பொள்ளாச்சி பாலியல் வழக்கை அடுத்த 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஏற்கெனவே கடந்த 2019-ம் ஆண்டு 5 பேரும் கடந்த ஜனவரி மாதம் அ.தி.மு.க பிரமுகர் உள்பட 3 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனிடையே, கடந்த சில மாதங்களில் பாதிக்கப்பட்ட 3 பெண்கள் புதிதாக சாட்சி சொல்லியிருந்தனர். இதனால், மேற்கொண்டு கைது நடவடிக்கை இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது.
பொள்ளாச்சி பணிக்கம்பட்டி என்றழைக்கப்படும் கிட்டசூரம்பாளையம் பகுதியில் உள்ள முருகானந்தம் என்பவரின் மகன் அருண்குமார். இவர் இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட சதீஷ்குமாருடன் இணைந்து துணிக்கடை நடத்தி வந்தார். சதீஷ்குமார் சிறைக்கு சென்றதும், கடையை இவர்தான் முழுமையாக நடத்தி வந்துள்ளார்.
இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களின் ஒரு பெண் அருண்குமாரும் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்திருந்ததாக தகவல் வெளியானது.
அதனடிப்படையில் விசாரித்து வந்த சி.பி.ஐ, அருண்குமாரை நேற்று கைது செய்தனர். இதையடுத்து, அவரை கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தியமங்கலம் சிறையில் அடைத்தனர்.
சி.பி.ஐ தொடர்ந்து பொள்ளாச்சியில் முகாமிட்டிருப்பதால் மேலும் சில கைது நடவடிக்கைகள் இருக்கலாம் என கூறப்படுகிறது. பாலியல் வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதால், பொள்ளாச்சி சுற்றுவட்டாரங்களில் மீண்டும் பரபரப்பு தொற்றியுள்ளது.
source https://www.vikatan.com/news/tamilnadu/cbi-arrested-one-more-person-in-pollachu-sexual-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக