Ad

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

ஜோ ரூட்டின் க்ளாஸ்|இந்தியாவை மீட்க உருமாறிய ராகுல் டிராவிட்டும், லட்சுமணும் தேவை... கிடைப்பார்களா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் முடிந்திருக்கிறது. முதல் நாளை போன்றே இரண்டாம் நாளும் ஆட்டம் முழுக்க முழுக்க இங்கிலாந்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. கேப்டன் ஜோ ரூட் ஒரு வெறித்தனமான சதம் அடித்திருக்கிறார். இங்கிலாந்து அணி 423-8 என்ற நிலையோடு இரண்டாம் நாளை முடித்திருக்கிறது. லீட் மட்டும் 345 ரன்கள். ஏறக்குறைய இந்த போட்டியை இங்கிலாந்து வென்றேவிட்டார்கள் என சொல்லலாம். இரண்டாம் நாளில் நடைபெற்ற சில முக்கிய மொமன்ட்ஸ் இங்கே!

ஓப்பனிங் கூட்டணியின் வீழ்ச்சி!

ரோரி பர்ன்ஸ் - ஹசீப் ஹமீத் இந்த இருவரும் முதல் முறையாக கூட்டணி சேர்ந்து ஓப்பனர்களாக களமிறங்கியிருந்தனர். இங்கிலாந்தின் டாப் ஆர்டர் பயங்கர சொதப்பலாச்சே எப்படியும் அவர்களே விக்கெட்டை தூக்கி கொடுத்துவிட்டு செல்வார்கள் என்கிற எண்ணமே அனைவருக்கும் இருந்தது. ஆனால், பர்ன்ஸ் - ஹசீப் கூட்டணி அத்தனை பேருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தது. முதல் நாளை 120 ரன்களுக்கு விக்கெட்டே விடாமல் முடித்திருந்தது. இருவரும் அரைசதத்தை கடந்திருந்தனர். டெக்னிக்கலாகவும் இருவரும் சிறப்பான அணுகுமுறையை கொண்டிருந்தனர்.

இரண்டாம் நாளும் இந்த கூட்டணியை சீக்கிரம் வீழ்த்துவதுதான் இந்தியாவின் முதல் டாஸ்க்காக இருந்தது. அதை ஓரளவுக்கு வெற்றிகரமாகவே இந்தியா செய்து முடித்திருந்தது. இந்த கூட்டணி மேற்கொண்டு 15 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஷமியின் பந்துவீச்சில் ரோரி பர்ன்ஸ் ஆஃப் ஸ்டம்பை பறிகொடுத்து வெளியேறினார். ஷார்ட் ஸ்கொயர் லெக், அவ்வப்போது லெக் கல்லி என வைத்து ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து தொடர்ச்சியாக ஆங்கிள் இன் டெலிவரிக்களையே பர்ன்ஸுக்கு வீசிக்கொண்டிருந்தனர். இது ஒரு கட்டத்தில் பலனளித்தது. ஷமியின் டாப் ஆஃப் தி ஆஃப் ஸ்டம்ப் லைனில் பர்ன்ஸ் வீழ்ந்தார். பர்ன்ஸ் ஆட்டமிழந்த பிறகு ஹமீத் கொஞ்ச நேரம் ஆட்டம் காட்டினார். பேக்ஃபுட்டில் வலுவான ஷாட்களை தொடர்ந்து ஆடினார். வில்லியம்சனை போன்று பேக் ஃபுட் ஷாட்களில் இவருக்கு சரியான ஃபினிஷ் கிடைக்கத் தவறினாலும் பவுண்டரிக்கள் கிடைத்தது.

ENG VS IND
இந்த சீரிஸில் இதுவரை விக்கெட்டே எடுக்காமல் இருந்த ஜடேஜா ஹமீத்தின் விக்கெட்டை எடுத்தார். பெரிதாக திரும்பாத ஒரு ஸ்ட்ரெயிட் டெலிவரியில் பீட்டன் ஆகி ஸ்டம்பை பறிகொடுத்தார் ஹமீத்.

இருவரும் மேற்கொண்டு சேதாரம் ஏற்படுத்தாமல் சீக்கிரம் வெளியேற்றப்பட்டது இந்தியாவுக்கு நல்ல விஷயமாக அமைந்தது. ஆனால், இதன்பிறகுதான் கண்டமே தொடங்கியது.

டேவிட் மலான்!

இங்கிலாந்தின் டாப் ஆர்டர் சொதப்புவதால் அந்த பிரச்னையை தீர்ப்பதற்காக ஸ்பெஷல் அப்பாய்ன்ட்மென்ட் வாங்கிக் கொண்டு இங்கிலாந்து அணியில் இடையில் வந்து சேர்ந்தவர் டேவிட் மலான். அவரை எந்த விஷயத்தை செய்து கொடுப்பதற்காக நம்பிக்கை வைத்து அணிக்குள் கொண்டு வந்தார்களோ அந்த விஷயத்தை மிகச்சிறப்பாக செய்து கொடுத்தார். கவுன்ட்டி போட்டியில் லீட்ஸில் மலான் கடைசியாக ஆடியிருந்த போட்டியில் சதமடித்திருக்கிறார். அந்த சதத்திலிருந்து அப்படியே இன்னிங்ஸை தொடர்ந்து இந்த போட்டியிலும் ஒரு காட்டு காட்டிவிட்டார். பும்ராவின் ஓவரில் பவுண்டரியுடனே ரன்கணக்கை தொடங்கினார் மலான். அடுத்து சிராஜ் ஓவரில் இரண்டு பவுண்டரி என தொடர்ந்து பவுண்டரிக்களிலேயே ரன் கணக்கை உயர்த்தி கொண்டிருந்தார்.

ENG VS IND டேவிட் மலான்
ஃபுல் லென்த்தில் விழுந்தால் அடி, ஷார்ட் பிட்ச்சாக விழுந்தால் அடி. இதுதான் மலானின் கொள்கையாக இருந்தது. எல்லாமே க்ளீன் ஹிட்கள். ஆஃப் சைடில் அடித்த டிரைவ்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கே உரிய க்ளாஸ். இந்திய வீரர்களின் நல்ல பந்துகளை மதித்தும் ஆடினார்.

மேலும், ரூட் ஒரு எண்ட்டில் வேகமாக ரன்கள் சேர்க்கத் தொடங்கியபோது கொஞ்சம் அடக்கி வாசித்து அவருக்கு முழு இடம் கொடுத்து பார்ட்னர்ஷிப்பின் அடிப்படை விதிகளையும் பின்பற்றினார். அரைசதத்தை கடந்த மலான் 70 ரன்களில் சிராஜின் பந்தில் எட்ஜ் ஆகி பன்ட்டிடம் கேட்ச் ஆனார். அவருடைய வேலையை மிகச்சிறப்பாக செய்துவிட்டு திருப்திகரமாக அவுட் ஆனார்.

ஜோ ரூட் 'மாஸ்'டர் க்ளாஸ்!

இரண்டாவது நாளின் ஹீரோ ஜோ ரூட் தான். ஜோ ரூட்டின் ஆட்டத்தில் இதுவரை இல்லாத ஒரு வெறித்தனம் நேற்று வெளிப்பட்டிருந்தது. லார்ட்ஸில் பட்ட அடிக்கு இந்தியாவை பழிதீர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் நெருப்பாக பற்றி எரிந்து கொண்டிருப்பது ஒவ்வொரு ஷாட்டிலும் தெரிந்தது. இங்கிலாந்து லீடிங்கில் இருக்கிறது இன்னும் 4 நாட்கள் இருக்கிறது,

கொஞ்சம் பொறுமையாக ஆடலாமே என்கிற எண்ணமெல்லாம் ரூட்டுக்கு இல்லை. ஆட்டத்தில் ஒரு சிறிய இடத்தை கூட இந்தியாவுக்கு கொடுக்க அவர் விரும்பவில்லை. அடிக்க வேண்டும் இந்தியாவை எழும்பவே விடாமல் அடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
ENG VS IND ஜோ ரூட்

அதனாலயே டெஸ்ட் போட்டியில் வந்து 100 ஸ்ட்ரைக் ரேட்டில் ஓடிஐ இன்னிங்ஸ் ஆடிக்கொண்டிருந்தார். அவருடைய அணுகுமுறையில் இவ்வளவு ஆக்ரோஷமும் அட்டாக்கிங் தன்மையும் இருந்த போதும் அவருடைய ஷாட்கள் அனைத்தும் வழக்கம்போல க்ளாஸின் உச்சத்தை தொட்டது. இரண்டு/மூன்று ஸ்லிப் + கல்லி என ஃபீல்ட் இருக்கும்போதும் பந்தை வரவிட்டு கடைசி நொடியில் லேட் கட்களாக கேப்பை சரியாக பிக் செய்து அடித்தார். பேக் ஃபுட் புஷ்கள், லேட் கட், டிரைவ், ஸ்வீப் என அத்தனை ஷாட்களையும் அட்டாக்கிங் மனநிலையோடு அழகியலும் குறையாமல் ஆடினார்.

57 பந்துகளில் அரைசதத்தை கடந்த ரூட் 124 பந்துகளில் சதத்தை கடந்தார். சதத்தை கடந்திருந்த போது 95% சதவிகிதத்துக்கும் மேல் கன்ட்ரோலாக ஆடியிருந்தார். வெறும் இரண்டே இரண்டு பந்துகளில்தான் டைமிங் இல்லாமல் தடுமாறியிருந்தார்

இவ்வளவு ஸ்ருதி சுத்தமாக ரூட் ஆடிக்கொண்டிருந்த ஆட்டத்துக்கு பும்ரா முடிவு கட்டினார். ரூட் எதிர்பார்த்ததை விட பந்து கூடுதலாக உள்ளே திரும்ப பேட்டுக்கும் பேடுக்குமான கேப்பில் புகுந்து போல்டை பறித்தது. 121 ரன்களில் ரூட் வெளியேறினார். இந்தியா திருப்திபட்டுக் கொள்வதற்கு ஒன்றுமில்லை. ஏறக்குறைய இங்கிலாந்துக்கு இந்த போட்டியை வென்று கொடுத்துவிட்டே ரூட் அவுட் ஆகியிருந்தார்.

ஆறுதல் அளித்த ஷமி

இரண்டாம் நாளில் முழுக்க முழுக்க இங்கிலாந்தே ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும் இந்தியா சார்பில் ஷமி ஓரளவுக்கு சிறப்பாக பெர்ஃபார்ம் செய்திருந்தார்.

ENG VS IND
மூன்று முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்தார். ரோரி பர்ன்ஸை சீக்கிரம் வீழ்த்தியது அவர் மேலும் சேதாரத்தை ஏற்படுத்தாமல் தடுத்தது. இதன்பிறகு பேர்ஸ்ட்டோ மற்றும் பட்லர் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார்.

ஜோ ரூட்டே ஓடிஐ இன்னிங்ஸ் ஆடினார் எனில் பேர்ஸ்ட்டோவும் பட்லரும் டி20 போல வெடித்து சிதற தயாராக இருந்தனர். பேர்ஸ்ட்டோ ஜடேஜா பந்தில் சிக்சர் அடித்து அதிரடி தடாலடிக்கு ஒரு சின்ன டீசர் காண்பித்திருந்தார். ஆனால், அதற்குள் ஷமி இவர்கள் இருவரையும் வீழ்த்திவிட்டார்.

இந்தியாவின் சொதப்பல்!

தற்போதைய உலக கிரிக்கெட்டில் ரொம்பவே வீக்கான டாப் ஆர்டரை கொண்டிருக்கும் அணி இங்கிலாந்துதான். தொடர்ச்சியாக சிங்கிள் டிஜிட்டில் அவுட் ஆகி மொத்த பாரத்தையும் ரூட் மீது ஏற்றிவிடுவார்கள். முதல் இரண்டு போட்டிகளிலுமே கூட அப்படித்தான் நடைபெற்றிருந்தது. ஆனால், இந்த போட்டியின் கதையே வேறு.

ரோரி பர்ன்ஸ், ஹமீது, மலான் என இங்கிலாந்தின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் மூவரும் அரைசதத்தை கடந்திருந்தனர். நம்பர் 4-ல் இறங்கிய கேப்டன் ரூட் சதத்தை கடந்திருக்கிறார்.

சமீபாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இப்படியொரு மிரட்டலான பர்ஃபாமென்ஸை கொடுத்ததே இல்லை. இரண்டு மூன்று திட்டங்கள் இல்லாமல் ஒரே திட்டத்தோடு அல்லது கடந்த போட்டியின் கார்பன் காப்பியாக வீசுவதையே இந்தியா வழக்கமாக வைத்திருக்கிறது. இஷாந்த் ஷர்மா மாதிரியான அனுபவமிக்க பௌலர்கள் கூட பௌலிங் மெஷின் மாதிரி எந்தவித சர்ப்ரைஸுமே இல்லாமல் தொடர்ந்து வீசிக்கொண்டிருக்கிறார். நியூபால் எடுக்கப்பட்டவுடன் பேட்டிங் செய்யும் அணி எப்போதுமே கொஞ்சம் அடக்கி வாசிக்கும். ஆனால், நேற்று இந்திய அணி இரண்டாவது நியூபாலை கையில் எடுத்து வீசிய முதல் 10 ஓவர்களில் மட்டும் 56 ரன்களை வழங்கியிருந்தது.

பழைய பந்தில் ஜடேஜா வீசினாலும் அடித்து துவம்சம் செய்திருந்தார்கள். அஷ்வின் ப்ளேயிங் லெவனில் இல்லாதது பின்னடைவாக இருந்தது. பர்ன்ஸ், மலான் போன்ற பேட்ஸ்மேன்களை அஷ்வின் கொஞ்சமேனும் சிரமமாவது படுத்தியிருப்பார். அவரை பென்ச்சில் உட்கார வைத்ததால் அதற்கும் வழியில்லாமல் போனது.

லார்ட்ஸ் தோல்விக்கு பிறகு லீட்ஸில் 345 ரன்கள் லீடோடு கம்பீரமாக எழுந்து நிற்கிறது இங்கிலாந்து அணி. இன்னமும் டிக்ளேர் செய்யவில்லை. கடைசி இரண்டு விக்கெட்டுகள் ஆடும் வரை ஆடட்டும் என ரூட் நினைக்கலாம். இவ்வளவு பெரிய லீட் இந்தியாவுக்கு இமாலய சவால். அதற்கு மேல் இங்கிலாந்துக்கு ஒரு டார்கெட்டை வேறு செட் செய்ய வேண்டும். இரண்டாவது இன்னிங்ஸில் குறைந்தபட்சம் 500 ரன்களையாவது இந்தியா எடுத்தாக வேண்டும். தற்போதைய நிலைப்படி இது அசாத்தியத்திலும் அசாத்தியம். உருமாறிய ராகுல் டிராவிட்டும், லட்சுமணும் இன்று களமிறங்கினல் மட்டுமே தோல்வியைத் தடுப்பது சாத்தியம். குறைந்தபட்சமாக இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க முயற்சிக்கலாம்.

கிரிக்கெட்டில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற ஒற்றை பழமொழி மட்டுமே இந்தியாவின் இப்போதைய நம்பிக்கையாக இருக்கிறது.



source https://sports.vikatan.com/cricket/englands-joe-root-took-away-the-game-from-india-in-leeds-test

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக