Ad

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

சங்கட ஹர சதுர்த்தி: 16 வகை க்ஷணிகப் பிள்ளையாரும் அவை வழங்கும் பலன்களும்!

இன்று (25-8-2021) மஹா சங்கட ஹர சதுர்த்தி தினம். மாதம்தோறும் பௌர்ணமிக்குப் பிறகு வரும் நான்காவது நாளான சதுர்த்தி திதி, சங்கட ஹர சதுர்த்தி எனப்படும். ஆவணி, மாசி மாதத்தில் வருவதே மஹா சங்கட ஹர சதுர்த்தி எனப்படும். 'சங்கட' என்றால் துன்பம் 'ஹர' என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. இது தமிழில் தொல்லை நீக்கும் நாள் எனப்படுகிறது.
பிள்ளையார்

கணபதியின் 32 முக்கிய வடிவங்களில் சங்கட ஹர கணபதியும் ஒருவர். இவர் 'தொல்லை நீக்கியார்' என்று தமிழில் வணங்கப்படுகிறார். இவர் இளஞ்சிவப்பு வண்ணத்தில் நீல நிற ஆடை உடுத்தி செந்தாமரையில் வீற்றிருப்பார். மேல் வலது கரத்தில் அங்குசமும் கீழ் வலது கரம் வரமளிக்கும் விதமாகவும் காணப்படும். இடது மேல் கரத்தில் பாசம் இருக்கும். இடது கீழ் கரம் தன்னுடைய சக்தியான தேவியை அணைத்திருக்கும். சிவந்த நிறம் கொண்ட அந்த சக்தி நீல நிற உடை அணிந்து நீலோற்பல மலரை ஏந்தியிருப்பார்.

அடுத்த சதுர்த்தி விநாயகரின் ஜன்ம விழாவாக விநாயகர் சதுர்த்தியாக வருவது உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம். விநாயகர் சதுர்த்தியில் தொடங்கப்படும் சதுர்த்தி விரதம், அடுத்த ஆண்டு ஆவணி மஹா சங்கட ஹர சதுர்த்தி நாளில் முடிப்பது வழக்கம். ஓராண்டு சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் 1008 கணபதி ஹோமம் நடத்திய பலன்களைப் பெறுவார்கள் என்கின்றன சாஸ்திரங்கள்.

விநாயகர்

வீட்டில் விதவிதமாக பிள்ளையார் சிலைகள் இருந்தாலும் சங்கட ஹர சதுர்த்தி நாளில் க்ஷணிக பிள்ளையார் ஒன்றை உருவாக்கி வழிபட்டு அதை மறுநாள் நீர்நிலைகளில் சேர்த்துவிடுவது நலம் என்பார்கள். அதன்படி கீழ்க்கண்ட 16 விநாயகர்களை உருவாக்கலாம். அதற்குண்டான பலன்களையும் இங்கு காணலாம்.

மஞ்சள் பிள்ளையார் - சகல சௌபாக்கியமும் கிடைக்கும். குங்குமப் பிள்ளையார் - செவ்வாய் தோஷம் அகலும். புற்று மண் பிள்ளையார் - நோய்கள் அகலும். வெல்லப் பிள்ளையார் - இனிமையான வாழ்வு. உப்புப் பிள்ளையார் - எதிரிகளின் தொல்லை நீங்கும். வெண்ணெய் பிள்ளையார் - அச்சங்கள் நீங்கும். விபூதி பிள்ளையார் - ஞானமும் முக்தியும் கிட்டும். சந்தனப் பிள்ளையார் - சந்தானப் பேறு. சாணப் பிள்ளையார் - சகல தோஷ நிவர்த்தி. வாழைப் பழப் பிள்ளையார் - வம்ச பாதுகாப்பு. அரிசி மாவுப் பிள்ளையார் - கடன் நீங்கும். சர்க்கரைப் பிள்ளையார் - செல்வம் சேரும். மலரால் பிள்ளையார் - மாங்கல்ய பலம். அரச இலை பிள்ளையார் - வெற்றி தருவார். களிமண் பிள்ளையார் - காரிய ஸித்தி. தேன் கலந்த தினைப் பிள்ளையார் - உயர்ந்த வரன் அளிப்பார்.

வெற்றி பிள்ளையார்
மஹா சங்கட ஹர சதுர்த்தி நாளில் வீட்டிலேயோ வீட்டின் அருகில் உள்ள பிள்ளையாருக்கோ அபிஷேகம் செய்வது சிறப்பானப் பலன்களைத் தரும் என்பர். குறிப்பாக இந்த 21 மூலிகைகளால் விநாயகரை அர்ச்சிக்க குறிப்பிட்ட பலன் கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

Also Read: திருச்சி கோயில்கள் - 9 - ஊட்டத்தூர்: ராஜராஜ சோழனின் நோயைத் தீர்த்த அதிசயக் கோயிலின் சிறப்புகள்!

கடன் தீர – மாவிலை, இன்பம் பெறுக – வில்வம், இல்வாழ்க்கை சிறக்க – கரிசலாங்கண்ணி, கல்வியில் மேன்மை - இலந்தை இலை, சிக்கல்கள் தீர – ஊமத்தை, வசீகரம் பெற – நாயுருவி, துணிச்சல் பெற – கண்டங்கத்தரி, வெற்றி பெற – அரளி இலை, உயர்பதவி கிடைக்க – அரசு, திருமணத்தடை விலக – தவனம், எண்ணியவை ஈடேற – மரிக்கொழுந்து, செல்வச் செழிப்பு பெற – நெல்லி, குழந்தை வரம் பெற – மருதம், நோய் அகல – அகத்தி, சொந்த வீடு – ஜாதி மல்லி, தன்னம்பிக்கை பெற – துளசி, நீங்காத புகழ் பெற – மாதுளை, வம்ச விருத்தி – எருக்கு, சகல சௌபாக்கியம் பெற – அறுகம்புல், நீண்ட ஆயுள் – தேவதாரு, முக்தி – வன்னி.

கணநாதர்

எளிமையின் வடிவமான கணநாதரை இந்த நாளில் முழு விரதம் இருந்து காலையும் மாலையும் பூசிக்க நன்மைகள் யாவும் சேரும் என்பது ஆன்றோர் வாக்கு.

'ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம், க்ளௌம் கம், கணபதயே, வர வரத ஸர்வ ஜனம்மே வஸமாயை ஸ்வாஹா! என்ற கணபதியின் மூல மந்திரத்தை 21, 51, 108 என்று முடிந்த அளவுக்கு சொல்லி வேண்டினால் நிச்சயம் வீட்டில் சுபீட்சமும் அமைதியும் நிலவும் என்பது நம்பிக்கை. தும்பிக்கையானை நம்பிக்கையோடு வேண்டுவோம், கவலைகள் இன்றி வாழ்வோம்!

கணபதி

'தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே!'



source https://www.vikatan.com/spiritual/gods/sankatahara-chaturthi-viratham-special-16-types-of-lord-ganapathy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக