ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்றிருந்தாலும், டோக்கியோவில் நிகழ்ந்த பல சுவாரஸ்ய சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்துகொண்டேயிருக்கின்றன. ஒலிம்பிக் கிராமத்தில் யாரோ ஒரு முகம் தெரியாத பெண் தன்னார்வலர் செய்த உதவியால் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் ஓட்டப்பந்தய வீரர் ஒருவர்.
ஜமைக்காவைச் சேர்ந்த ஹான்ஸ்லே பார்ச்மென்ட் ஆண்களுக்கான 100மீ தடை ஓட்டப்பந்தய இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்காக ஒலிம்பிக் கிராமத்துக்குள் தயாராக நின்றுள்ளார். போட்டியில் பங்கேற்கும் அவசரத்தில் வேறொரு இடத்துக்கு செல்லும் பேருந்தில் ஏறிவிட்டார் ஹான்ஸ்லே. சரியான பேருந்தில்தான் ஏறியிருக்கிறோம் என்ற நினைப்பில் சீட்டில் அமர்ந்து ரிலாக்ஸாக பாடலையும் கேட்கத் தொடங்கியிருக்கிறார். இதனால் மற்றவர்கள் பேசிக்கொள்வதையும் இவர் கேட்கவில்லை. கொஞ்ச நேரத்திற்கு பிறகுதான், தவறான இடத்துக்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்திருக்கிறார். இவர் இருந்த பேருந்து நீச்சல் போட்டி நடைபெறும் இடத்துக்கு அழைத்துச் செல்லக் கூடியது.
அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இன்னும் சற்று நேரத்தில் போட்டி தொடங்கிவிடும். நேரத்திற்கு செல்லவில்லை என்றால் போட்டியிலிருந்து நீக்கிவிடுவார்கள். நான்கு வருட உழைப்பு ஒன்றுமில்லாமல் போகும். திரும்பிச் செல்வதற்கு வேறு பேருந்தும் இல்லை. அவசரத்திற்கு நின்றிருந்த வாகனங்களையும் ஏற்கெனவே பலர் புக் செய்திருந்தார்கள். டாக்ஸி பிடிக்க வேண்டுமென்றால் அவரிடம் அப்போது பணம் எதுவும் கிடையாது.
அப்போதுதான் அங்கிருந்த தன்னார்வலர் ஒருவரை பார்த்ததும், தன்னை எப்படியாவது போட்டி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்ல முடியுமா என கெஞ்சியுள்ளார். தன் கையில் இருந்த பணத்தை எல்லாம் கொடுத்து அந்தப் பெண் தன்னார்வலர் ஹான்ஸ்லேயின் நிலைமையை உணர்ந்து டாக்ஸி பிடித்துக் கொடுத்திருக்கிறார்.
டாக்ஸியில் குறித்த நேரத்துக்கு போட்டி நடைபெறும் மைதானத்திற்குச் சென்ற ஹான்ஸ்லே பார்ச்மென்ட், அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினார். 100மீ தடை ஓட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த கிராண்ட் ஹோலோவேதான் தங்கப்பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதனை பொய்யாக்கும் வகையில், இத்தனை களேபரங்களுக்கு நடுவிலும் போட்டியில் வென்று தங்கப்பதக்கம் வென்றார் .
பதக்கம் வென்றதும் பார்ச்மென்ட் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா? சரியான நேரத்திற்கு போட்டியில் கலந்துகொள்ள உதவிசெய்த அந்த தன்னார்வலரை தேடிச் சென்றுள்ளார். நீண்ட தேடலுக்குப் பின் அந்தப் பெண்ணை கண்டுபிடித்து, தன்னுடைய பதக்கத்தை காண்பித்து, “நீங்கள் செய்த உதவியால்தான் வெற்றி பெற்றுள்ளேன்” என மனமார பாராட்டியுள்ளார். இதை ஒட்டுமொத்த உலகமும் தெரிந்துகொள்ள வேண்டுமென்று, வீடியோ எடுத்து சமூக ஊடகத்திலும் பதிவு செய்திருந்தார். அதுமட்டுமல்ல, தன்னுடைய ஜெர்சியை அவருக்கு கொடுத்ததோடு டாக்ஸிக்கு அவர் கொடுத்த பணத்தையும் திரும்ப கொடுத்துள்ளார்.
இந்த தன்னார்வலரின் நல்ல உள்ளத்தை அறிந்த ஜமைக்கா நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிடவே, இப்போது பலரும் அவரை பாராட்டி பரிசளித்து வருகிறார்கள். “உலகத்தின் எந்த மூலையில் அவர் இருந்தாலும் கவலையில்லை. எங்கள் நாட்டு வீரருக்கு உதவி செய்த அவரின் நல்ல உள்ளத்திற்கு நாங்களும் ஏதாவது உதவி செய்ய கடமைபட்டுள்ளோம். விடுமுறையை கொண்டாட எப்போது வேண்டுமானாலும் ஜமைக்கா நாட்டிற்கு அந்தப் பெண் வரலாம்” என அந்நாட்டின் சுற்றுலா துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
அந்த தன்னார்வலரின் பெயர் டியானா. அவர் செய்தது என்னவோ சிறு உதவிதான். ஆனால் அது ஹான்ஸ்லேவுக்கு வாழ்நாள் கனவை நனவாக்கியுள்ளது. இரு நாட்டுக்கும் இடையேயான உறவை பலப்படுத்தியுள்ளது. இவர் போல முகம் தெரியாத நபர்கள் செய்யும் உதவியால்தான் இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
source https://sports.vikatan.com/olympics/jamaican-hurdler-hansle-parchment-won-gold-because-of-an-volunteer
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக