Ad

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

``அதி வேகத்தில் வளர்கிறது நாட்டின் பொருளாதாரம்'' - மோடி கூறுவது யாருக்குப் பொருந்தும்?

இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் (CII) 2021-ம் ஆண்டுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாகப் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் பேசியவர். `` கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் நமக்கு அந்நிய நேரடி முதலீட்டைப் பெறுகிறது. தொழில் துறையில் உள்ளவர்களும், அமைப்புகளும் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றுகின்றனர். இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் வேகமடைந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களைப் பயன்படுத்தவே ஒவ்வொரு இந்தியனும் விரும்புகிறார்கள். நாட்டு மக்களின் உணர்வுள்ள உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருளோடு இணைத்தே உள்ளது. இதற்கு ஏற்ப நாட்டை மாற்ற வேண்டும். தொழில்துறையில் அதற்குத் தகுந்தாற்போல் கொள்கைகளையும், திட்டங்களையும் மாற்ற வேண்டும். புதிய உலகத்துடன் இணைந்து வளர இந்தியா தயாராக உள்ளது. அதற்காக பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. " என்றார்.

சி.ஐ.ஐ கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி

தொடர்ந்து பேசியவர், ``இந்தியர்களின் தன்னம்பிக்கை அதிகரித்து வருகிறது. அனைவரும் அதில் கவனம் செலுத்தவேண்டும். ஒலிம்பிக் போட்டிகளில் இதனை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். இளைஞர்கள் கடினமாக உழைக்கவும், துணிச்சலான முடிவினை எடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். இளைஞர்கள் மனதில் எந்த தயக்கமும் இருப்பதில்லை. இந்தியாவின் தொழில் தொடங்கும் நிறுவனங்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்தியா இன்று எளிதாகத் தொழில் செய்யக்கூடிய தரவரிசையில் பெரும் முன்னேற்றங்களை எட்டியுள்ளது. ஒரு காலத்தில் விவசாயம் வாழ்வாதாரமாக மட்டுமே பார்க்கப்பட்டது. சமீப காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் மூலம் நமது விவசாயிகளை உள்நாட்டு மற்றும் உலக சந்தைகளுடன் இணைக்கும் முயற்சியை எடுத்து வருகிறோம்" என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

பிரதமர் இந்தியாவின் பொருளாதாரம் மீண்டு வருகிறது என்று பேசியது தொடர்பாகப் பொருளாதாரம் சார்ந்து இயங்கும் வழக்கறிஞர் சத்யகுமாரிடம் பேசினோம். `` இந்தியாவில் பொருளாதாரம் மிக அழுத்தமான நிலையில்தான் இருக்கிறது. அதே வேளையில் பொருளாதாரம் மெல்ல மீண்டு வருகிறது என்பதும் உண்மை தான். ஒரு நாட்டின் பிரதமர் என்ற வகையில் ஒரு நேர்மறை எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக அவர் அப்படிக் கூறுகிறார். இந்தியாவில் வீழ்ச்சியிலிருந்த தொழில்கள் எல்லாம் இப்போது தான் மீண்டு வருகிறது. இதை வளர்ச்சி என்று சொல்ல முடியாது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலையை அடைந்து, பின் மீண்டும் அதிகரித்தால் அதை வளர்ச்சி என்று கூறலாம்" என்றார்.

வழக்கறிஞர் சத்யகுமார்

மேலும், ``இந்தியாவில் தொழில் தொடங்குவது எளிது என்பது முற்றிலும் உண்மை கிடையாது. அதற்கான சட்ட திட்டங்களை மாற்றி வருகிறார்கள். என்னதான் சரி செய்தாலும், மாற்றம் கொண்டுவந்தாலும், ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றால் அதற்குக் கடன் கிடைக்க வேண்டும். சாமானியர்களால் எளிதில் ஒரு தொழிலைத் தொடங்க கடன் வாங்கிவிட முடியாது. அந்தநிலை எப்போது உருவாகிறதோ அப்போது தான் எளிதாகத் தொழில் தொடங்கும் நிலை உருவாகும். நாட்டின் பொருளாதாரம் மேம்பட மத்திய மாநில அரசுகள் சேர்ந்து பணியாற்ற வேண்டும். பொருளாதார வளர்ச்சியில் மத்திய நிதியமைச்சர் முயற்சிகள் போதவில்லை என்று கூறவேண்டும்" என்று பேசினார்.

பிரதமர் பேசியது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜிடம் பேசினோம். ``பொருளாதாரத்தில் எங்கோ ஒரு குறியீடு அதிகரித்தவுடன் அதைப் பேசும் பிரதமர். 2020-2021-ம் ஆண்டில் 23.9 சதவிகிதம் கீழே போனதே அப்போது பேசியிருக்கிறாரா. இதுவரை அவர் என்றுமே பொருளாதாரம் கீழே போனதை பற்றிப் பேசியதே கிடையாது. 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிச் செல்லப் போகிறோம் என்று கூறினார்கள். பிரதமர் என்றுமே உண்மை பேசுவது கிடையாது. கடந்த மார்ச் முதல் அக்டோபர் காலகட்டத்தில் இந்தியாவிலிருந்த 24 சதவிகிதம் நபர்களுக்கு 3,000 ரூபாய் கூட கிடைக்கவில்லை என்று ஒரு ஆய்வு சொல்கிறது. அதே காலகட்டத்தில் மட்டும் 100 தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு 13 லட்சம் கோடி என்ற அளவுக்கு வளர்ந்துள்ளதாக இன்னொரு ஆய்வு கூறுகிறது." என்றார்.

க.கனகராஜ்

தொடர்ந்து பேசியவர், ``அந்த காலத்தில் மட்டும் அம்பானியின் சொத்து மதிப்பு 1 மணி நேரத்திற்கு 90 கோடி ரூபாய் என்ற அளவுக்கு வளர்ந்துள்ளது. அப்படியானால் இந்த பொருளாதார வளர்ச்சி என்பது யாருக்கானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சிலநாட்களுக்கு முன்னர் 76 டாலராக இருந்த கச்சா எண்ணெய்யின் விலை தற்போது 69 டாலராகக் குறைந்துள்ளது. ஆனால், பெட்ரோல் விலையில் ஏதேனும் மாற்றம் உள்ளதா? இந்த லாபங்கள் எல்லாம் யாருக்குச் செல்கிறது. தற்போது விவசாயத்தையும் சர்வதேச பெரும் முதலாளிகளிடம் வழங்க ஏற்பாடு நடைபெறுகிறது என்று தான் சொல்லவேண்டும். பெரும் முதலாளிகளின் மாநாட்டில் அவர்களுக்காகப் பேசியுள்ளார். ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் கஷ்டப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். பொருளாதாரம் வளர்கிறது என்றால், இங்கு யாரின் பொருளாதாரம் வளர்கிறது என்பதே கேள்வி!" என்று கூறினார்.

இந்த விவகாரம் குறித்து தமிழக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.`` இந்தியப் பொருளாதாரம் நலிவடைந்து விட்டது என்று சொன்னால் மகிழ்ச்சி அடைபவர்கள். இந்தியா சிறப்பாகச் செயல்படவில்லை என்று சொன்னால் மகிழ்ச்சி அடைபவர்கள். இந்தியா குறித்து தவறான தகவல்கள் கூறினால் மகிழ்ச்சி அடைபவர்கள். இவர்கள்தான் தற்போது நாட்டில் உள்ள எதிர்க்கட்சியினர். ஏனென்றால், உலகமே மிகப்பெரிய இக்கட்டில் கொரோனாவில் தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், உலகில் உள்ள மற்ற நாடுகளில் எல்லாம் பொருளாதாரம் எப்படிச் சரிந்து கொண்டிருக்கிறது என்பது தெரியாமல், புரியாமல் தொடர்ந்து இந்தியா குறித்து இழிவாகப் பேசுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, உலகிலேயே அதிகளவு கொரோனா தடுப்பூசி செலுத்திய நாடக இந்தியா இருக்கிறது" என்றார்.

Also Read: `பெகாசஸ் விவகாரம்' மறுப்பதற்கு இரண்டு வாரங்களா? - மத்திய அரசின் அணுகுமுறைக்குப் பின்னால்?

நாராயணன் திருப்பதி

தொடர்ந்து பேசியவர், ``இந்தியாவில் தடுப்பூசி சரியாக செயல்படுத்த முடியாது என்று கூறினார்கள். தற்போது வரை 52 கோடி தடுப்பூசிகளை செலுத்தியுள்ளோம். இதுகுறித்து வாய்திறக்கிறார்களா? இதை சாத்தியமே இல்லை என்று கூறியவர்கள் இதுகுறித்து இப்போது பேச மறுப்பது ஏன்? அதே போல, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா காரணமாக முடங்கியிருந்த தொழில்களுக்கு கடன் உதவு, பண உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், சாதாரண மக்களுக்கு உணவு, அரிசி, பருப்பு போன்றவை என்று பல்வேறு திட்டங்களை நாம் கொண்டு வந்தது மூலமாக இவ்வளவு மக்கள் தொகை கொண்ட நாட்டில் பொருளாதாரத்தை நிலைக்க செய்திருப்பது என்பது மிகப்பெரிய விஷயம். அரசியல் காரணங்களுக்காக தொடர்ந்து இதுபோன்று இவர்கள் கேள்வியெழுப்புவதும், கிண்டல் செய்வதுமாக இருக்கிறார்கள். எதிர்கட்சிகளுடைய மலிவான அரசியலை ஒதுக்கிவிட்டு, நாடு மேலும் முன்னேறுவதற்கு பாடுபடவேண்டும் என்பதே எங்கள் கட்சியினுடைய, எங்கள் பிரதமருடைய எண்ணமாக இருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/the-countrys-economy-is-growing-at-a-rapid-pace-to-whom-does-modis-claim-apply

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக