Ad

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

மேற்கூரை சூரிய மின் உற்பத்தி: இலக்கு 40GW, அடைந்தது வெறும் 4.4GW; ஏன் திணறுகிறது இந்தியா?

2015-ம் ஆண்டு, மத்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம், 2022-ம் ஆண்டுக்குள் `100 ஜிகாவாட் சூரிய மின் உற்பத்தி' என்ற இலக்கை இந்தியா அடைந்துவிடும் என்று அறிவித்தது. அதில், 40 ஜிகாவாட் உற்பத்தியில் மேற்கூரை சூரிய மின்சார கட்டமைப்புகள் பங்கு வகிக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், 2017-ம் ஆண்டின் மார்ச் மாதக் கணக்குப்படி இந்தியா மேற்கூரை சூரிய மின் கட்டமைப்பில் 0.67 ஜிகாவாட் மட்டுமே உற்பத்தி செய்தது.

Solar panel

2016-ம் ஆண்டு, 2006-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு சட்டத்தில் சில திருத்தங்களை இந்திய அரசு செய்தது. அதன்படி, 5,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும் கட்டடங்களில், குறைந்தபட்சம் ஒரு சதவிகித அளவுக்காவது, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்காக இடம் ஒதுக்க வேண்டும் என்ற விதிகளும் கொண்டுவரப்பட்டன. ஆனால், அந்த விதிமுறைகளில், 2016-ம் ஆண்டுக்குப் பிறகு, புதிதாகக் கட்டப்படும் கட்டடங்களுக்குத்தான் இது பொருந்தும். இதுபோன்ற பெரிய கட்டுமானங்கள் முற்றிலுமாக முடிவதற்கு சராசரியாக மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம். அந்த நேரத்தில் இந்தியா எடுத்துக்கொண்ட இலக்கை அடைவதற்கான கால அவகாசமே முடிந்துவிடும்.

2014-ம் ஆண்டு, ஆற்றல் மற்றும் வளங்கள் மையம் (The Energy and Resources Institute) என்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய நகர்ப்புற கட்டுமானங்களில் மட்டுமே 124 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யும் அளவுக்கு சூரிய மின் கூரை அமைப்பதற்கான திறன் இருப்பதாகக் குறிப்பிட்டது. ஆனால், அதற்குப் பிறகு, 2015-ம் ஆண்டு 40 ஜிகாவாட்டுக்கு சூரிய மின் கூரை அமைப்பதாக இலக்கு நிர்ணயித்துவிட்டு அதில் 5 சதவிகித உற்பத்தியைக்கூட 2017-ம் ஆண்டில் அடையவில்லை. மத்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகள் படி, இந்தியா 2021-ம் ஆண்டு மார்ச் 31 வரை சூரிய மின் கூரை உற்பத்தியில் 4.4 ஜிகாவாட் அளவையே எட்டியுள்ளது. 2015-ம் ஆண்டின் இலக்கை அடைவதற்கு, கடந்த 6 ஆண்டுகளில் செயல்பட்டதைவிட 10 மடங்கு வேகமாக ஒரே ஆண்டில் செயல்பட்டாக வேண்டும். ஆகவே, அந்த இலக்கை அடைவது நடைமுறை சாத்தியமற்றது என்று சூரிய மின் உற்பத்தித் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Solar Energy/ Representational Image

Also Read: லித்தியம் பேட்டரி வணிகத்திலும் தொடரும் சீன ஆதிக்கம்; 2030 இலக்கை அடையுமா இந்தியா?

இந்தியாவில் சூரிய மின் உற்பத்தி திட்டங்களுக்காக பல தரிசு நிலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், 2022-ம் ஆண்டுக்கான மொத்த இலக்காக இருக்கும் 100 ஜிகாவாட் மின் உற்பத்தியையுமே மேற்கூரை சூரிய மின் கட்டமைப்பு மூலமாகவே மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இங்குள்ளன. அப்படியிருக்கையில், அதற்கான கொள்கைகளையும் தொழில்நுட்ப அணுகுமுறைகளையும் அரசு கொண்டு வர வேண்டும். மேற்கூரைகளில் சூரிய மின் உற்பத்தி மற்றும் சேமிப்பு ஆகிய இரண்டையும் செய்யும் வகையிலான திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்று ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர்.

ஆனால், அதற்கு ஆகும் செலவு இன்றைய சூழலில் மிகவும் அதிகம் என்பதோடு, மின் வாரியமும் அதற்கு உறுதுணையாக இருப்பதில்லை சூரிய மின் உற்பத்தியாளர்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவின் மேற்கூரை சூரிய மின் உற்பத்தியில் இருக்கும் சிக்கல்கள் குறித்துப் பேசிய சூரிய மின் சக்தி ஆய்வாளரான முனைவர் பழனியப்பன், ``மேற்கூரை சூரிய மின் கட்டமைப்பில் சேமிப்புக்கான வசதிகளையும் சேர்த்தால், அதற்கு ஆகும் செலவு இரண்டு மடங்கு ஆகிறது. இன்றளவும் பேட்டரிகள் பொருத்தி சேமிப்பது விலையுயர்ந்த கட்டமைப்பாகவே இருக்கிறது. அது மட்டுமன்றி, க்ரிட் மூலம் உற்பத்தியாகும் சூரிய மின்சாரத்தில் நேரடியாகப் பயன்படுத்துவது போக, மீதி உற்பத்தியை மின் வாரியத்துக்கு வழங்கும் வகையில், அமைப்பதுவே இன்றுள்ள நிலையில் சராசரி மக்களுக்கு தமிழ்நாட்டில் லாபகரமாக இல்லையே.

மேற்கூரை சூரிய மின் உற்பத்தி (Representational Image)

தமிழ்நாட்டில் மட்டுமன்றி, சூரிய மின் உற்பத்தியை மேற்கூரையில் மேற்கொள்வதை பல மாநிலங்களைச் சேர்ந்த மின் வாரியங்கள் ஊக்குவிப்பதில்லை. அது அவர்களுக்கு லாபகரமாக இல்லையென்று கருதுகின்றனர். திறந்தவெளியில், ஒன்று முதல் பத்து ஏக்கர் வரையிலாக அமைக்கும்போது அதன்மூலம் மின்வாரியத்துக்கு ஒரு குறிப்பிட்ட வருமானம் கிடைக்கிறது. ஆனால், மேற்கூரை கட்டமைப்பு அப்படியில்லை. ஆனால், மேற்கூரையில் சூரிய மின் உற்பத்தி செய்வதற்கும் 80 பைசா முதல் 1 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதற்கான திட்டங்களைக் கொண்டு வரவும் பேசி வருகின்றனர். ராஜஸ்தானில் தற்போது 80 பைசா நிர்ணயித்துள்ளனர்.

இப்படியிருக்கும்போது, தன்னுடைய கட்டடத்தில் தனக்கென தானே மின் உற்பத்தி செய்துகொள்வதில் இவ்வளவு சிக்கல்கள் இருப்பதால் பலரும் இதை மேற்கொள்ளவே அஞ்சுகின்றனர். அதோடு, அரசு மின் உற்பத்தி நிறுவனங்களும் இதன்மூலம் தனக்கு லாபம் கிடைக்காது என்று நினைத்து மக்களிடையே இதை ஊக்குவிப்பதைத் தவிர்க்கின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மேற்கூரை சூரிய மின் உற்பத்தியை அதிகமாகச் செய்ய வேண்டுமெனில், மாநில அரசு நெட் மீட்டரிங் முறையை முதலில் கொண்டு வர வேண்டும். அப்போதுதான், அதை மேற்கொள்ளும் மக்களும் இந்தத் துறையைச் சேர்ந்த தொழில் முனைவோரும் பயனடைவார்கள்.

Solar Energy

மேற்கூரை மின் கட்டமைப்பு மற்றும் சேமிப்பு இரண்டையுமே செய்வதை எளிதாக்க வேண்டுமெனில், அதற்கு சேமிப்புக்கான வசதிகளைச் செய்வதற்கு ஆகும் செலவுகள் குறைய வேண்டும். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு கிலோவாட் சூரிய மின் கட்டமைப்பு அமைக்க 4 முதல் 5 லட்சம் வரை செலவாகும். அது பின்னர், 2 லட்சம், 1.5 லட்சம், 1 லட்சம் என்று படிப்படியாகக் குறைந்து இன்று 40,000 முதல் 50,000 ரூபாய் என்ற நிலைக்கு வந்துள்ளது. இதேபோல், சேமிப்பு வசதிகளுக்கு ஆகும் செலவும் குறையும்போதுதான் அது அனைவருக்கும் பயனுள்ளதாக மாறும்" என்று கூறினார்.

தரிசு நிலங்களில் திறந்தவெளி சூரிய மின் உற்பத்தி செய்வது கடந்த சில ஆண்டுகளில் பெருகியுள்ளது. இதன்மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை அதிகப்படுத்த முடிந்தாலும், பெருமளவிலான நிலப்பகுதியை இது எடுத்துக் கொள்கிறது. அந்த நிலங்களின் பல்லுயிரிய வளமும் இதனால் பாதிக்கப்படுகிறது. சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனப் பகுதியில் சூரிய மின் உற்பத்தி மேற்கொள்வதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது. அந்தத் திட்டம், அப்பகுதியில் அமைந்துள்ள, அழியும் ஆபத்திலுள்ள கான மயில்களின் வாழ்விடத்தை அழிக்கக்கூடிய அபாயம் இருப்பதால், சூழலியல் மற்றும் காட்டுயிர் ஆர்வலர்கள் அதைக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

திறந்தவெளி சூரிய மின்சார உற்பத்தி

Also Read: கான மயில்களை ஆபத்தில் தள்ளும் இந்தியாவின் பசுமை திட்டம்; அழியும் உயிர்களைப் பற்றி யோசிக்குமா அரசு?

இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்த்து, அதீத நிலங்களைக் கிரகித்துக் கொள்ளாமல் ஆரோக்கியமான முறையில் சூரிய மின் உற்பத்தியை மேற்கொள்வதில் மேற்கூரை சூரிய மின் உற்பத்தி கட்டமைப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்திய அரசாங்கமும் மாநில அரசுகளும் அதை எளிமைப்படுத்தி, அனைவரும் பலனடையும் வகையில் மாற்றியமைப்பதன் மூலம், இதைப் பரவலாகக் கொண்டு சேர்க்க முடியும். அதற்கான முயற்சிகளைத் தமிழ்நாட்டின் தற்போதைய அரசு எடுக்குமா?

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo



source https://www.vikatan.com/government-and-politics/environment/why-is-india-struggling-to-achieve-the-target-of-100-gw-solar-power-by-2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக