Ad

புதன், 25 ஆகஸ்ட், 2021

நீலகிரி: ஆற்றில் ஒரு கி.மீ தூரம் அடித்துச்செல்லப்பட்ட குழந்தை! -விரைந்து வந்து மீட்ட தீயணைப்புத்துறை

நீலகிரி மாவட்டம் குன்னூர் எம்.ஜி.ஆர் நகர் சுறா குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாதேஸ்வரன்- மணிமேகலை தம்பதியர். இவர்களது ஒன்றரை வயது பெண் குழந்தை சேன்விஶ்ரீ ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென ஆற்றில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆற்றில் குழந்தை அடித்துச் செல்லப்படுவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டு அருகில் உள்ள குன்னூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

child rescue

உடனடியாக விரைந்துச் சென்று ஆற்றில் இறங்கிய மீட்பு குழுவினர், தண்ணீரில் அடித்துச் சென்றுகொண்டிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர். ஆற்றில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு அடித்துச் செல்லப்பட்ட குழந்தையை பத்திரமாக, உயிருடன் மீட்ட குன்னூர் தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Also Read: நீலகிரி: வாட்டிய வறுமை.. 3 குழந்தைகளையும் விற்ற பெற்றோர்! - ஊட்டியை உறையவைத்த குழந்தை விற்பனை

குழந்தை மீட்பு குறித்து குன்னூர் தீயணைப்புத் துறையினர் பேசுகையில், "தகவல் தெரிந்த அடுத்த நிமிடமே களத்தில் இறங்கினோம். நிலைய அலுவலர் தலைமையோடு 4 வீரர்களும் ஆற்றில் இறங்கி தேடினோம். அருவியைத் தாண்டி தண்ணீரில் இழுத்து வரப்பட்ட‌ குழந்தையை மீட்டோம்.

child rescue

சுய நினைவின்றி இருந்த குழந்தைக்கு, நுரையீரல் இதய உயிர்ப்பித்தல் முதலுதவியை அளித்து ஆட்டோவில் ஏற்றி குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தோம். உடனடியாக மீட்கபட்டதால் அதிர்ஷ்டவசமாக குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது" என்றனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/child-rescue-in-coonoor-river-by-fire-department

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக