Ad

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

`தக்காளி முதல் டிராகன் ஃப்ரூட் வரை!' - நடிகை சீதாவின் மாடித்தோட்ட அனுபவம் - நட்சத்திரத் தோட்டம் - 4

நம் வீடுகளில் மட்டுமல்ல; சினிமா, அரசியல் பிரபலங்கள் மத்தியிலும் வீட்டில் மாடித்தோட்டம் அமைக்கும் வழக்கம் இப்போது வளர்ந்து வருகிறது. அவர்களின் மாடித்தோட்டம் குறித்த தகவல்களைத் தருவதற்காகவும், அவர்களின் தோட்டத்துக்கே உங்களை அழைத்துச் செல்லவும்தான் இந்த நட்சத்திரத் தோட்டம் தொடர். இந்த முறை நடிகை சீதாவின் வீட்டுத்தோட்டம் பற்றிப் பார்க்கலாம்.

நடிகை சீதா

விவசாயம் செய்ய ஆர்வம் இருக்கிறது. ஆனால், விளைநிலம் இல்லையே எனக் கவலைப்படுபவர்களுக்குக் கைகொடுப்பதுதான் வீட்டுத்தோட்டம். அந்தவகையில் வீட்டில் தோட்டம் அமைத்து இயற்கை வழியில் விவசாயம் மேற்கொண்டு, நஞ்சில்லாத உணவை பலரும் உண்டு வருகின்றனர். அத்தகையோரில் ஒருவராக இணைந்திருக்கிறார் நடிகை சீதா.

நடிகை சீதா, தற்போது பிரபல மாடித்தோட்ட விவசாயி. வீட்டின் மொட்டை மாடியில் சிறிய அளவில் விவசாயமே பார்த்து வருகிறார். மாடியில் ஒரு கட்டத்தில் செடி வைக்க இடம் இல்லாமல் போகவே ஊரடங்கு காலத்தில், சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் உள்ள தனது மற்றொரு வீட்டிலும் சிறிய அளவில் விவசாயத்தை ஆரம்பித்திருக்கிறார். இந்தச் செடிகள் வைக்க வேண்டும், இதை வைக்கக் கூடாது என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல், நமக்கு எது நன்மை தருமோ அந்தச் செடிகள் எதுவானாலும் தேடித்தேடி வாங்கி வந்து வைத்திருக்கிறார்.

சீதாவின் தோட்டம்

சிறிய வயதிலிருந்தே விவசாயத்தில் இவருக்கு ஆர்வம் அதிகம். சினிமாவில் பிஸியாகி விட்டதால் அப்போது செயல்படுத்த முடியவில்லை. இப்போது அதிகப் படங்களில் நடிக்காமல் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்கிறார். அதனால், கிடைக்கும் ஓய்வு நேரங்களில் இணையதளத்தில் இயற்கை விவசாயம், மாடித்தோட்ட பராமரிப்பு தொடர்பாகப் பார்த்து, நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறார். அப்போதுதான் ரசாயன உர காய்கறிகளின் பிரச்னைகள் பற்றி தெரிய வந்திருக்கிறது. அதனால் இயற்கையான காய்கறிகளை உற்பத்தி செய்து சாப்பிடலாம் என்ற எண்ணம் உருவாகியிருக்கிறது. பெரிய அளவில் செய்ய நிலமில்லை, அதனால் இயற்கையாக வீட்டிலேயே உற்பத்தி செய்யலாம் என்ற எண்ணம் தோன்றவே உடனே களத்தில் இறங்கிவிட்டார். முதலில் சில செடிகளை நடவு செய்து அனுபவங்களைக் கற்றுக் கொண்டவர், பின்னாளில் தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், அவரை, புடலை, பாகற்காய், பிரண்டை, பீர்க்கங்காய், கேரட், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், வெள்ளரி, நெல்லி, காராமணி, தர்பூசணி, பச்சைமிளகாய், அத்தி, மா, சாத்துக்குடி, திராட்சை, கொய்யா, வாழை, பப்பாளி, வாட்டர் ஆப்பிள், டிராகன் ஃப்ரூட், கேரட், பீன்ஸ் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட காய்கறி, பழவகை மரங்களை வளர்த்திருக்கிறார். இதோடு பல வகையான கீரைகளும், பூச்செடிகளையும் வளர்த்திருக்கிறார். இயற்கை வளர்ச்சியூக்கி, பூச்சிவிரட்டிகளை இவரே தயாரித்துப் பயன்படுத்தியிருக்கிறார். மாவுப்பூச்சி தாக்குதல் இருந்தால் தண்ணீரைப் பீய்ச்சியடித்து சுத்தம் செய்கிறார். அதையும் மீறிப் பூச்சிகள் இருந்தால் வேப்பெண்ணெய், சோப்பு கரைசலைத் தண்ணீரில் கலந்து தெளித்துவிடுகிறார். மாடித்தோட்டத்துக்கு மண்புழு உரம், பஞ்சகவ்யாவை இயற்கை அங்காடியிலிருந்து வாங்கிப் பயன்படுத்திக் கொள்கிறார். மொட்டைமாடி முழுவதும் பசுமை போர்த்தியிருக்கிறது நடிகை சீதாவின் மாடித்தோட்டம்.

வார இறுதியிலும், விடுமுறை தினங்களிலும் ஈ.சி.ஆர் வீட்டுக்குக் குடும்பமாக வருவாராம், சீதா. காம்பவுண்டுக்கு உள்ளேயும் வெளியேயும் காலி இடம் இருந்ததால், அலங்காரச் செடிகள், பூச்செடிகளை மட்டுமே அதிகம் வளர்த்திருக்கிறார். இதுபோக தென்னை, மா, எலுமிச்சை, முருங்கை ஆகியவற்றை வளர்க்க ஆரம்பித்திருக்கிறார். இங்கே இருக்கும் நாட்கள் குறைவு என்பதால் குறைவான பரப்பில் இத்தகைய செடிகளை வளர்த்திருக்கிறார். காய்கறிச் செடிகள் வைத்தால் தினமும் பராமரிக்க வேண்டும் என்பதால் அவற்றை ஆரம்பத்தில் வளர்க்கவில்லை.

சீதாவின் தோட்டம்

Also Read: `இயற்கையா விளைஞ்ச காலிஃப்ளவரின் ருசியே தனி!' - காயத்ரி ஜெயராமனின் மாடித்தோட்ட அனுபவம் - 3

சாலிகிராம வீட்டின் மாடித்தோட்ட விளைச்சல் நன்றாக இருந்ததால் அங்கே கிடைக்கும் காய்கறி கீரைகளை இங்கே கொண்டுவந்து வளர்க்க ஆரம்பித்திருக்கிறார். கடந்த வருடம் கொரோனா காலகட்டத்தில் தனது மாடித்தோட்ட காய்கறிகளை மட்டுமே பல மாதங்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். அதன் பின்னர் ஈ.சி.ஆர் வீட்டிற்குக் குடிபெயர்ந்தவர், இங்கேயே பல மாதம் இருக்க வேண்டும் போலிருக்கிறது. அதனால் பெரிய அளவில் தோட்டம் அமைத்தால் என்ன என்று யோசித்திருக்கிறார்.

கத்திரி, வெண்டை, பச்சைமிளகாய், தக்காளி, கீரைகள், பல்வேறு மூலிகைகளை வளர்த்திருக்கிறார். காம்பவுண்டுக்கு வெளியே, மகிழம், பப்பாளி, வாழை, நெல்லி, சீத்தா, ஆரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வளர்கிறது. காம்பவுண்டுக்கு உள்ளே மாதுளை, மா உட்பட சில மரங்களும், நிறையப் பூச்செடிகளும் மூலிகைகளும் இருக்கின்றன. இவரது வீட்டில் உள்ள எலுமிச்சை மரத்தில் அதிகமான காய்கள் கிடைக்கிறது. கோவிட் நேரத்தில், எலுமிச்சையில் கிடைக்கும் `வைட்டமின் சி’ சத்து நல்ல பலன் தரும் என்பதால் தினமும் எலுமிச்சை ஜூஸ் தவறாமல் குடிக்கும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறார். தோட்டத்தில் வளரும் கற்பூரவள்ளி, துளசி, வெற்றிலை, திப்பிலி உள்ளிட்ட சில மூலிகைகளைப் பயன்படுத்தி கஷாயம் செய்தும் பயன்படுத்தி வருகிறார். மா மரத்திலும் இந்த வருடம் நல்ல விளைச்சல் எடுத்திருக்கிறார். முருங்கை, தென்னை, பல வகையான கீரைகள், பிரண்டை, கத்திரியெல்லாம் தொடர்ந்து அறுவடை செய்திருக்கிறார்.

ஒருமுறை விகடனுக்கு அளித்த பேட்டியில், ``சில காரணங்களால கொஞ்சம் சோர்வில் இருந்தப்போதான், மாடித்தோட்ட பராமரிப்புல இறங்கினேன். தொடர்ந்து ஆர்வம் அதிகரிக்கவே, இதுவே என்னோட வழக்கமான பணிகள்ல ஒண்ணா மாறிடுச்சு. இயற்கை விவசாயம் செய்யும் ஆர்வத்துல நிலத்தைத் தேர்வு செய்யுற வேலையிலும் கவனம் செலுத்துறேன். நம்மால முடிஞ்சவரை குறைந்தபட்சம் சில காய்கறிச் செடிகளையாச்சும் வீட்டுல வளர்க்கலாம். ஆரோக்கியமான காய்கறிகளுடன், மன நிறைவையும் பெறலாம்” என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார், மாடித்தோட்ட மங்கை நடிகை சீதா.



source https://www.vikatan.com/news/agriculture/actress-seetha-s-terrace-garden-experience-natchathira-thottam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக