Ad

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

`தமிழ்நாட்டுக்கு ரூ.5600 கோடியை மத்திய அரசு ஏன் வழங்கக்கூடாது?' -நீதிபதிகள் உத்தரவின் பின்னணி என்ன?

தென்காசியை பொதுத் தொகுதியாக மாற்ற தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தமிழகத்தில் 2 எம்.பி.க்கள் குறைக்கப்பட்டதற்கு இழப்பீடாக மத்திய அரசு ரூ.5,600 கோடியை ஏன் வழங்கக்கூடாது?' என்று கேள்வி எழுப்பி பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

பல முக்கிய வழக்குகளில் கவனிக்கத்தக்க தீர்ப்புகளையும், அதிரடியான உத்தரவுகளையும் பிறப்பித்தவர் உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்.

இவர் கடந்த 19-ம் தேதி ஓய்வுபெற்ற நிலையில், நீதிபதி புகழேந்தியுடன் இணைந்து வழங்கிய இந்த வழக்கின் உத்தரவு விவரம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதிகளின் உத்தரவில், "இந்த வழக்கு தென்காசியை பொதுத் தொகுதியாக மாற்றக்கோரி தொடரப்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் எண்ணிக்கை மற்ற சமூக மக்களைவிட அதிகமாக இருப்பதால்தான் அத்தொகுதி தனித்தொகுதியாக வரையறை செய்யப்பட்டுள்ளது. எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்கமுடியாது" என்றவர்கள், அடுத்து கூறியதுதான் அனைவரிடமும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

"இந்த வழக்கில் முக்கியமான விஷயம் ஒன்றை நீதிமன்றம் ஆராய விரும்புகிறது. 1999-ல் வாஜ்பாய் அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு வாக்கில் கவிழ்ந்தது. ஒரு எம்.பி-யின் வாக்கு என்பது ஒரு ஆட்சியையே கவிழ்க்கும் அல்லது உருவாக்கும். தமிழகத்தில் 1962-ல் நாடாளுமன்றத்துக்கு 41 எம்.பி.க்கள் இருந்துள்ளனர். மக்கள் தொகையை கட்டுப்படுத்தவேண்டும் என்ற மத்திய அரசி்ன் கொள்கை முடிவை ஏற்று குடும்ப கட்டுப்பாட்டை தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்கள் தீவிரமாக அமல்படுத்தியதன் விளைவாக மக்கள் தொகை குறைந்தது, அதன் அடிப்படையில் தமிழகத்தில் 41-ஆக இருந்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 39 ஆகவும், ஆந்திராவில் 42 ஆக இருந்த எம்பிக்களின் எண்ணிக்கை 40 ஆகவும் குறைந்தது.

நாடாளுமன்றம்

மக்கள் தொகையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய இந்த மாநிலங்களின் அரசியல் அதிகாரம், தலா 2 எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதன் மூலமாகப் பறிக்கப்பட்டுள்ளது. மொழிவாரி மாநிலங்களை உள்ளடக்கிய இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் அரசியல் அதிகாரம் மற்றும் உரிமைகள் சமமாக இருக்கவேண்டும்.

மக்கள் தொகையை கட்டுப்படுத்தத் தவறிய உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகம். அதேநேரம், மக்கள் தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதால் தமிழகத்தில் 1967 முதல் நடந்த 14 நாடாளுமன்றத் தேர்தல்களில் தலா 2 எம்பி-க்கள் வீதம் மொத்தம் 28 எம்பி-க்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விட்டனர்.

நீதிபதி கிருபாகரன்

இதன்மூலமாக மாநில உரிமை, அதன்மூலம் கிடைக்கக்கூடிய வளர்ச்சிக்கான திட்டங்களை தமிழகம் இழந்துள்ளது. ஆனால், தமிழகத்துக்கான 2 எம்.பி.க்களை குறைத்தது ஏன? என்று எந்த அரசியல் கட்சியும் கேள்வி எழுப்பவில்லை. 2050-ல் மக்கள் தொகை பெருக்கத்தில் இந்தியா சீனாவை முந்திவிடும் என ஆய்வுகள் கூறுகிறது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே வருங்கால சந்ததிகள் ஆரோக்கியமாக வாழ முடியும். ஆனால் அதேநேரம் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதன் மூலமாக தொகுதி மறுவரையறை என்பதைக் காரணம் காட்டி எம்.பி-க்களின் எண்ணிக்கையைக் குறைப்பது மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் செயல். அதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

ஒரு எம்.பி மூலமாக அந்த மாநிலத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ. 200 கோடி மதிப்பில் நலத்திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கணக்கிட்டால், கடந்த 14 தேர்தல்களில் 2 எம்.பிக்களை இழந்துள்ள தமிழகத்துக்கு இழப்பீடாக மத்திய அரசு ரூ.5600 கோடியை ஏன் வழங்கக்கூடாது..? அதேபோல எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து தமிழக எம்.பி-க்களின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடாது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தால், அதற்கு பதிலாக மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஏன் உயர்த்தக்கூடாது?

Also Read: `வன்புணர்வு நடந்தது 11 நிமிடங்களே; எனவே தண்டனையைக் குறைக்கிறேன்!' - நீதிபதியின் அதிர்ச்சி தீர்ப்பு

நாடாளுமன்றம்!

இந்த கேள்விகளுக்கு மத்திய அரசு 4 வாரங்களில் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளையும் தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம். அவர்களும் இதுதொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்." என உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தனர்.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/high-court-notice-to-union-government-on-reducing-count-of-mp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக