Ad

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

`தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கே இனி மது' - மதுக்கடைகளுக்கு கேரள அரசு புதிய உத்தரவு!

கேரளத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை இருபதாயிரத்துக்கு அதிகம் ரிப்போர்ட் ஆகிறது. நேற்று மட்டும் 21,445 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரோனாவைக் கடுப்படுத்த கேரள அரசு புதிய கட்டுப்பாடுகளை கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்பவர்கள் செல்பவர்கள் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் அல்லது முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டது. இவை இரண்டும் இல்லாமல் இருந்தால் மூன்றாவது ஆப்ஷனாக கொரோனா பாதிப்பு வந்து அதன் பின்பு நலம் அடைந்து ஒரு மாதம் ஆனதாக ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் மதுக்கடைகளில் மது வாங்க போகும் நபர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் குறித்து அரசு எதுவும் தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் மதுக்கடைகள் நடத்தப்படுவது போன்று கேரளத்தில் பிவரேஜஸ் என்ற நிறுவனம் மூலம் அரசு மது விற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரிசோதனை

இந்த நிலையில் கேரள ஐகோர்ட் நீதிபதி தேவன் ராமச்சந்திரன் ஒரு வழக்கை விசாரித்ததற்கு இடையே அரசின் புதிய கட்டுப்பாடுகளை விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். நீதிபதி தேவன் ராமச்சந்திரன் கூறுகையில், "திருமண வீடுகள், மரண வீடுகளில் கொரோனா விதிகளை அமல்படுத்தும் அரசு மது விற்கும் கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்காதது ஏன். கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும் நபர்கள் ஒரு டோஸ் வாக்ஸின் போட்டிருக்க வேண்டும் என கூறும் அரசு ஷாப்களுக்கு மது வாங்கச் செல்லும் நபர்களும் வாக்ஸின் எடுத்திருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அப்படி கட்டுப்பாடு விதித்தால் மது வாங்குவற்காக நிறையபேர் வாக்ஸின் போட்டுக்கொள்ளும் நிலை ஏற்படும்.

மது வாங்குவதற்கு மக்கள் கூட்டமாக கூடுகின்றனர். மதுவின் வருமானம் அரசுக்கு வருகிறது, ஆனாலும் அரசு அதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பாகம் கேரளத்தில் உள்ளது. மக்களின் ஆரோக்கியமே கோர்ட்டுக்கு முக்கியம்" என விமர்சித்திருந்தார். இதையடுத்து கேரள அரசு மதுக்கடைகளுக்கு மது வாங்கச்செல்லும் குடிமகன்களுக்கும் கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது.

Also Read: கொரோனா: ஊரடங்குக்கு மாற்று.. பரவலைக் கட்டுப்படுத்த மூன்றுகட்ட திட்டங்களை அறிவித்த கேரளா!

மதுக்கடைகளில் கூட்டம்

அதன்படி ஒரு டோஸ் வாக்ஸின் எடுத்துக்கொண்ட சான்றிதழ் அல்லது ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்ட் நெகட்டிவ் சான்றிதழுடன் செல்லும் குடிமகன்களுக்கு மட்டுமே மதுக்கடைகளில் மது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது குடிமகன்களும் சான்றிதழுடன் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மது வாங்கி வருகின்றனர். வாக்ஸின் அல்லது நெகட்டிவ் சான்று இல்லாதவர்கள் அந்த சான்று வைத்திருக்கும் நபர்களிடன் கெஞ்சிக் கூத்தாடி அல்லது கமிஷன் கொடுத்து மது வாங்கும் நிலை உள்ளது.



source https://www.vikatan.com/social-affairs/politics/kerala-government-implement-new-restrictions-to-liquor-shops-in-kerala

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக