சென்னை மெரினா கடற்கரை, கண்ணகி சிலைக்கு எதிரே உள்ள சாலையின் இருபுறங்களிலும் வரையப்பட்டிருக்கும் கடல் வாழ் உயிரினங்களின் அழகிய ஓவியங்கள் காண்போரை வசீகரிக்கின்றன. சில தினங்களுக்கு முன்புவரை வழிப்போக்கர்களின் சிறுநீர் கழிப்பிடமாகவும், குப்பைகளை வீசிச்செல்லும் இடமாகவும் துர்நாற்றத்தில் திளைத்த அந்தப் பகுதியை அவ்வளவு அழகாக மாற்றியிருக்கின்றனர் சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்.
பல இளைஞர்கள் ஓவியங்கள் வரைவதில் முனைப்புடன் இருக்க... அவர்களை வழிநடத்திக்கொண்டிருந்தனர் சச்சினும் கெளசிகாவும். ``இங்கே ஓவியம் வரையுறதுல என்னைத் தவிர மற்ற யாருமே புரொஃபஷனல் ஆர்ட்டிஸ்ட் கிடையாது. வெவ்வேறு வேலைகள்ல இருக்குறவங்க. ஆனா, ஓவியம் வரையுறதுலயும், இந்த சொசைட்டிக்கு ஏதாவது நல்ல விஷயம் பண்றதுலயும் ஆர்வம் உள்ளவங்க" உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார் கெளசிகா.
``நான் கார்ப்பரேட் கம்பெனியில டிசைனரா இருக்கேன். சுவர் சித்திரங்கள் வரையறதுல எனக்கு ஆர்வம் அதிகம். என்னுடைய வேலை நேரம் போக அப்பப்போ, பள்ளிக்கூடங்கள், காபி ஷாப்களில் சுவர் ஓவியங்கள் வரைவேன். இன்ஸ்டாகிராம் மூலமாக சச்சினின் அறிமுகம் கிடைச்சதுக்குப் பிறகுதான் இந்தக் கலையை சமூக நலனுக்காகவும் பயன்படுத்த ஆரம்பிச்சிருக்கேன்.
மாநகராட்சி அதிகாரிகள்கிட்ட பேசறது, தன்னார்வ இளைஞர்களை ஒருங்கிணைக்கிறதையெல்லாம் சச்சின் பார்த்துக்குவார். ஓவியங்களுக்கான கான்செப்ட் உருவாக்குறது. அவுட்லைன் மற்றும் ஃபினிஷிங் வேலைகளை நான் பார்த்துப்பேன். நான் அவுட்லைன் வரைஞ்சு கொடுத்துட்டேன்னா... ஓவியம் வரையத் தெரியாதவங்ககூட கலரிங் பண்ணிடலாம். அதனால ஓவியம் வரையத் தெரியலைன்னாகூட ஆர்வம் உள்ள பல இளைஞர்கள் எங்களுடன் இணைஞ்சு வேலை செய்யுறாங்க.
இங்கே ஓவியங்கள் வரையப்படறதுக்கு முன்னாடிவரைக்கும் இந்த இடத்துல உங்களால ஒரு நிமிஷம்கூட நிற்க முடியாது. அந்தளவுக்கு மோசமா இருந்துச்சு. பீச், கண்ணகி சிலையெல்லாம் பக்கத்துலயே இருக்குன்னுகூட பார்க்காம அசிங்கப்படுத்தி வெச்சுருந்தாங்க... என்னதான் அதைக் கிளீன் பண்ணாலும் மீண்டும் மீண்டும் பண்ணிக்கிட்டேதான் இருப்பாங்க. இப்படி அழகான ஓவியங்கள் வரைஞ்சுட்டா அங்கே எச்சில் துப்பவோ சிறுநீர் கழிக்கவோ யாருக்கும் மனசு வராது. இந்தப் பகுதியை சுத்தமாக வெச்சுக்கணும்ங்கிறதுதான் இந்த ஓவியங்களுக்கான பிரதான நோக்கம்.
பக்கத்துல கடல் இருக்கிறதால கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பையும் ஓவியங்களில் வலியுறுத்தினா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அதனாலதான் இந்த ஸ்பாட்ல கடல்வாழ் உயிரினங்களை வரைஞ்சிருக்கோம். இந்த வழியா கடலுக்குப் போறவங்களோட எண்ணிக்கை அதிகம். இந்த பெயின்ட்டிங்கை கடந்து போற ஒவ்வொருவருக்கும் கடலுக்குள்ள இந்த உயிரினங்கள்லாம் இருக்கு; நாம அசுத்தப்படுத்தக் கூடாதுங்கிற சிந்தனை உருவாகணும்" என்று சொல்லும் கெளசிகா, வார விடுமுறை நாள்களில் இந்தப் பணியில் ஈடுபடுவதாகச் சொல்கிறார்.
``வார விடுமுறை நாள்களில் வீக் எண்டு பார்ட்டி, ட்ரிப்னு சுத்துறதைவிட இதுதான் பிடிச்சுருக்கு. ஏன்னா, இதைச் செய்யும்போது எங்க மனசுக்கும் சந்தோஷமா இருக்கு... சமூகத்துக்கும் பயனுள்ளதா இருக்கு" என்றார்.
இந்தப் பணியை ஒருங்கிணைக்கும் சச்சின் பேசும்போது, ``சூளைமேட்டுல உள்ள திருவள்ளுவர்புரத்துலதான் எங்க வீடு... தெருவிளக்கு எரியல, மெட்ரோ வாட்டர் சரியா வரல, வீட்டருகே உள்ள கால்வாய் தூர்வாரல... இப்படி அடிக்கடி ஏதாவதொரு பிரச்னை ஏரியாவுல இருந்துகிட்டே இருக்கும். போன் பண்ணிச் சொன்னாலும் அந்தப் பிரச்னையை உடனே சரிசெய்ய மாட்டாங்க. ஏன் இவ்வளவு அலட்சியமா இருக்காங்கன்னு எனக்கு பயங்கர கோவம் வரும். நான் ஒரு ஐ.டி ஊழியர். வருஷத்துக்கு 50,000 ரூபாய்க்கு மேல வருமான வரி கட்டுறேன். என்னைப் போல எத்தனையோ பேர் வரி கட்டுறாங்க. ஆனா, நமக்கான அடிப்படை பிரச்னைகளைக்கூட அரசாங்கம் நிவர்த்தி செஞ்சு கொடுக்க மாட்டேங்குதேங்குற கோவம் அது. இந்த நிலையை மாத்தணும்னு நினைச்சாலும், ஒத்த ஆளா என்ன பண்ணிட முடியும்ங்கிற கேள்வி இன்னொரு பக்கம் தடங்கலாவே இருந்துச்சு.
அந்த நேரத்துலதான் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு பகுதியிலயும் `வார்டு லீடர்ஷிப்' பயிற்சிகளை முன்னெடுத்தாங்க. அதுல கலந்துகிட்டேன். `ஒவ்வொரு வார்டுலயும் உள்ள மக்கள் பிரச்னைகளை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுபோய் எப்படி சரி செய்யுறது?'ன்னு அந்தப் பயிற்சி வகுப்புகளில் தெளிவுபடுத்தினாங்க. பிரச்னைகளைப் பார்த்து வெறுமனே புலம்புவதாலோ, கோவப்படுவதாலோ இங்கே எதுவும் மாறாது. நாம களத்துல இறங்கணும். அப்போதான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்ங்கிற யதார்த்தம் எனக்குப் புரிஞ்சது.
`ward 109' என்ற பெயரில் இன்ஸ்டாகிராம்ல ஒரு பேஜ் ஆரம்பிச்சேன். எங்க ஏரியாவுல ஏதாவது பிரச்னைன்னா அதை போட்டோ எடுத்து அந்த இன்ஸ்டாகிராம் பேஜ்ல பகிர ஆரம்பிச்சேன். அதுமட்டுமல்லாம, சென்னை மாநகராட்சியின் `நம்ம சென்னை' ஆப்பிலும் அதை புகாரா பதிவு செய்வேன். பொதுவெளியில புகார் சொல்லப்பட்டதும் அதிகாரிகள் உடனடியா நடவடிக்கை எடுத்தாங்க. கால்வாய் சுத்தம் பண்றது, தண்ணீர் பிரச்னை, சாலை பிரச்னைன்னு அடுத்தடுத்து புகார் செய்ய அதிகாரிகள் ஆக்ஷன் எடுக்க அவற்றையெல்லாம் புகைப்படங்களாக இன்ஸ்டாகிராம் பேஜ்ல அப்டேட் செஞ்சேன். மக்கள் மத்தியில நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது மட்டுமல்லாம இதைச் செய்யுறதுல எனக்கும் ஒருவித ஆத்ம சந்தோஷம் கிடைச்சது. என் வேலைகளுக்கு நடுவே இந்தப் பணியையும் விடாம தொடர்ந்து செஞ்சேன். நிறைய மாற்றங்கள் நடந்துச்சு.
Also Read: `கலைநகரமாக உருவெடுக்கும் கண்ணகி நகர்!' - வெளிநாட்டு ஓவியரின் வண்ணத்தால் நெகிழும் மக்கள் #SpotVisit
அப்படித்தான் ஒருமுறை, எங்க பகுதியில 20 வருஷங்களா குப்பை கொட்டி நாசமாகியிருந்த ஓரிடத்தை சுத்தப்படுத்தச் சொல்லி புகார் கொடுத்தேன். மாநகராட்சி அதிகாரிகளும் உடனடியா அந்தக் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுத்துட்டாங்க. ஆனா, அடுத்த 20 நாள்களுக்குள்ளாகவே அந்த இடம் மீண்டும் பழையபடி ஆகிருச்சு. ஓரிடம் அசிங்கமா இருந்தா... அதை மேலும் அசிங்கம் பண்றதுக்கு நம்ம மக்கள் தயங்குறதில்ல... அந்த இடத்தை அழகா மாத்திட்டா... அந்த இடத்தை அசிங்கம் பண்ண மாட்டங்கன்னு தோணுச்சு. அப்போ உதிச்சதுதான் சுவர்கள்ல ஓவியங்கள் வரையும் ஐடியா. ஆனா, அதை நான் தனி ஆளா பண்ண முடியாது. இளைஞர்கள் பலரை இதுல ஈடுபடுத்தலாம்னு முடிவு பண்ணி இன்ஸ்டாகிராம்ல போஸ்ட் போட்டேன். நிறைய பேர் ஆர்வத்தோட முன்வந்தாங்க. அதுல கெளசிகா முக்கியமானவங்க. அவங்கதான் என்ன ஆர்ட் வரையலாம், எப்படி வரையலாம்னு டிசைன் பண்ணாங்க. மற்ற பணிகளை நான் ஒருங்கிணைப்பேன்.
திருவள்ளுவர்புரத்துல இரண்டு இடங்கள்ல சுவர்கள்ல ஓவியங்கள் வரைஞ்சோம். நினைச்சமாதிரியே ஆச்சர்யம் நடந்துச்சு. அந்த இடத்துல குப்பைகள் கொட்டுறது உடனே ஸ்டாப் ஆகிருச்சு. இதைக் கவனிச்ச மாநகராட்சி அதிகாரிகள் இதேபோல இன்னும் சில இடங்கள்லயும் செய்ய முடியுமான்னு கேட்டாங்க. அப்படித்தான் இந்த இடத்திலும் ஓவியங்கள் வரையுறோம். ஓவியங்கள் வரையறதுக்கு பெயின்ட்தான் பெரிய செலவு.
அதை எங்களுடைய சொந்தப் பணத்துலயே வாங்கிப்போம். லோக்கல்ல இருக்கிற பெயின்ட் கடைகள்ல இந்த விஷயங்களைச் சொன்னா அடக்க விலையிலேயே கொடுப்பாங்க. தன்னார்வலர்களுக்கு டீ, ஸ்நாக்ஸ் வாங்கித் தர்றதெல்லாம் நாங்களே பாத்துக்குறோம். மாற்றங்கள் நடக்கணும்னா நம்மால முடிஞ்சத நாம செய்யணும். நாம எதுவும் செய்யாம இங்கே எதுவும் மாறிடாது" என்று சிரிக்கும் சச்சினின் புன்னகையில் ஆயிரம் வண்ணங்கள்.
விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo
source https://www.vikatan.com/news/tamilnadu/story-of-youngsters-who-beautify-chennai-s-walls-with-creative-murals
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக