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டது முதல் தனது கட்டுப்பாட்டின் கீழ் வரும் துறைகளில் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று அவரை சந்திப்பதற்கான அவரது ஊசுடு தொகுதி மக்கள் சட்டப்பேரவைக்கு வந்தார்கள். அமைச்சர் சாய் ஜெ.சரவணகுமாரைச் சந்திக்க அவரது அறைக்குச் சென்றனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அவர்களுடன் தரையில் அமர்ந்து குறைகளைக் கேட்டறிந்தார். அமைச்சரின் அந்த செயல் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
அதற்கான காரணம் குறித்து நம்மிடம் பேசிய அமைச்சர் சாய் ஜெ.சரவணகுமார், “எனக்கு வாக்களித்த மக்கள் கோரிக்கைகளுடன் என்னை சந்திக்க வந்தார்கள். அதில் வயதில் பெரியவர்களும் நிறையபேர் இருந்தார்கள். அவர்களை நிற்க வைத்து பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை. மனதிற்குள் நெருடலாக இருந்தது. அவர்கள் அனைவரையும் அமர வைப்பதற்கான இருக்கைகளும் என் அறையில் இல்லை. அதனால் அனைவரையும் தரையில் அமர வைத்துவிட்டு நானும் அவர்களுடன் அமர்ந்தேன். உங்களில் ஒருவன்தான் நான். நீங்கள் கொடுத்த வேலையை செய்ய வந்தவன்தான்.
Also Read: புதுச்சேரி: முதன்முறையாக சபாநாயகர் பதவியைக் கைப்பற்றிய பா.ஜ.க! - பதவியேற்றார் எம்.எல்.ஏ செல்வம்
அதனால் எந்தவித பயமுமின்றி என்னிடம் பேசுங்கள் என்று கூறி அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டேன். அவர்களும் அமைச்சர் என்ற தயக்கமின்றி என்னிடம் சகஜமாக தங்கள் குறைகளைக் கூறினார்கள். அமைச்சரானதும் ஆணவம் வந்துவிடக்கூடாது என்று நினைக்கிறேன். மக்களில் ஒருவனாகவே இருக்க விரும்புகிறேன். அவர்களிடம் கெஞ்சி, கூத்தாடி இதை செய்கிறேன் அதை செய்கிறேன் என்று கூறித்தான் வாக்குகளை வாங்கினோம் என்பதை மறந்துவிடக் கூடாது. அதனால் அவர்களில் ஒருவனாக இருந்துவிட்டால் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை” என்றார்.
source https://www.vikatan.com/news/politics/puducherry-minister-sai-j-saravanakumar-sat-on-the-ground-with-the-people-and-listened-their-demands
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக