இந்தியாவில் இம்மாதம் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதே போல், 'பாகிஸ்தான்' தனது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 14-ம் தேதியன்று கொண்டாடி வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானில் கடந்த 14-ம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் அமைந்துள்ள அந்நாட்டின் தேசிய நினைவுச் சின்னமான மினார்-இ-பாகிஸ்தான் வளாகத்தில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, சுமார் 400-க்கும் மேற்பட்ட ஆண்கள் சேர்ந்து ஒரு இளம்பெண்ணின் ஆடைகளைக் கிழித்து, அடித்துத் துன்புறுத்தி, பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு நாட்டின் தேசிய நினைவுச் சின்னத்தின் அருகில் நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து ஒரு இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்ததான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மினார்-இ-பாகிஸ்தான் நினைவுச் சின்னத்தில் வைத்து 400-க்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் ரீதியாக கொடுமை செய்யப்பட்ட அந்த இளம்பெண், லாகூர் பகுதியைச் சேர்ந்த டிக்-டாக் பிரபலம் என்பது தெரியவந்திருக்கிறது. டிக்-டாக் வீடியோக்களால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தனக்கு உருவாக்கி வைத்திருக்கும் அந்த பெண், பாகிஸ்தான் சுதந்திர தினத்தன்று மினார்-இ-பாகிஸ்தான் நினைவுச் சின்னத்திற்கு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருக்கிறார்.
அங்கு, அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து டிக்-டாக் வீடியோ ஒன்று பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென அந்த இளம்பெண்ணைச் சுற்றிவளைத்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் அவரை கட்டிப் பிடித்து அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளனர். அதனால், அந்த பெண் கத்தி கூச்சலிட்டிருக்கிறார். அதையடுத்து, அங்கு இன்னும் கூடுதலாகக் கூடிய நபர்கள் இளம்பெண் மற்றும் அவருடன் வந்திருந்த நண்பர்களின் தங்க நகைகள், பணம் மற்றும் செல்போன்களை களவாடி விட்டு, அவர்களின் ஆடைகளைக் கிழித்து அட்டகாசம் செய்திருக்கின்றனர்.
Also Read: தாலிபன்களை ஆதரிக்கும் சீனா, பாகிஸ்தான்; இந்தியாவுக்கு நெருக்கடியா?!
தொடர்ந்து, அங்குக் குழுமியிருந்த சுமார் 400-க்கும் மேற்பட்டோர் டிக்-டாக் பிரபலமான அந்த பெண்ணின் ஆடைகளைக் கிழித்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு அவரை பல முறை அந்தரத்தில் தூக்கிப் போட்டு ஆர்ப்பரிப்பில் கூச்சலிட்டனர். எதிர்பாராத விதமாக அந்த கூட்டத்தில் சிக்கிய அந்த இளம்பெண் கதறி அழுதபடி உதவிக்கு அழைத்தும் அங்கிருந்த யாரும் அவரை காப்பாற்ற முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. டிக்-டாக் பிரபலம் மற்றும் அவரது நண்பர்களுக்கு நேர்ந்த கொடுமைகளைக் கூட்டத்திலிருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. அதிர்ச்சியுடன் இணையவாசிகள் அந்த வீடியோவை அதிகளவில் பகிர்ந்து தேசியளவில் ட்ரெண்டாக்கினார்கள்.
சுதந்திர தினத்தன்று அந்நாட்டின் நினைவுச் சின்னத்தில் வைத்து இளம்பெண் மற்றும் அவரது நண்பர்களுக்கு நடந்த உச்சக்கட்ட கொடுமைகள் பாகிஸ்தான் நாட்டு மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கொதித்துப் போன மக்கள் சம்பவம் குறித்து அரசு தரப்பில் உடனடியாக விளக்கமளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு அரசை வலியுறுத்தினர். மினார்-இ-பாகிஸ்தானில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் குறித்து லாகூர் மாகாண முதல்வர் உஸ்மான் பஸ்தரை தொடர்பு கொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட இளம்பெண் மற்றும் அவரது நண்பர்களும் மினார்-இ பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்டு வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு தற்போது 300-க்கும் மேற்பட்டோரை அதிரடியாகக் கைது செய்திருக்கின்றனர்.
சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கூட ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற ஆபத்தான நிலையில் பாகிஸ்தான் இருக்கிறதா? என்று பெண்ணிய செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
source https://www.vikatan.com/social-affairs/crime/in-a-terrible-incident-400-men-sexually-assaulted-a-woman-in-pakistan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக