Ad

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

பட்டுக்கோட்டை:`படித்தது பிளஸ் டூ, 15 வருடங்களாக டாக்டர்; ரூ.1 கோடி பறிமுதல்’ -ஒரே நாளில் இருவர் கைது

பட்டுக்கோட்டை அருகே பிளஸ் டூ மட்டுமே படித்து விட்டு டாக்டர் என கூறி சிகிச்சை கொடுத்து வந்த ஒருவர், சித்த மருத்துவம் படித்து விட்டு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை கொடுத்து வந்த மற்றொருவர் என இரண்டு போலி டாக்டர் கைது செய்யப் பட்டனர். இதில் ஒரு டாக்டரின் கிளினிக்கில் அட்டைப் பெட்டியில் மாத்திரைகளுக்கு நடுவில் ரூபாய் 1 கோடியே 14 லட்சம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மருத்துவமனை

பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் பெரமையன் கோயில் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன்( 52). சித்த பிரிவு மருத்துவராக இருக்கிறார். இவர் மதுக்கூர் பஸ் ஸ்டாண்டில் சொர்ணமுல்லை மருத்துமனை என்ற பெயரில்,கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கிளினிக் நடத்தி வருகிறார். சித்த மருத்துவம் படித்துள்ள அறிவழகன் தனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை கொடுத்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்தது.

இதையடுத்து சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர். திலகம் தலைமையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் அன்பழகன் உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகள், போலீஸார் அறிவழககின் மருத்துவமனையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது மருத்துவரின் கல்விச் சான்றிதழ்களை வாங்கி ஆய்வு செய்தனர்.

இதில் அறிவழகன் முறையாக சித்த மருத்துவம் படித்துள்ளது தெரியவந்தது. ஆனால் அவர் ஆங்கில மருத்துவ முறையில் அனைவருக்கும் சிகிச்சை கொடுத்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் அவரது கிளினிக்கில் ஆங்கில மருந்துகளுக்கான மெடிக்கல் ஷாப், எக்ஸ்-ரே, இசிஜி உள்ளிட்ட கருவிகளும் ஒன்பது படுக்கை வசதிகளோடு இருந்ததும் தெரிந்தது.

இதையடுத்து மருத்துவமனை சோதனை செய்ததில் இரண்டு டிராவல் பேக், மாத்திரைகள் இருந்த ஒரு அட்டைப் பெட்டிக்குள் மாத்திரைக்களுக்கு நடுவில் பணக் கட்டுகள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தன. பின்னர் அதில் மொத்தம் ரூ 1 கோடியே 14 லட்சம் இருந்ததும் தெரிய வந்தது. பின்னர் பணம் இருந்தது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அறிவழகன் மருத்துவமனை

பின்னர் இரவு முழுவதும் அறிவழகனிடம் விசாரணை நடைபெற்றது. வருமான வரித்துறை அதிகாரிகளிடம் புதிய இடம் வாங்குவதற்காக வைத்திருந்த பணம் என அறிவழகன் தெரிவித்தார். கிளினிக்கில் இருந்த பணத்திற்கு முறையாக கணக்கு வைத்திருக்கிறாரா என வருமானவரித்துறை அதிகாரிகள் அறிவழகனிம் துருவி துருவி விசாரித்தனர். அப்போது அவர் முறையாக பதில் சொல்லவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து டாக்டர் அறிவழகனை போலீஸ் கைது செய்தனர்.

Also Read: `சிறை சென்றும் திருந்தவில்லை!’ - மக்களின் உயிரோடு விளையாடிய போலி பெண் மருத்துவர்

இதே போல் மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, மாதவன் (50) என்பவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். அவரது கிளினிக்கிலும் சுகாதார துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பன்னிரெண்டாம் வகுப்பு மட்டுமே படித்த மாதவன் அப்போது கடந்த 15 ஆண்டுகளாக அந்த மருத்துவமனையை நடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இத்தனை வருடங்களாக மக்களை ஏமாற்றி சிகிச்சை கொடுத்த வந்துள்ளாரே என அதிகாரிகள் அத்தனை பேரும் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் அவரும் கைது செய்யப்பட்டார். ஒரே நாளில் இரண்டு போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



source https://www.vikatan.com/news/crime/two-fake-doctors-arrested-in-pattukottai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக