Ad

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

இல.கணேசன்: `அரசு ஊழியர் டு மணிப்பூர் ஆளுநர்' - அரசியல் பயணம் ஒரு பார்வை!

சிக்கிம் மாநில ஆளுநர் ஸ்ரீ கங்கா பிரசாத் அண்மையில், மணிப்பூர் மாநில ஆளுநராகக் கூடுதல் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். தற்போது, தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 76 வயதான இல.கணேசனை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மணிப்பூர் ஆளுநராக அறிவித்திருக்கிறார். முன்னதாக, தமிழக பாஜகவைச் சேர்ந்த எல்.முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் பதவி வழங்கப்பட்டது. தற்போது பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ஐ தமிழகத்தில் காலூன்றச் செய்தவர்களில் இல.கணேசன் மிக முக்கியமானவராகப் பார்க்கப்படுகிறார். தஞ்சாவூரில் பத்திரிகை முகவருக்கு மகனாகப் பிறந்து, சிறுவயதிலேயே ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு முழு நேர அரசியலில் இறங்கினார். மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மண்டலப் பொறுப்பாளர், குமரி முதல் திருச்சி வரையிலான மாவட்டங்களின் பொறுப்பாளர், தமிழ்நாடு மாநில இணை அமைப்பாளர் என இல.கணேசன் படிப்படியாகத் தமிழகத்தில் பாஜகவின் முகமாக மாறினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தனது பயணத்தைத் தொடங்கிய இல.கணேசன் 1991-ல் பாஜக-வின் தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர், விரைவிலேயே மாநில தலைவர் பதவிக்கு நிகரான மாநில அமைப்புச் செயலாளர் பதவி கட்சித் தலைமையால் வழங்கப்பட்டது.

இல.கணேசன்

1970-ல் திருச்சியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில், அப்போதைய ஆர்.எஸ்.எஸ் மாநில அமைப்பாளர் ராமகோபாலன் முன்னிலையில், அரசு வேலையை விட்டு விட்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முழு நேரப் பிரசாரகராக இணைந்தார். அதைத்தொடர்ந்து, திருமணம் செய்துகொள்ளாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காகவும், பாஜக-விற்காகவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு பொது வாழ்வில் இறங்கினார். குஜராத்தில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளராகப் பதவிவகித்த நேரத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தமிழ்நாட்டின் மாவட்ட பொறுப்பாளராக இல.கணேசன் பதவி வகித்தார். 30 ஆண்டுகளாக பாஜக செயற்குழு உறுப்பினராக இருந்து வரும் இல.கணேசன் அக்கட்சியின் தேசிய தலைவராகவும், தேசிய துணைத் தலைவராகவும், தமிழக தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். 2009 மற்றும் 2014 ஆகிய நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக சார்பாகத் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இருப்பினும், பின்னர் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக இவரை பாஜக தேர்வு செய்து தோற்றாலும் எம்.பி என்ற அந்தஸ்தை வழங்கி சிறப்பித்தது.

Also Read: மத்திய அமைச்சர் எல்.முருகன்: சட்டக் கல்லூரி முதல் டெல்லி அரசியல் வரை! - கடந்துவந்த பாதை

சித்தாந்த ரீதியாகவும், கட்சிக் கொள்கைகளின் அடிப்படையிலும் தமிழக அரசியல் தலைவர்களுடன் இல.கணேசன் முரண்பட்டாலும், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, கம்யூனிஸ்ட் கட்சியின் சங்கரய்யா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் என அனைவருடனும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அன்புடன் பழகக் கூடியவர். அரசியல்வாதியாக தேசியளவில் அறியப்படும் இல.கணேசன் பத்திரிகையாளரும்கூட. எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவர் பாஜகவின் ‘ஒரே நாடு’ பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். மேலும், ‘பொற்றாமரை’ இலக்கிய அமைப்பையும் அரசியல் பணிகளுக்கு மத்தியில் தொய்வில்லாமல் நடத்தி வருகிறார்.

இல.கணேசனின் அரசியல் பயணத்தில் ஆளுநர் பதவி மிகப் பெரிய 'மைல்கல்லாக' அனைவராலும் பார்க்கப்படுகிறது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசனை மணிப்பூர் மாநிலத்தின் 17-வது ஆளுநராக நியமித்து உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், அவரின் பதவியேற்பு குறித்ததான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

`மெட்ராஸ் டே' Quiz

`மெட்ராஸ் டே' Quiz

நீங்க தஞ்சாவூரா இருக்கலாம், வந்தவாசியா இருக்கலாம், மதுரையா இருக்கலாம். இல்ல... கன்னியாகுமரியாகூட இருக்கலாம். ஆனா, நம்ம எல்லாருடைய லைஃப்லயும் சென்னை கலந்திருக்கும். நாம சென்னையைக் கடந்திருப்போம். அப்படி நம்ம லைஃபோட கலந்திருக்குற சென்னையைப் பத்தி நமக்கு எவ்வளவு தெரியும்? இந்த quiz -ஐ attend பண்ணுங்க!

கலந்துகொள்ள க்ளிக் செய்க - https://bit.ly/3gl7qMl



source https://www.vikatan.com/government-and-politics/politics/president-ram-nath-govind-appoints-tamil-nadu-bjp-chief-leader-laganesan-as-manipur-governor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக