Ad

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

கட்டாய ஹெல்மெட் டு டிக்டாக் தடை.. நீதிபதி கிருபாகரன் `மக்கள் நீதிபதி' என்று கொண்டாடப்படுவது ஏன்?!

`தலைக்கவசம் கட்டாயம் முதல் டிக் டாக், ஆன்லைன் ரம்மி தடை வரை' தமிழகத்தில் பல்வேறு வழக்குகளில் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதி கிருபாகரன், ஆகஸ்ட் 20 -ல் பணி ஓய்வு பெற்றார். நீதிபதி என்.கிருபாகரன், திருவண்ணாமலை மாவட்டம் செய்யூர் தாலுகா நெடும்பிறை கிராமத்தில் நடேச கவுண்டர், ராஜம்மாள் தம்பதியருக்கு 21.8.1959-ல் மகனாய் பிறந்தார். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். 1985-ம் ஆண்டு வழ‌க்க‌றிஞ‌ராக பதிவுசெய்தார். மூத்த வழக்கறிஞர் அபிபுல்லா பாஷாவிடம் ஜூனியராக பணியாற்றி வந்தார்.

நீதிபதி கிருபாகரன்

நீதிபதி கிருபாகரன், கடந்த 1991-ம் ஆண்டு சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் அரசு வழ‌க்க‌றிஞ‌ராகவும், 2002-2005-ம் ஆண்டுவரை மத்திய அரசு வழ‌க்க‌றிஞராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் இவர், அரசு போக்குவரத்துக்கழக வழ‌க்க‌றிஞராகவும் பணியாற்றியுள்ளார். நீதிபதி கிருபாகரனுக்கு எம்.கே.எழில் பாவை என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். கடந்த 2009-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர், 2011-ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 12 ஆண்டு நீதிபதியாகச் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைகளில் பல்வேறு அமர்வுகளுக்குத் தலைமை வகித்துள்ளார்.

கட்டாய ஹெல்மெட் உத்தரவு:

கடந்த 2015-ம் ஆண்டு, தமிழகத்தையே உலுக்கியது இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என்பது தான். இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியவர் நீதிபதி கிருபாகரன் தான். இந்த தீர்ப்புக்கு வழக்கறிஞர்களின் தரப்பிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. என்ன ஆனாலும் தான் ஓய்வு பெறும்வரை தனது தீர்ப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது என்று தெரிவித்திருந்தார். ஹெல்மெட் நிறுவனங்களிடம் பணம் வாங்கிவிட்டுத் தான் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கினார் என்று இவர்மேல் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாய ஹெல்மெட் உத்தரவு

``சாலை விபத்தில் இறந்த ஒருவருக்காக இழப்பீடு கேட்டு நீதிமன்றம் வந்த வழக்கில், எதிர்த் தரப்பில் இறந்தவர் தலைக்கவசம் அணியவில்லை என்று வாதிடப்பட்டது. இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் தினசரி நடைபெறுவது வழக்கமாக இருந்தது. தங்களின் குடும்ப உறுப்பினர்களை இழந்து எத்தனை குடும்பங்கள் கஷ்டப்படுகிறார்கள். தலைக்கவசம் அணியாது பலரின் உயிர் போகிறது. இதனால் தான் தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கித் தீர்ப்பு பிறப்பித்தேன்" என்று நீதிபதி ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.

ஆக்கிரமிப்புகளே வெள்ளத்திற்குக் காரணம்:

2016-ம் ஆண்டு அகரம் அறக்கட்டளை “யாதும் ஊரே” என்ற திட்டத்தைத் தொடங்கியிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி, ``எங்கிருந்தோ வந்த பென்னி குவிக் தனது சொந்த பணத்தில் முல்லைப் பெரியாறு அணையைக் காட்டினார். அவரை இன்றும் அந்த மக்கள் தெய்வமாகப் போற்றிவருகிறார்கள். ஆனால், நாம் என்ன செய்கிறோம், நீர் செல்லும் இடங்களில் எல்லாம் கல்வி நிலையங்களாக உள்ளது. ஏரிகள் நிறைந்த செங்கல்பட்டு மாவட்டம். இப்போது, கல்லூரிகள் நிறைந்த மாவட்டமாக இருக்கிறது. நீர் வரும் பாதையில், ஆறுகள், ஏரிகள் இருந்த பகுதிகளில்தான் பெரும்பாலான கல்லூரி கட்டடங்கள் கட்டப்படுகிறது" என்றார்.

வெள்ளம் சூழ்ந்த பகுதியில் தீயணைப்புத் துறையினர்

மேலும், ``சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் நமக்குக் கூறியது, வெள்ளம் தானாக நமது வீட்டிற்குள் வரவில்லை. வெள்ளத்தின் வீட்டில் நாம் போய் இருக்கிறோம். அதன் காரணமாக வந்த விளைவுதான். சில சுயநலமிக்க ரியல் எஸ்டேட் உரிமையாளர்களின் பேராசையினால் தான் அப்படி ஒரு அவலநிலை ஏற்பட்டது. நீர் வரும் பாதை, நீர் தங்கும் பாதை, புறம்போக்கு இடம் இவற்றைப் பட்டா போட்டுக் கட்டிவிடுகிறார்கள். எதுவும் தெரியாத அப்பாவிகள் அந்த வீடுகளை வாங்கி தவிக்கிறார்கள். அரசை மட்டும் குறை சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது. எங்கே தவறுகள் நடக்கிறதோ அங்கே மக்கள் சக்தியின் மூலம் அதைத் தட்டிக் கேட்டு தவறுகளைத் திருத்த வேண்டும்" என்று பேசியிருந்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றில், ``ஆசியாவிலேயே இந்தியா தான் அதிகம் லட்சம் வாங்கும் நாடக இருக்கிறது. அதிலும் அதிக ஊழல் அரசு அலுவலகங்களில் தான் நடக்கிறது. லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கூடாது. லட்ச குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீது ஏன் குண்டர் சட்டம் பயன்படுத்துவதில்லை. ஊழலில் ஈடுபடும் அரசு ஊழியர்களைத் தண்டிக்கும் வகையில் ஏன் தனித்தடுப்புச் சட்டம் கொண்டுவரக்கூடாது'' என்று பல்வேறு கேள்விகளை நீதிபதி கிருபாகரன் அரசுக்கு எழுப்பியிருந்தார்.

``பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்குக் கூடுதலாக ஆண்மையை நீக்கம் செய்யும் தண்டனையை வழங்குவது தொடர்பாகச் சட்டம் கொண்டுவர மத்திய அரசு பரிசீலனை செய்யவேண்டும்!” - நீதிபதி கிருபாகரன்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் முருகன், அவர் மனைவி நளினி தங்களின் உறவினரோடு தொலைப்பேசியில் பேச அனுமதி வழங்கியதும். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் ஜெ.தீபா, ஜெ.தீபக் என்று தீர்ப்பளித்தவரும் இவரே. ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு, டிக் டாக் செயலிக்குத் தடை, பிராங் ஷோக்களுக்கு தடை, ஆபாசத்தைப் பரப்பும் வகையான விளம்பரங்கள் ஒளிபரப்ப தடை, தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20 % இட ஒதுக்கீட்டை வழங்க உத்தரவு, மூன்று வருடங்களுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்க அறிவுறுத்தல் என்று பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தவர் என்ற பெருமையும் நீதிபதி கிருபாகரனையே சென்றடையும்.

``குட்கா, பான்மசாலா போன்றவற்றிற்கு நிரந்தரமாகத் தடை விதிக்காமல், ஒவ்வொரு ஆண்டும் தடையை நீட்டித்து அரசாணை வெளியிடுவது ஏன்? சாதாரண மனிதனுக்கு எளிதாக மணல் கிடைக்கவில்லை என்றால், அரசு ஏன் மணல் குவாரிகளை நடத்தவேண்டும்? குவாரிகளை மூடிவிடலாமே? பிரியாணி, சரக்கு, சில ஆயிரம் பணத்திற்காகத் தனகது வாக்குகளை விற்பனை செய்துவிட்டு, மக்கள் எப்படி நல்ல அரசியல் தலைவர்களை எதிர்பார்க்க முடியும்?” என்று தனது உத்தரவுகளில் பல்வேறு கேள்விகளை முன்வைத்தவர் நீதிபதி கிருபாகரன்.

பணி ஓய்வு பாராட்டு விழா

தான் நீதிபதியாக பணியாற்றிய கடைசி நாளான ஆகஸ்ட் 19-ம் தேதி அன்று, மைசூரில் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் ஆவணங்கள் மற்றும் கல்வெட்டுகளைச் சென்னைக்குக் கொண்டுவரவும், சென்னையில் உள்ள மத்திய கல்வெட்டியல் பிரிவுக்குத் தமிழ் கல்வெட்டியல் பிரிவு என்று பெயர் மாற்றம் செய்யவும் உத்தரவு பிறப்பித்திருந்தார். அன்று மட்டும் ஏழு அமர்வுகளில் அவர் விசாரித்து வந்த வழக்குகளில் தீர்ப்பினை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: வெளுத்துவாங்கும் உத்தரவுகள்... யார் இந்த ஐகோர்ட் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்?

தனது கடைசி வேலைநாள் ஆகஸ்ட் 20-ம் தேதி அன்று மொகரம் பண்டிகை அரசு விடுமுறை என்பதால் அதற்கு முதல் நாளே அவருக்குப் பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய அவர், ``எனது தந்தை நான்காவது வரை தான் படித்துள்ளார். எங்கள் ஊரில் பள்ளிவர அவர் கடுமையாகப் பாடுபட்டிருக்கிறார். நீ ஒருநாள் மிகப்பெரிய ஆளாக வருவாய் என்று என்னிடம் கூறியிருந்தார். அவர் ஆற்றிய கல்விச் சேவையின் காரணமாக நான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். மக்களின் கடைசி புகலிடம் நீதிமன்றம்தான். வழக்கறிஞர்கள் சரியாகச் செயல்பட்டால்தான், நீதித்துறை சிறப்பாகச் செயல்படும். இல்லையென்றால், நீதியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்" என்றார்.

``நீதிபதியாகப் பணி ஓய்வு பெறுவது திருப்தியாக இருந்தாலும், வழக்கறிஞர் தொழிலை முறைப்படுத்த முடியாதது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட முடியாமல் போனது எனக்கு மனநிறைவை அளிக்கவில்லை” - நீதிபதி கிருபாகரன்

குடும்பநல வழக்குகளை விசாரித்ததன் மூலம், விவாகரத்து கோரியிருந்த ஆயிரம் தம்பதிகளைச் சேர்ந்துவைத்துள்ளேன். இது எனக்கு முழு மனத்திருப்தி அளிக்கிறது. 125 வயதுடைய உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியாக பணியாற்றியது பெருமையாக உள்ளது. மனசாட்சியுடன் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புகளை வழங்கியுள்ளேன். மதுக்கடைகளை மூடி தேசத் தந்தையின் கனவை நனவாக்க வேண்டும். நீதிபதியாக இருந்தாலும் ஒரு சாதாரண மனிதனாகவே வழக்குகளை விசாரித்தேன். சமுதாயம், மக்கள் நலனுக்காகவே உத்தரவுகளைப் பிறப்பித்தேன். இந்த எண்ணம் என் மனதில் ஊறிப்போனது. குடும்பத்துடன் நான் அதிக நேரம் செலவிட்டதே இல்லை. தூக்கத்திலும் வழக்கை விசாரித்து, உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருப்பேன் என மனைவி சொல்லுவார்" என்று பேசினார்.

பணி ஓய்வு பாராட்டு விழா

மக்கள் நீதிபதி என்று அழைக்கப்படும் நீதிபதி கிருபாகரன் தமிழகத்தில் பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளார். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்துள்ளார். தமிழகத்திற்கு இவர் ஆற்றிய பணிகளும், உத்தரவுகளின் மூலம் தமிழர்களின் மனதில் என்றும் நீடித்து நிலைத்திருப்பார்.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/who-is-this-high-court-justice-n-kirubakaran-why-is-he-celebrated-as-the-judge-of-the-people

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக