Ad

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

தமிழ்நாடு பட்ஜெட் 2021: Live Updates: தமிழக அரசின் முதல் காகிதமில்லா பட்ஜெட்; இன்று தாக்கல் செய்கிறார் பி.டி.ஆர்!

முதல் காகிதமில்லா பட்ஜெட்

நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நடப்பு 2021-22-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை சென்னை வாலாஜா சாலையிலுள்ள கலைவாணர் அரங்கத்தில் தாக்கல் செய்கிறார்.

தயார் நிலையில் கலைவாணர் அரங்கம்

வரலாற்றில் முதல்முறையாக `மத்திய பட்ஜெட் 2021-2022' காகிதமில்லாத பட்ஜெட்டாக தாக்கல் ஆனது. இதன் காரணமாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் `பஹி காட்டா’ எனப்படும் கணக்கு லெட்ஜர்கள், அதாவது வழக்கான பட்ஜெட் ஆவணங்களுக்குப் பதிலாக `டேப்லெட்டு'டன் பட்ஜெட் அமர்வுக்கு வந்திருந்தார். அதே போன்றொரு `காகிதமில்லாத டிஜிட்டல் பட்ஜெட்'டைத்தான் தமிழக அரசும் தற்போது முன்னெடுத்திருக்கிறது. இதற்கான லேப்டாப் மற்றும் தொழில்நுட்ப ரீதியான அமைப்புகள் கலைவாணர் அரங்கத்தில் பொருத்தப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றன.

எப்படி இருக்கும் இந்த பட்ஜெட்?

இந்த பட்ஜெட் ஏழு மாதங்களுக்கான பட்ஜெட் என்பதால், இது ஒரு திருத்தப்பட்ட பட்ஜெட் அறிக்கையாகவே இருக்கும் என நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தபோதும், இதை பற்றி குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். அதனால், 2022-ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் பட்ஜெட்தான், தற்போதைய அரசின் முழுமையான பட்ஜெட்டாக இருக்கும் என்பது தெரிகிறது.

Also Read: 10 ஆண்டுகளாக `வெற்றிநடைபோடாத தமிழகம்' - வெள்ளை அறிக்கை சொல்லும் பகீர் உண்மைகள்!

இந்தியாவின் பொருளாதாரமும், தமிழ்நாட்டின் நிதி நிலைமையும் மிகவும் மோசமாக உள்ள நிலையில் தாக்கல் ஆகும் பட்ஜெட் என்பதால், அரசியல் வாக்குறுதிகள் மற்றும் மற்ற நலத்திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனச் சொல்லப்படுகிறது. தமிழகத்தின் நிதித் தேவைக்காக மாநில அரசு ஏற்கெனவே கடன் வாங்கி சமாளித்துக் கொண்டிருக்கும் நிலையில், பட்ஜெட் அறிவிப்புகளில் ஒதுக்கப்படும் நிதிக்கான தேவையை தமிழக அரசு எப்படி கையாளப் போகிறது, வருமானத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் என்ன என்பதெல்லாம் இந்த திருத்த பட்ஜெட்டில் தெளிவாகச் சொல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், தமிழ்நாட்டின் நிதி நிலைமை மோசமாக இருப்பதாக வெள்ளை அறிக்கை மூலம் தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில் அதை சரிசெய்ய வரி வருவாயை கூட்டவும் திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் தொடர்பான அனைத்து அப்டேட்களுக்கும் இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள். இந்த பட்ஜெட் குறித்த உங்கள் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.



source https://www.vikatan.com/business/news/tamilnadu-budget-2021-22-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக