நம் வீடுகளில் மட்டுமல்ல; சினிமா, அரசியல் பிரபலங்கள் மத்தியிலும் வீட்டில் மாடித்தோட்டம் அமைக்கும் வழக்கம் இப்போது வளர்ந்து வருகிறது. அவர்களின் மாடித்தோட்டம் குறித்த தகவல்களைத் தருவதற்காகவும், அவர்களின் தோட்டத்துக்கே உங்களை அழைத்துச் செல்லவும்தான் இந்த நட்சத்திரத் தோட்டம் தொடர். இந்த முறை மதுரை முத்துவின் வீட்டுத்தோட்டம் பற்றிப் பார்க்கலாம்.
மதுரை முத்துவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. நீண்ட காலமாகச் சின்னத்திரையில் காமெடியனாக ரசிகர்களைச் சிரிக்க வைத்து வருபவர் அவர். அண்மையில் நிறைவடைந்த `குக் வித் கோமாளி' இரண்டாம் சீஸனிலும் அவர் போட்டியாளராகக் கலந்துகொண்டார். ஆனால், முதல் ஆளாக வெளியேறிய அவர் அதற்குப் பின் காமெடியனாக அனைத்து எபிசோடுகளிலும் தோன்றினார். ஊரடங்கு காலத்தில் தனது வீட்டுத்தோட்டத்தில் உள்ள தென்னை, மா, சப்போட்டா, மலர்கள், கோழி என அனைத்தையும் பராமரித்து வருகிறார்.
இவரது வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்குத் தோட்டத்தைக் காட்டும்போது கிட்டத்தட்ட சித்த வைத்திய நிபுணராகவே மாறிவிடுகிறார். ``என்ன இவர் சோற்றுக் கற்றாழையைப் பிடுங்கி கால் மணிநேரம் பேசுகிறாரே" என இவரின் நண்பர்கள் செல்லமாகக் கமென்ட் அடிப்பதும் உண்டு. அப்படி தனது வீட்டில் நுழைந்ததுமே வலதுபுறமாக இருக்கும் முதல் செடியாக சோற்றுக் கற்றாழையை வைத்திருக்கிறார். தன் தலை முடி ஆரோக்கியத்துக்கு இதைப் பயன்படுத்துவதோடு மற்றவர்களுக்கும் இதைப் பரிந்துரைக்கிறார். அதேபோலக் கருவேப்பிலையுடன் மற்ற மூலிகைகளையும் நடவு செய்திருக்கிறார்.
கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் மதுரை திருநகருக்கு குடிவந்திருக்கிறார் மதுரை முத்து. காலையில் எழுந்தவுடன் டைம்பாஸ்க்காக எதையாவது செய்ய நினைத்தவருக்கு, ஊர்ப்பக்கம் இருக்கும் செடிகளை நடவு செய்யலாமே என ஆசை வந்திருக்கிறது. அதன் முதற்கட்டமாகக் கொஞ்சமாகச் செடிகள் வளர்க்க ஆரம்பித்திருக்கிறார். இப்போது கொய்யாவிலேயே 6 வகையான ரகங்களை நடவு செய்து அசத்தியிருக்கிறார். வயிறு ஆரோக்கியத்துக்காகக் காலையில் கொய்யா இலைகள் இரண்டை உண்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
வீட்டில் நாட்டு முருங்கை மரம் ஒன்றையும் வைத்திருக்கிறார், இதைப் பார்க்கும் அவரின் நண்பர்கள், ``என்னங்க வீட்ல முருங்கை மரம் வைக்கக் கூடாது. வீட்டுக்கு ஆகாதுனு சொல்றாங்க, நீங்க வச்சிருக்கீங்க" என்று கேட்கிறார்கள். அதற்கு ``முருங்கை மரத்தோட தண்டைத் தவிர எல்லாத்தையும் சாப்பிட்டு ஆரோக்கியமா இருக்கேன். எனக்கு உடலுக்கு ஆரோக்கியம்தானே கொடுக்குது" என்று பதிலளிக்கிறார். சமையலறையில் வீணாகும் நீரை என்ன செய்வதென்று யோசித்தவருக்கு, வாழை மரம் வைக்கலாமே என ஐடியா தோன்ற, செவ்வாழை மரத்தை வைத்துவிட்டார். இப்போது நீரும் மிச்சம், வாழைப்பழங்களும் கிடைக்கின்றன. இதுபோக வீட்டைச் சுற்றிலும் 13 தென்னை மரங்கள், நார்த்தங்காய், எலுமிச்சைக் கன்றுகள், சீதா மரம், மாதுளை, துளசி, கற்பூரவல்லி, வில்வம் உள்ளிட்ட மூலிகைகள், கீரைகள், கறுங்கோழிகள் என அனைத்தையும் பராமரித்து வருகிறார்.
காலையில் எழுந்து செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சும்போதும், பராமரிப்பின்போதும் செடிகளுடன் பேசி உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறார். சில நேரங்களில் வீட்டுத்தோட்டத்தைப் பராமரிக்கும்போது நகைச்சுவைகளும் இவரின் மனதில் உதிக்கிறதாம். ஒரு செடியை மேலோட்டமாகப் பார்க்கும்போது, வெறும் செடியாகத்தான் தெரிகிறது. ஆனால், அவற்றின் குணங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும்போது ஆச்சர்யத்தையும் இவருக்குக் கொடுக்கிறது.
இவரது வீட்டுத்தோட்டத்தில் வைத்துள்ள கருவேப்பிலை செடியைப் பற்றி பசுமை விகடன் பேட்டியில் பேசும்போது, ``இது பார்க்க வெறும் இலைதான். சாப்பாட்டை சாப்பிட்டுட்டு இதைக் கீழே போட்டுடுறாங்க. ஆனா, இது கண்களுக்கும் உடலுக்கும் ரொம்ப சத்தான இலை. கிராமத்துல புதுசா கல்யாணம் ஆகி வந்த மருமகள்கிட்ட வீட்ல இருக்க பெரியவங்க கருவேப்பிலை சேர்த்துக்க சீக்கிரமே குழந்தை பிறக்கும்னு சொல்வாங்க. இதைப் பத்தி இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம். இப்படி ஒவ்வொரு மூலிகைக்குள்ளும் ஒரு மகத்துவம் இருக்கு.
Also Read: `4 செடில ஆரம்பிச்சது; இப்ப 40 செடிகள்!' - மனோபாலாவின் மாடித்தோட்ட ரவுண்டப் - நட்சத்திரத் தோட்டம் - 1
இயற்கையா நாம காய்கறிகள், பழங்கள்னு உற்பத்தி செய்து சாப்பிடுறப்போ அதுல இருக்கிற சுவையே தனிதான். என்னதான் டிவிகள்ல காமெடி பண்ணிக்கிட்டு வாழ்க்கை ஓடினாலும், இயற்கையோட இணைஞ்சு வாழுற வாழ்க்கைதான் மகத்துவமானது. பார்க்கலாம்; எதிர்காலத்தில் விவசாயம் பண்ணணும்னு ஆசைதான். கடவுள் மனசு வச்சா விவசாயம் பண்ணிடலாம். எல்லோருக்கும் ஒண்ணு சொல்லணும். முடிஞ்ச வரைக்கும் விவசாயிகள்கிட்ட பொருளை நேரடியா வாங்கி சாப்பிடுங்க. அது அவங்களுக்கு உதவியா இருக்கும். கொரோனா இப்ப எல்லாத்தையும் இயற்கை பக்கம் திருப்பியிருக்கு. அதனால ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுங்க" என்று கோரிக்கை வைத்தார்.
விரைவில் விவசாயியாக வாழ்த்துகள்!
source https://www.vikatan.com/news/agriculture/comedian-madurai-muthu-s-home-garden-roundup-natchathira-thottam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக