Ad

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

ஆட்சியில் இருந்தால் தான் கோவை மக்கள் மீது அக்கறையா மிஸ்டர் வேலுமணி?

2020-ம் ஆண்டு கொரோனா முதல் அலை தீவிரமடைந்திருந்த காலகட்டம் அது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை அதிகளவு பாதிக்கப்பட்டிருந்தது. அப்போது அ.தி.மு.க ஆட்சியில் இருந்தது. அப்போதைய அமைச்சர் எஸ்.பி வேலுமணி கோவையின் சகலமுமாக இருந்தார். கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததோ இல்லையோ.. கோவையை பச்சை மண்டலமாக அறிவித்து (கொரோனா பாதிப்பு இல்லாத பகுதி) அரசு.

கோவை போஸ்டர்

Also Read: ஊரெல்லாம் பினாமி கம்பெனிகள்... ஆர்.டி.ஐ அம்பலப்படுத்தும் வேலுமணி நெட்வொர்க்!

முக்கிய சாலைகள், இண்டு இடுக்குகள், சந்து பொந்து எங்கும்.. ‘உத்தமரே..’, ‘ஓய்வறியா உழைப்பாளியே..’, ‘கொரோனாவை வென்றது கோவை வியர்வைக்கு கிடைத்த வெற்றி..’ என்று வேலுமணி புகழ் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

2021-ம் ஆண்டு.. கொரோனா இரண்டாவது அலை முடிந்து..’ கொரோனா மூன்றாவது அலை எப்போது வேண்டுமானாலும் தொடங்கும். மற்ற மாவட்டங்களைவிட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால். கோவை மாவட்டத்தில் பாதிப்பு அதிகம் இருக்கும். எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ அதிகாரிகள் அறிவித்தனர்.

கொரோனா பெருந்தொற்று

தி.மு.க ஆட்சியாக இருந்தாலும், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தான் உள்ளனர். அதிகாரிகள் எச்சரித்த அடுத்த நாள் வேலுமணி வீடு மற்றும் அவர் சம்பந்தப்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடக்கிறது.

வேலுமணி மிகவும் பாதுகாப்பாக சென்னை அப்பார்ட்மென்டிலும், எம்.எல்.ஏ விடுதியிலும் தங்கிவிட்டார். அவரது உறவினர்கள், நண்பர்கள், சம்பந்தப்பட்டவர்கள் அவரவர் வீடுகளில் பாதுகாப்பாக இருந்தனர். ஆனால், ரெய்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்ற பெயரில் வேலுமணியின் ஆணைக்கிணங்க பல நூற்றுக்கணக்கான மக்கள் வேலுமணி வீட்டின் முன்பு குவிக்கப்பட்டனர்.

எஸ்.பி வேலுமணி வீடு

காலையில் இருந்து ரெய்டு முடியும் வரை காத்திருந்த மக்களுக்கு விதவிதமான உணவுகளை கொடுப்பதெல்லாம் இருக்கட்டும். அந்த மக்களுக்கு கொரோனா வந்தால் யார் பொறுப்பு மிஸ்டர் வேலுமணி..? இந்தப் பிரச்னை அன்றைய தினத்துடன் முடியவில்லை.

சில நாள்களுக்கு பிறகு வேலுமணி சென்னையில் இருந்து கோவை வரும்போது பிரமாண்ட வரவேற்பு கொடுக்க திட்டமிட்டனர். கோவை முழுவதும் ஏராளமான வண்டிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையத்தில் குவிக்கப்பட்டனர். விமான நிலையத்தில் கையை அசைக்கக் கூட முடியாத அளவுக்கு திணறியது கூட்டம். போக்குவரத்து ஸ்தம்பித்தது.

கோவை விமான நிலையம் கூட்டம்

வேலுமணியுடன் விமானத்தில் வந்த பலர் வெளியில் செல்வதற்குள் நொந்துவிட்டனர். அதேநேரத்தில், சாலையில் மருத்துவ உதவிக்காக சென்றவர்கள், அவசர வேலைக்காக சென்றவர்கள் நிலை குறித்து யோசித்து பார்த்தீர்களா மிஸ்டர் வேலுமணி..?

அதற்கெல்லாம் உங்களுக்கு நேரம் இருக்காது. எந்த பூஜை செய்து இந்தப் பிரச்னையில் இருந்து எப்படி தப்பிப்பது? என்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கவுமே நேரம் போதாது. தவிர, “விமானநிலையத்தில் இருந்து 1 கி.மீ தொலைவில் உள்ள அவிநாசி சாலை வந்து சேர 2 மணி நேரமானது.

அன்பரசன் முகநூல் பதிவு

விமானநிலையம் முதல் அவர் இல்லம் வரை திக்குமுக்காட செய்துவிட்டனர் என்று வேலுமணியின் சகோதரர் அன்பரசன் தொடங்கி, அ.தி.மு.க ஐ.டி விங் வரை அதை ஒரு சாதனை போல சிலாகித்துக் கொண்டிருந்தனர்.

“காசுக்காக மக்கள் வருகின்றனர். இதில் என்ன இருக்கிறது?” என்று கேள்வி எழலாம். இந்தப் பிரச்னை கூட்டத்துக்கு சென்றவர்களுடன் முடிந்துவிடப்போவதில்லை. அந்த ஆயிரக்கணக்கானோர் பல இடங்களுக்கு செல்வார்கள். அவர்கள் மூலம் அதைவிட பல மடங்கான மக்களுக்கு நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது.

எஸ்.பி வேலுமணி

வேலுமணியின் தனிப்பட்ட கௌரவ பிரச்னைக்கு, அதற்கு சம்பந்தமே இல்லாத அப்பாவி மக்கள் பாதிக்கப்பட வேண்டுமா..? மூன்றாவது அலைக்கு எச்சரிகை விடுத்தாலும், இதுபோன்ற கூட்டங்களை தடுக்க அரசும் எந்த நடவடிக்கை எடுப்பதில்லை,

வேலுமணி வீடு மற்றும் விமான நிலைய சம்பவங்களுக்கு காவல்துறை சம்பிரதாயத்துக்காக வழக்குப்பதிவு செய்தனர். இதனால், மேற்கொண்டு நடக்கும் பிரச்னைகளுக்கும் இதேபோன்ற கூட்டத்தை இறக்கி எதிர்கொள்ள மாட்டார்கள் என்பது நிச்சயமல்ல. ஆட்சியில் இருந்தபோது மட்டும் அக்கறை இருப்பது போல காண்பித்து பிரயோஜனம் இல்லை.

வேலுமணி

கோவை மக்கள் 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க-வுக்குதான் வெற்றியை கொடுத்துள்ளனர். எனவே, ஆட்சியில் இருப்பவர்களைவிட, கோவை மீது கூடுதல் அக்கறை அ.தி.மு.க-வுக்கு உள்ளது. ஆனால், மக்கள் பிரச்னைக்காக சாலையில் இறங்காத அதிமுக எம்.எல்.ஏ-க்கள், வேலுமணிக்கு ஒரு பிரச்னை என்றதும் அன்றைய நாள் முழுவதும் அந்த கூட்டத்துடன் அமர்ந்திருந்தனர்.

வேலுமணி மட்டுமல்ல. சமீபத்தில் கோவை வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூட்டத்திலும் இதே நிலைதான். “தமிழ்நாட்டிலேயே கோவைதான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இந்தநிலையில் இது கொரோனா பரவலுக்கு ஊக்குவிக்காதா?” என முருகனிடம் கேட்டதற்கு,

பா.ஜ.க கூட்டம்

“நான் எளிய மக்களை சந்திப்பதில் பத்திரிகையாளர்களுக்கு விருப்பம் இல்லையோ..? தி.மு.க ஆட்சியமைத்தபோதும் இப்படிதானே இருந்தது..?” என்று பிரச்னையை புரிந்து கொள்ளாமல் பதில் அளித்தார்.

இங்கு பிரச்னை அ.தி.மு.க, பா.ஜ.க, தி.மு.க என்பதில்லை. யார் செய்தாலும் அது தவறுதான். உங்களது தனிப்பட்ட அரசியலுக்காக கோவை மக்களின் உயிர்களை பணயம் வைக்காதீர்கள்!



source https://www.vikatan.com/news/tamilnadu/controversy-activity-about-former-minister-veluamani-in-coimbatore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக