Ad

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

AKS - 2|பெண்ணை கட்டிக் கொடுக்கும் மனநிலையில் அப்பாக்கள், கற்பிதங்களை உடைக்கும் மகள்கள்!

காயத்ரி திருமணத்துக்கு சம்மதிப்பாளா, மாட்டாளா என்கிற கேள்வியுடன் முதல் எபிசோட் முடிந்திருந்த நிலையில் மாப்பிள்ளையும், பெண்ணும் தனியாக பேசும் அந்த இடத்தில் இருந்தே இரண்டாவது எபிசோட் தொடங்கியது.

தான் உடுத்தும் உடையில் இருந்து பயன்படுத்தும் காஸ்மெட்டிக்ஸ் வரை எல்லாமே அவளது அண்ணனும், அப்பாவும் பார்த்து பார்த்து வாங்கி தந்தது என்றும், அம்மா இல்லாத பிள்ளையென என்ற அக்கறையில் குடும்பத்தினர் பிரியமாக இருப்பதாகவும் மாப்பிள்ளையிடம் சொல்கிறாள் காயத்ரி. திருமணத்துக்கு முன்பாகவே தான் சம்பாதித்து தன் சொந்தக் காசில் அதற்கு கைமாறு செய்ய விரும்புவதாகவும் சொல்கிறாள்.

ஆதலினால் காதல் செய்வீர் 2

காயத்ரி வேலைக்கு செல்ல ஆசைப்படும் காரணத்தை சொல்லும்போது மாப்பிள்ளை, ‘’பொதுவா மற்ற பெண்கள் வேலைக்கு போறதுக்கான காரணங்களா சுயமரியாதை, அடையாளம், பொருளாதார சுதந்திரம்னுதானே சொல்வாங்க. நீங்க சொன்ன காரணம் இன்ட்ரஸ்டிங்கா, க்யூட்டா இருந்தது’’ என்பான். மேலும் அவளது கனவுகள் நிறைவேறும் வரையில் காத்திருப்பதாகவும் உறுதியளிப்பான்.

காரணம் என்னவாக இருந்தாலும் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரமே என்றும் சுயமரியாதையை நோக்கிய முதல் அடியாக இருக்கும். தனது வருமானத்தில் வீட்டில் இருப்பவர்களுக்கு தேவைப்பட்டதை வாங்கித் தரவேண்டும் என்கிற ஆசை கிட்டத்தட்ட பள்ளி முடியும் வயதிலிருந்தே பெண் பிள்ளைகளுக்கு தோன்றத் தொடங்கிவிடும். ஆனால், திருமணத்துக்குப் பிறகு வேலைக்கு செல்வது, தனது வருமானத்தில் கணவர் வீட்டினரின் மனம் நோகாமல் பெற்றோருக்கு செலவு செய்வது இன்று வரையிலும்கூட பெரும்பாலான குடும்பங்களில் சாத்தியம் இல்லை.

முதல் எபிசோடில் காயத்ரியின் தந்தை, “நாலு விஷயம் தெரிஞ்சுக்கவே பொம்பள புள்ளைய படிக்க வச்சது, வேலைக்கு அனுப்புறது நம்ம குடும்பத்துக்கு செட் ஆகாது” என்பார். அதேபோல் இரண்டாவது எபிசோடிலும் ’காயத்ரி வேலைக்கு செல்லட்டும்’ என மாப்பிள்ளை சொல்லும்போது, ”அது வேலைக்கு போய் என்ன செய்யப்போவது, நமக்கு வருமானம் முக்கியமில்ல” என்பார். அதாவது பெண் பிள்ளைகள் வேலைக்கு செல்வது அவமானம் என்றும் அவர்களின் வருமானத்தை நம்பி வீட்டு ஆண்கள் இல்லை, வீட்டின் பொருளாதாரம் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்வார்.

சாதாரண குடும்பங்களில்கூட பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என கேட்கும்போது, ’உன்னை யார் கையிலாவது பிடித்து கொடுத்து விடுகிறோம். அதன்பிறகு பிடித்ததை செய்துகொள்’ என்று பெற்றோர்களும், ’உனது வருமானத்தை நம்பி நாங்கள் இல்லை, அதனால் வேலைக்கு செல்ல வேண்டாம்’ என கணவனும் வெளிப்படையாகவே அனுமதி மறுக்கின்றனர்.

காயத்ரியிடம் தனியாக பேசிய பின்பு யோசித்து பதில் சொல்லுமாறு வீட்டுக்குள் செல்லும் மாப்பிள்ளை, ‘’காயத்ரியை யாரும் கட்டாயப்படுத்த வேண்டாம், அவளது முடிவை அவளே சொல்லட்டும்’’ என அனைவரிடத்திலும் சொல்கிறான்.

ஆதலினால் காதல் செய்வீர் 2

அதைக்கேட்டு பதற்றத்துடன் காயத்ரியின் அண்ணி மற்றும் தாய் மாமா காயத்ரியிடம் பேசுகிறார்கள். அவளை சம்மதிக்க வைக்க தாய் மாமா முயற்சி செய்கிறார். காயத்ரி வீட்டுக்குள் வந்து புன்னகையுடன் சம்மதம் சொல்கிறாள்.

ப்ரொமோ வீடியோவை வைத்து காயத்ரி திருமணத்துக்கு சம்மதிப்பாள் என்று ஓரளவு யூகிக்க முடிந்திருந்தது. ப்ரொமோவில் காயத்ரி வேலைக்கு சென்னை செல்வதைக் கண்டு அவள் திருமணத்துக்கு உடனடியாக சம்மதிக்காமல் சுற்றி வளைத்து காட்சிகள் இருக்கும் என்று நினைத்திருந்த நிலையில் இரண்டாவது எபிசோடில் சட்டென்று சம்மதம் தெரிவிப்பது நல்ல ட்விஸ்ட்.

காயத்ரியின் பெண் பார்க்கும் படலம் நல்லபடியாக முடிந்து அவள் வேலைக்கு செல்வதும் உறுதியான மகிழ்ச்சியில் இருக்கும் நம்மை டெல்டாவின் பச்சை வயல்களில் இருந்து பெங்களூருவுக்கு இடம்பெயர்த்து இரண்டாவது ஹீரோவான சிவாவை அறிமுகம் செய்கிறது இரண்டாவது எபிசோடின் இரண்டாம் பாகம்.

தன்னை காதலிக்கும் மாயாவின் அப்பா, சிவாவிடம் திருமணத்தைப் பற்றி பேச அழைத்திருப்பார். மாயாவையும் அவளது தந்தையையும் உணவகத்தில் ஒன்றரை மணி நேரம் காத்திருக்க வைத்து சாவகாசமாய் சிவா அங்கு வருவான்.

ஆதலினால் காதல் செய்வீர் 2

டி-ஷர்ட், அதன்மீது ஒரு சட்டை, முழங்கால் வரையில் ஷார்ட்ஸ், காதில் கடுக்கன், கண்களில் கூலர்ஸ் என ஜாலியாக பிக்னிக் செல்வது போல தனது திருமணத்தை பற்றி பேச வந்திருக்கும் சிவாவை கண்டு அதிர்ச்சியடைவார் மாயாவின் தந்தை. சிவா உணவகத்தில் பைக்கை நிறுத்தி இறங்கும்போது அருகில் இருக்கும் பைக்கில் காலை இடித்துக்கொண்டதற்காக அந்த பைக்கை உதைத்துவிட்டு வருவான். சிவா எந்தளவு ஷார்ட் டெம்பர்ட் ஆளாக இருக்கிறான் என்பதை அந்த ஒரே உதையில் புரியவைத்து விடுகிறார் இயக்குநர்.

மாயாவின் அப்பா சிவாவிடம் அவனது வேலை மற்றும் பெற்றோரை பற்றி கேட்கிறார். அதற்கு அவன் கோபப்பட்டு அதைபற்றி எல்லாம் பேச முடியாது என எரிச்சலாகிறான்.

“ஃப்யூச்சர் பத்தி பேசக்கூடாது, கரியர் பத்தி பேசக்கூடாது, பேரன்ட்ஸ் பத்தியும் பேசக்கூடாதுனா நான் எதுக்காக இங்க வந்திருக்கேன்” என்று மாயாவின் அப்பா அவளிடம் கோபப்படுகிறார்.

பல பெற்றோர்களும் இன்று பெண் பிள்ளைகளின் காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். ஆனால் ஏற்பாட்டு திருமணங்களின் அடிப்படை விஷயங்களான வருமானம், சாதி/மதம், சொத்து, ஸ்டேட்டஸ்(?!) பொருத்தம் போன்ற விஷயங்களை காதல் திருமணத்திலும் பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள். எக்காரணம் கொண்டும் தங்கள் மகள்கள் வருங்காலத்தில் பொருளாதார ரீதியாக சிரமப்படக்கூடாது என்பது பெற்றவர்களின் கவலை.

கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு செல்வது, லிவிங் டுகெதர், ஹவுஸ் ஹஸ்பண்ட் கான்செப்ட்கள் பெருநகரங்களில் ’சகஜமாகி’ கொண்டிருக்கும் இன்றைய சூழலில் வருமானம், சொத்து, வேலை போய்விட்டால் தேவையான பேக்கப் என்பது பற்றிய பேச்சுக்கள் இன்றைய தலைமுறையினருக்கு எரிச்சலடைய வைக்கிறது.

ஒரு பக்கம் திருமணம் என்பது இருவர் சேரும் நிகழ்வு என்றில்லாமல் பெற்றோர்கள் இன்னமும் மகள்களை ’கட்டிக் கொடுக்கும்’ மனநிலையிலேயே இருக்கிறார்கள். மறுபக்கம் வேலை, கரியர், மற்றும் எதிர்காலம் பற்றிய கவலை இல்லாத சுதந்திரமான ஆண்களை திருமணம் செய்து கொள்ள விரும்பும் மாயாவைப்போன்ற பெண்களும் இருக்கிறார்கள். காரணம் காதல்!

ஆதலினால் காதல் செய்வீர் 2

ஆனால், இவற்றை பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. தங்கள் பிள்ளைகள் பிடித்தவரை திருமணம் செய்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்கிற அன்பு ஒருபுறம் இருந்தாலும், இன்னொருபுறம் சமூகத்தையும் உறவினர்களையும் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்கிற பதற்றம் இன்னமும் பெற்றோர்களுக்கு இருக்கிறது. அதனால்தான் வருமானம், ஜாதகம், சொத்து, அழகு என்று சமூகம் உருவாக்கியிருக்கும் ஃபிரேமுக்குள் பொருந்தும் வாழ்க்கைத் துணையை தங்கள் பிள்ளைகள் காதலில்(?!) தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.

மாயாவின் தந்தையை போலத்தான் பலரும். ‘’திருமணம் பற்றி பேச வரும்போது ஃபார்மல் உடையில் வர வேண்டாமா?’’ என்று கேட்கும் அளவில் திருமணத்தையும், திருமணம் சார்ந்த முடிவுகளையும் தீவிரமாக அணுக வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

இறுதி காட்சியில் காயத்ரியின் அத்தை மகள் புனிதாவின் அறிமுகம் நடக்கிறது. காயத்ரியை விட மூன்று வயது மூத்தவளான புனிதா திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு தனது தந்தையின் கடனை அடைக்க வேண்டிய கடமை தனக்கு இருக்கிறது என சென்னையில் வேலை பார்க்கிறாள். குடும்பத்தினருடன் வீடியோ காலில் துப்பட்டா அணிந்து, சடை பின்னி, பூ, பொட்டு வைத்திருக்கும் புனிதா வீடியோ காலை கட் செய்ததும், துப்பட்டாவையும், பூவையும் கழற்றி வீசிவிட்டு ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் மற்றும் ஷார்ட்ஸில் கலாசார காவலர்களுக்கு கண்ணிவெடி வைக்கிறாள்.

மொத்தத்தில் சீரிஸ் விறுவிறுவென வேகமாக செல்கிறது. காட்சிகள் மற்றும் வசனங்கள் கூடுதல் குறைவில்லாமல் கச்சிதமாக இருக்கின்றன. மூன்றாவது எபிசோடுக்காக ஆவலுடன் காத்திருக்க செய்கிறது இந்த வேகம்.

காத்திருப்போம்!



source https://cinema.vikatan.com/television/vikatans-aadhalinaal-kaadhal-seiveer-digital-series-episode-2-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக