Ad

புதன், 25 ஆகஸ்ட், 2021

லஞ்சம்: `வாரிசு சான்றிதழுக்கு ரூ.2,000; பட்டா மாற்ற ரூ.20,000’ - அடுத்தடுத்து சிக்கிய வி.ஏ.ஓ-க்கள்

வாரிசு சான்றிதழ் தருவதற்கு விழுப்புரம் மாவட்டம், நவமால் காப்பேர் கிராமத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் சப்ராபீபி 2000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சஸ்பென்ட் செய்யப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஓய்வதற்குள் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் கிராம நிர்வாக அலுவலராக இருந்த ராஜி (59) என்ற நபர், பட்டா மாறுதல் செய்வதற்காக 20,000 ரூபாய் லஞ்சம் பெற்றதால், லஞ்ச ஒழிப்பு துறையால் கைது செய்யப்படுள்ளார். இன்னும் 6 மாதத்தில் பணி ஓய்வு பெறும் நிலையில் இருந்துள்ளார் இந்த அதிகாரி.

தைலாபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்

வி.ஏ.ஓ லஞ்சம் பெற்ற இச்சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அடுத்தடுத்து கிராம நிர்வாக அலுவலர்கள் லஞ்சம் பெற்று சிக்கியுள்ள சம்பவம் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.

Also Read: விழுப்புரம்: வாரிசுச் சான்றிதழுக்கு ரூ.2,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ! - வைரலான வீடியோ மூலம் விசாரணை

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் பேசினோம். ``தைலாபுரத்தை சேர்ந்தவர் உத்ரகுமார்(30), இவரது தந்தை ஏழுமலை பெயரிலும், அண்ணன் முருகன் என்பவரது பெயரிலும் பல வருடங்களுக்கு முன்பு 4 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளனர். ஏழுமலை படிக்காதவர் என்பதால், பட்டா பெயர் மாற்றம் செய்யாமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், பட்டா மாற்றம் செய்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார் உத்ரகுமார்

கிராமம் என்பதால் வி.ஏ.ஓ கவனத்துக்கு அது வந்துள்ளது. அதனால், வி.ஏ.ஓ ராஜியை நாடியுள்ளனர். பட்டா மாற்ற ஒரு பெயருக்கு 10,000 ரூபாய் வீதம் 20,000 ரூபாய் தரவேண்டும் என கேட்டுள்ளார் வி.ஏ.ஓ ராஜி. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர், எங்கள் துறையை அணுகினார். எங்கள் துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய நோட்டுகள் 20,000 ரூபாயை கொடுத்து அனுப்பினோம். உத்திரகுமார் தைலாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கே நேரில் சென்று பட்டா மாறுதல் பற்றி கேட்டுள்ளார். கேட்ட காசு எங்கே? என வி.ஏ.ஓ கேட்க, ரசாயனம் தடவிய 20,000 ரூபாயை கொடுத்துள்ளார் உத்திரகுமார். அதை பெற்றதும் தன் பேன்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட வி.ஏ.ஓ ராஜி

அடுத்ததாக, நாங்கள் சென்று விசாரித்த போதும் உண்மையை ஒப்புக்கொண்டார். லஞ்சமாக பெற்ற தொகையை சோதித்து பார்த்த போதும் உறுதியானது. அதை தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் காண்பித்து கைது செய்துள்ளோம்" என்றனர்.

Also Read: ஒரு சிப்பம் நெல் மூட்டைக்கு ரூ.50! - ரூ.32,800 லஞ்சமாக கேட்ட அதிகாரியை சிக்க வைத்த விவசாயிகள்!

விழுப்புரம் மாவட்டத்தில், வி.ஏ.ஓ இருவர் அடுத்தடுத்து லஞ்சம் பெற்று சர்ச்சையில் சிக்கியுள்ள சம்பவம் மாவட்டத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.



source https://www.vikatan.com/news/crime/village-administration-officer-arrested-for-accepting-bribe-of-rs-20000

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக