Ad

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

மும்பை: `சரத்பவார் போல் போனில் பேசிய மர்ம நபர்' - திடுக்கிட்ட உள்துறை அமைச்சக அதிகாரி!

மஹாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருக்கிறது. இந்த அரசின் ரிமோட் கண்ட்ரோல் முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவாரிடம் இருப்பதாக பரவலாக கூறப்படுகிறது. இதனால் தொழில் துறையினர் உட்பட அனைத்து தரப்பினரும் தங்களது குறைகளை சரத்பவாரிடம் நேரடியாக சென்று முறையிடுகின்றனர். சரத்பவார் சொன்னால் எதுவும் நடக்கும் என்ற நிலை இருப்பதால் அதனை மர்ம நபர் ஒருவர் தனக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளார்.

சரத்பவார்

மும்பை மந்த்ராலயாவில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தன்னை சரத்பவார் என்று அறிமுகம் செய்து கொண்டு பேசினார். அந்த நபர் குறிப்பிட்ட ஒரு வருவாய்த்துறை அதிகாரியின் பெயரை குறிப்பிட்டு அவரை இடமாற்றம் செய்யும் படி கேட்டுக்கொண்டார். ஆனால் அவரின் பேச்சு உள்துறை அமைச்சக அதிகாரிக்கு சந்தேகத்தை கிளப்பியது. சரத்பவார் போன்று பேசிய நபர் பேசி முடித்த பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரி சரத்பவாரின் மும்பை இல்லத்திற்கு போன் செய்து இது குறித்து விசாரித்தார். ஆனால் சரத்பவார் வீட்டில் இல்லை. அதோடு போனில் பேசியது வேறு ஒருவர் என்று தெரிய வந்தது. உடனே இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து போன் எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடித்து போன் செய்த விகாஸ்(57) என்பவரை கைது செய்தனர். அவர் 'ஸ்பூப்' என்ற சாப்ட்வேரைப் பயன்படுத்தி தனது சத்தத்தை மாற்றிப் பேசியது தெரிய வந்தது. புனேயில் பிடிபட்ட அவரோடு அவரின் கூட்டாளிகள் கிரண், தீரஜ் ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.

Also Read: மும்பை: மிரட்டிப் பணம் பறித்த வழக்கு; மாஜி போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்குக்குத் தேடுதல் நோட்டீஸ்

cell phone

அவர்கள் மூன்று பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீஸார் அவர்களை தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்கள் குறிப்பிட்ட வருவாய்த்துறை அதிகாரிக்கும், கைது செய்யப்பட்டவர்களுக்கும் என்ன தொடர்பு என்பது குறித்தும், யார் சொல்லி அவர்கள் இது போன்று பேசினார்கள் என்றும், இதேபோன்று இதற்கு முன்பு வேறு யார் பெயரிலாவது போனில் பேசி மோசடி செய்துள்ளனரா என்பது குறித்தும் குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும் 3 பேரும் புனேயில் பில்டர் ஒருவரை மிரட்டி 5 கோடி கேட்டு மிரட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக புனே போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மும்பை போலீஸாரின் போலிஸ் காவல் முடிந்த பிறகு புனேயிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்படும் என்று பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ண பிரகாஷ் தெரிவித்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து மந்த்ராலயாவிற்கு வரும் அழைப்புகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 2014ம் ஆண்டு இதே போன்று சரத்பவார் மற்றும் தற்போதைய மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே ஆகியோர் போல் பேசி வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக ராகுல் என்பவரைக் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/crime/mumbai-a-man-has-been-arrested-for-talking-to-a-home-ministry-official-on-the-phone-like-a-sharad-pawar-in-mumbai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக