பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
மும்பை வந்ததும் என்னை மிகவும் கவர்ந்தது அந்த காம்ப்ளக்ஸில் இருந்த சதுர வடிவ விளையாட்டு திடலும் சுற்றி வரும் நடைபாதையும்தான். கூடவே இரண்டு பவள மல்லி மரங்களும் கவனத்தை ஈர்த்தன.
காலையில் எழுந்ததும் முதலில் பூக்களை சேகரிக்க கிளம்பி விடுவேன். வெள்ளையும் சிவப்புமாக மிக மென்மையான இதழ்கள்.
இந்த மரங்களை வள்ளல்கள் என்றே சொல்லலாம். எக்கச்சக்கமான மலர்களை அருகில் உள்ள செடிகள் மேலும் பெஞ்சுகள் மீதும்வாரி இறைத்திருக்கும். பாரபட்சமின்றி யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று கொட்டிக்குவித்திருக்கும்.
சில பூக்கள் மட்டும் எடுக்க முடியாதபடி ஓரங்களில் போய் சிதைந்திருக்கும். வாழ்க்கையில் எல்லா தகுதிகளும் இருந்தும் பிரகாசிக்க முடியாமல் போகும் இளைஞர்களை நினைவுபடுத்தும். அவர்களுக்காக சின்னதாக ஒரு பிரார்த்தனையை மனதில் வைத்துக் கொண்டு பூக்களை சேகரிப்பதுண்டு
இயற்கையின் கொடை , அழகின் சிரிப்பு எப்படித்தான் சொல்வது இதன் தாக்கத்தை!
மழைக்காலம் என்பதால் நந்தியாவட்டைசெடிகளின் இலைகளில் பூக்களுடன் நீரும் நிறைந்திருக்கும்.
விகடனில் நட்சத்திரக்கதைகளும் திருக்குறள் கதைகளும் வலம் வந்த நாட்களில் வந்த ஒரு சிறப்பு சிறுகதை என் மனதில் வந்து போகும்.
ராணுவ வீரன் போர்க்களத்திலிருந்து மனைவிக்கு எழுதும் கடிதமாக விரியும்.
இமயமலையின் வெண்பனியும் வீரர்களின் சிவப்பு ரத்தமும் ஒப்பிட்டு அதே போல் மனைவியின் உதடுகளின் சிவப்பும் பற்களின் வெண்மையும் என்று உருகும் மனோ நிலை. என்னை மிகவும் நெகிழ வைத்த கதை.
நடைப் பயிற்சி மேற்கொள்பவர்களை நிறைய பார்க்கலாம்.. காலையில் பால் பாக்கெட் போடுபவர்களும் பிரெட் காய்கறி பழங்கள் என்று வண்டிகளில் எடுத்து வருகிறவர்கள் தவிர குட்டையாக தேங்கியிருக்கும் மழை நீரைக்குடிக்கும் சிட்டுக்குருவிகளும் புறாக்களும் ஒரு இனிமையான மனோநிலையை தோற்றுவிக்கும்.
இங்கு வீட்டு வாசலில் வந்து குப்பை எடுப்பது வழக்கம் என்பதால் டிராலி போல ஒரு வண்டியுடனும் பெரிய வாளியுடனும் சுற்றும் துப்புரவு பணியாளர்களை பார்க்கலாம். ஏழு மாடிகளிலும் ஏறி இறங்கும் அவர்களின் பணி மகத்தானது.
'நீங்கள் கடிகாரத்தை கட்டிக் கொண்டு தினமும் ஸ்டெப்ஸ் போடுகிறீர்கள். துப்புரவு பணியாளர்கள் ஒரு மணி நேரத்தில் உங்கள் குறியீடை அடைந்துவிடுவார்கள் ' என்று என் பெண்ணிடம் சொல்லுவேன். 'போம்மா அது அவர்களின் வாழ்க்கை ' என்று எளிதாக கடந்து விடுவாள்.
மனதையும் முகத்தையும் இறுக்கமாக வைத்துக் கொள்ளாதே என்று சொல்வேன். அவள் அதற்கும் ஏதாவது பதில் சொல்வாள்.
ஆதித்யாவின் ஆன்லைன் வகுப்பு காலை 9 மணிக்கு ஆரம்பமாகும். அவனை வகுப்பில் உட்கார வைக்க நாங்கள் கொடுக்கும் லஞ்சத்தை விட உட்காராமல் இருக்க அவன் கொடுக்கும் குடைச்சல்கள் அதிகம்.
அதற்கு பின் ஒர்க் ஃப்ரம் ஹோம் . 11 மணிக்குள் சமையல் வேலைகளை முடித்துவிட்டு கணிணியின் முன் உட்கார்ந்தால் விட்டலாசாரியா படம் போல காணாமலே போய்விடுவாள். சில நாட்களில் இரவு 9 மணிக்கு மேலும் தொடரும் அலுவலகப் பணி மற்ற எல்லா உணர்வுகளையும் பணிகளையும் பின் தள்ளி விட்டு சிறப்புடன் நடந்து கொண்டிருக்கும்.
பிஸிகலி பிரசென்ட் மெண்டலி ஆப்சென்ட் என்ற பதம் மிக நன்றாக பொருந்தும். அலுவலகமா அல்லது வீடா என்று நாம்தான் குழம்ப வேண்டும்.
சத்தமாக பேசக்கூடாது டிவி பார்க்கக்கூடாது யாருடனும் ஃபோனிலும் பேசக்கூடாது. சிறையில் அடைப்பட்டிருக்கும் உணர்வு பல நேரங்களில் வரும்.
கொஞ்சம் கொஞ்சமாக புதைமணலில் இழுத்துக்கொண்டு போவது போல தோன்றுவது, நம்மையும் சேர்த்து இழுப்பது மாதிரி தோன்றும். இயல்பான பேச்சு ஜோக் சிரிப்பு எதுவும் கிடையாது.
'மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார்' என்ற பாடல் இவர்களுக்காகவே எழுதியது மாதிரி இருக்கும்.
நான் தினமும் சொல்வதால் 'கருமமே கண்ணாயினார் அதுதானே' என்றாள்.
'தப்பு , கணிணியே கண்ணாயினார்'. என்றேன் நான்.
இயந்திரங்களை விட வேகமாக ஓடிக் கொண்டு இருக்கும் இந்த நிலை என்று மாறும்?
-காந்திமதி உலகநாதன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-article-about-work-from-home
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக